கோ 2



பிரகாஷ்ராஜுக்கும் பாபிசிம்ஹாவுக்கும் செம ஃபைட்!

தமிழ் சினிமாவின் வழக்கமான திசைகளிலிருந்து கொஞ்சம் வெளியே வரணும்னு தோணுச்சு. அதான் ஆக்‌ஷன், பொலிட்டிகல் என்டர்டெயினரா ‘கோ 2’வில் புறப்பட்டோம். ஏற்கனவே, ‘கோ’ வெற்றி பெற்ற படம். அந்தப் பெயரோடு இணைந்து வரும்போது எனக்கு இயல்பாவே பொறுப்பு கூடிவிடுகிறது. ‘கோ 2’, கோவோட தொடர்ச்சி இல்லை.

ஆனா, நிறைய ஒற்றுமைகள் இருக்கு. இதோ ஆரம்பித்து, கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிட்டோம்!’’ - நிதானமாகப் பேசுகிறார் டைரக்டர் சரத். ‘பில்லா 2’வின் பின்னணியில் இருந்தவர். இயக்குநராக முதல் அறிமுகம்.

‘‘தொடர்ச்சி இல்லைன்னா இது ஏன் ‘கோ 2’?’’‘‘ ‘கோ’வில் பிரகாஷ்ராஜ் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவார். ‘கோ 2’வில் அவர் முதல்வராகி விடுவார். அப்புறம் ஒரு சம்பவம் நடக்கும். அதற்குப் பிறகு மாறக்கூடிய, பரபரப்பான சூழ்நிலைகள்தான் படமே. நிச்சயம் ‘கோ’வின் தொடர்ச்சியில்லை. ‘கோ’வின் தொடர்ச்சியாக நீங்க பார்க்க வந்தாலும், ‘கோ 2’வாக பார்க்க வந்தாலும் உங்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு. இன்னும் சொல்லப் போனால், உடனே அடுத்த கட்டமாக ‘கோ 3’ ஆரம்பிக்கக்கூட இதில் விஷயம் இருக்கு.

பரபரப்பில் இருக்கும் அதிகாரிகள், அதிகாரம் மிக்க முதல்வர், பதில் சொல்லி ஆகவேண்டிய பொறுப்பில் இருக்கும் பிரகாஷ்ராஜ் என வாழ்க்கையின், அரசியல் முகங்களின் அத்தனை நிதர்சனங்களையும், ஆசாபாசங்களையும், உறுத்தும் நிஜங்களையும் ‘கோ 2’ முன்வைக்கும். இருக்கையின் நுனியில் தவிக்கவிடும் சஸ்பென்ஸும் உண்டு. வாழ்க்கையின் எல்லா முகங்களையும் முரண்களையும் எட்டி நின்று ரசிக்கிற பக்குவம் உங்களுக்கு இருக்குமானால், இது உங்களுக்கான படமும் கூட!’’

‘‘ ‘கோ’வில் ஜீவா, இதில் பாபி சிம்ஹா... எப்படியிருக்கார்?’’‘‘அருமை. இவ்வளவு சின்ன வயதில் தேசிய விருதை கையில் வச்சுக்கிட்டு நிக்கிறாரே... சும்மாவா? சாதாரணமா கிடைக்கிறதா அது? எல்லா மொழிகளிலும் ஊடுருவிப் பார்த்து எடுக்கிற விருதாச்சே!

அவர் இதில் ரிப்போர்ட்டரா வர்றார். அவரே சொன்ன மாதிரி, நிச்சயம் இது லைஃப்டைம் கேரக்டர். அவருடைய படங்களிலிருந்து இன்னும் விலகி இருக்கிற புது கேரக்டர். கதையைச் சொன்னதுமே உடனே சம்மதம்னு கால்ஷீட்டை முறைப்படுத்திக் கொடுத்திட்டார்.

படத்தின் இயல்பு நிலை கெடாமல் உழைத்திருக்கிறார். ஒரு ஹீரோவா நல்ல கம்பீரமான ரோல். அவரும் பிரகாஷ்ராஜும் சந்திக்கிற காட்சிகள் எல்லாம் இருக்கே... சும்மா சொல்லலை, அதெல்லாம் ட்ரீட். எதையும் வலிந்து செய்யவில்லை. உயிரோட்டமான கதையின் மூலம் நடப்பு உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கோம்.’’‘‘பிரகாஷ்ராஜை ப்ராஜெக்ட்டுக்குள் கொண்டு வருவது கஷ்டமாச்சே..?’’

‘‘கதையைச் சொன்னோம். இதெல்லாம் என் டேட்ஸ்னு பதிலுக்குச் சொன்னார். முன்னாடியே ஸ்க்ரிப்ட், டயலாக் எல்லாத்தையும் படிச்சு உள்வாங்கிட்டார். இப்ப ஷாட்டில் பார்த்தா, இயல்பா அவரே பேசுற மாதிரி ஸ்டைலில் பின்றார்.

அவருக்கும் சிம்ஹாவுக்கும் நடிப்புல செம ஃபைட். ஒரு டைரக்டரா ரெண்டு நல்ல நடிகர்களின் முழுப் பரிமாணத்தை அப்படியே எடுத்துப் போய் காட்றது நம்ம கடமை. இது பொலிட்டிகல் த்ரில்லர் என்பதன் அச்சு அசலான உருவாக்கம். உடனே, நீங்க நினைக்கிற மாதிரி கேங் வார் எல்லாம் கிடையாது. சிம்ஹா ஒற்றை ஆளாய், சிலரின் முகங்களை கிழிக்கிற இடமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.

‘அடடா’ன்னு கை தட்டிட்டு மட்டும் போயிட முடியாது. ‘ஆமா, இப்படி ஒரு விஷயம் இருக்குல்ல... இது எப்படி நமக்குத் தெரியாமப் போச்சு... இப்படி பண்ணியிருக்கலாமே’ன்னு யோசிக்கிற விஷயம்தான். இப்படி ஒரு இடத்துல இந்த மாதிரி ஒரு கதை புறப்படுமான்னு நீங்களே யோசிச்சு நிக்கணும்!’’‘‘நிக்கி கல்ராணி இதிலும்...’’

‘‘இப்ப அவங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்கு. தமிழ் பேசத் தெரியும். அதனால் சட்டுன்னு கதைக்குள்ளே இறங்கி நின்னுடுறாங்க. ‘டார்லிங்’கில் அவங்க இடம் அருமையா இருந்தது இல்லையா. இதிலும் அப்படித்தான். வேகமும், சிரிப்பும், நடிப்புமே அவங்க ஸ்பெஷல். லியோன் ேஜம்ஸ்னு ஒரு புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தறேன். அனிருத்திடம் இருந்தவர். பக்காவான இசை இளைஞன்.

நா.முத்துக்குமார் பாடல்களுக்கு புது கியூட் இசையை கொடுத்திருக்கார். புதுசா டைரக்டர் ஆகணும்னா அவங்க நேரடியா எல்ரெட் குமார் சார்கிட்டே வந்தா நல்லது. கதை கேட்டு திருப்தி அடைந்தவர், இந்தப் பக்கமே வராமல், வேண்டிய நடிகர்கள், வசதின்னு அத்தனையும் அள்ளித் தந்தார். அவருக்கு ஒரு நல்ல படம் தர்றது என்னையே நான் கௌரவப்படுத்திக்கொள்வதுதான்!’’

- நா.கதிர்வேலன்