விஜய் கொடுத்த தைரியம்!



ஆர்யா, விஷால், விஷ்ணு, விக்ராந்த் நாலு பேரும் போஸ் கொடுக்கும் போஸ்டரால் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது ‘தாக்க தாக்க’. ஹீரோக்கள் ஈகோ பார்க்காமல் ஒரு படத்துக்காக கூடுவதும், கெத்து காட்டாமல் கெஸ்ட் ரோல் பண்ணுவதும் பாலிவுட் கல்ச்சர். இங்கே எப்படி இதெல்லாம்..? ‘‘நாமளும் அந்த லெவலுக்குப் போறோம் சார். இளம் தலைமுறைகிட்ட இம்மி அளவு கூட ஈகோ இல்லை’’ எனத் துவங்குகிறார் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், விக்ராந்தின் அண்ணனுமான சஞ்சீவ்.

‘‘ ‘பாண்டிய நாடு’ படத்துக்கு அப்புறம் ஒரு ஆக்‌ஷன் ஸ்டோரிதான் பண்ணணும்னு விக்ராந்த் நினைச்சார். அவருக்கு ஏத்த கதை இது. சென்னையில ரோட்டோர ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்ல சாப்பிடாதவங்க யாரும் இருக்க முடியாது. கிட்டத்தட்ட அதுவும் டாஸ்மாக் மாதிரி சமத்துவம் உலவுற இடம்தான். பெரிய பெரிய டிஸ்கஷன், உலக மகா டீலிங் எல்லாம் அங்க பேசி முடிப்பாங்க. கொலை, கொள்ளை ஸ்கெட்ச் எல்லாம் கூட போடுவாங்க. சாயந்திரம் தொடங்கி மிட் நைட் வரை அது ஒரு தனி உலகம்.

இன்னும் சினிமா அந்த உலகத்தை முழுசா காட்டலை. இந்தப் படத்துல விக்ராந்த் ஃபாஸ்ட் ஃபுட்ல வேலை செய்யிற சென்னைப் பையனா வர்றார். பொறந்ததில் இருந்து கடைசி வரை அவன் எப்படி போராடுறான்... எதுக்காகப் போராடுறான்... இதான் மையக்கரு. விக்ராந்த் என் தம்பி. அவனோட பலம், பலவீனம் எல்லாம் என்னை விட யாருக்குத் தெரிஞ்சுடும்? அவனோட எல்லா ப்ளஸ்களையும் சேர்த்து ஒரு ஆக்‌ஷன் கலவையா இந்தப் படத்தை உருவாக்கியிருக்கேன்!’’

‘‘ஒரு பாட்டுக்கு ஆர்யா, விஷால், விஷ்ணு..?’’‘‘ஆமா, நட்புக்கு முக்கியத்துவம் உள்ள கதை இது. அதுக்கு சப்போர்ட்டா ஒரு பாட்டை ப்ளான் பண்ணினோம். ஆர்யா, விஷ்ணு, விஷால் எல்லாருமே விக்ராந்த்துக்கு சி.சி.எல் கிரிக்கெட் டீம் ஃப்ரெண்ட்ஸ். அவங்களே வந்து நடிச்சா நல்லாயிருக்கும்னுதான் கேட்டோம். யோசிக்கவே இல்லை. ‘ஓகே... டேட் சொல்லு’ன்னு மூணு பேருமே வந்து நின்னாங்க. எந்த பந்தாவும் இல்லாம செம ஜாலியா நடிச்சுச் கொடுத்தாங்க!’’ ‘‘படத்துல மூணு ஹீரோயின்களாமே?’’

‘‘ஆமாம். ‘நாடோடிகள்’ அபிநயா, லீமா பாபு, பார்வதி நிர்பன். அபிநயா ஒரு முழுமையான ஹீரோயினா இதுல பெயர் வாங்குவாங்க. ‘மதராசப்பட்டினம்’ல ஆர்யாவோட தங்கையா நடிச்சவங்க லீமா பாபு. அவங்களும் அபிநயாவும் நர்ஸா வர்றாங்க. ரொமான்ஸ் போர்ஷன்ல பார்வதி நிர்பன். மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ். அவரை தமிழில் புதுசா இறக்குறோம். நானும் விக்ராந்தும் எப்படி அண்ணன் தம்பியோ அப்படி படத்தோட கேமராமேன் சுஜித்தும் எடிட்டர் ஜித்தும் சகோதரர்கள். வில்லன் ரோலில் சிரஞ்சீவியோட கஸின் ராகுல் பவர்ஃபுல் பர்ஃபார்மென்ஸ் காட்டியிருக்கார்!’’
‘‘விக்ராந்த் மாதிரி நீங்க நடிக்க வரலையா?’’

‘‘எனக்கு நடிப்பு வரலையே. ஆனா, சினிமா ஆசை விடல. ஒழுங்கா டிகிரி முடிச்சிட்டு விப்ரோவில் வேலைக்குப் போயிட்டிருந்தவன், அதை விட்டுட்டு இயக்குநர் சாமிகிட்ட சேர்ந்து வொர்க் பண்ணினேன். ஒன்றரை வருஷப் போராட்டத்துக்குப் பிறகு இயக்குநரா ஃபார்ம் ஆகிட்டேன்!’’‘‘உங்க பெரியப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அண்ணன் விஜய்... ரெண்டு பேரும் என்ன சொன்னாங்க?’’

‘‘நான் இந்தப் படத்தை தயாரிச்சு, இயக்க முதல் காரணமே விஜய் அண்ணன்தான். ஸ்கிரிப்ட்டை அவர்கிட்டதான் முதல்ல சொன்னேன். ‘நல்லா இருக்கு. ஆனா, நீ சொன்ன மாதிரி எடுத்துட முடியுமா’ன்னு கேட்டார். என் கான்ஃபிடன்ஸைப் பார்த்துட்டு, ‘சரி, படத்தை ஆரம்பிச்சுடு’ன்னு என்கரேஜ் பண்ணினார்.

அவர் கொடுத்த தைரியத்துலதான் ‘தமிழ்ப்படம்’  சிவாவோட அக்கா தாரா அருள்ராஜோட சேர்ந்து இந்தப் படத்தை தயாரிச்சிருக்கேன். தாணு சார் வெளியிடுறார்.  சென்சார் போறதுக்கு முன்னாடி விஜய் அண்ணாவுக்கு இந்தப் படத்தைக் காட்டினேன். ‘நல்லா பண்ணியிருக்கே... நீ ஜெயிப்பே’ன்னு சொல்லி என்னைக் கட்டிப் பிடிச்சு பாராட்டினார். பெரியப்பாவுக்கு இன்னும் படத்தைக் காட்டலை. சென்சார் முடிச்சதும் அவங்களுக்குக் காட்டுவேன்!’’

- மை.பாரதிராஜா