சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர் 12

யோகாவை ஒரு வாழ்க்கை முறையாகக் கொண்டு நீண்ட காலப் பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு யமம், நியமம் ஆகிய முன் தயாரிப்புகள் அவசியம். இவை ஓர் ஆழமான யோகா அனுபவத்திற்கான முதல் படிகள்.சூரிய நமஸ்காரப் பயிற்சிக்கும் இப்படி ‘வார்ம் அப்’ எனப்படும் முன்தயாரிப்புகள் தேவை. தேவை இருப்பின் இவற்றை ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும்.

இவை நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம், ஆளுக்கு ஆள் மாறலாம்; மாற வேண்டும். இப்படியான முன்தயாரிப்புகள்தான் சூரிய நமஸ்காரப் பயிற்சியை ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன. இப்படிச் செய்பவர்கள் சூரிய நமஸ்காரத்தின் சக்தியை உணர்வதோடு, பல பலன்களையும் பெறுகிறார்கள். இது அப்படியே அவர்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும்.  

அதே நேரம் சாஸ்திர, சம்பிரதாய முறைப்படி செய்பவர்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அவர்களுக்கு இயல்பாய் எல்லாம் கூடி, இது ஓர் ஆழமான அனுபவமாய் மாறி விடும். உடல், மூச்சு, மனம், ஆத்ம தொடர்பு எல்லாமே உயர்நிலையில் இருந்து, பயிற்சிக்கு வளம் கூட்டும். அவர்களின் உடல் எந்த நேரமும் பயிற்சிக்குத் தயாராக இருக்கும்.

நீண்ட நாள் பயிற்சி செய்வதால் மனமும் அந்த நேரம் வரும்போது ரெடியாகிவிடும். ஆகவே, செய்வதில் பிரச்னை இருக்காது. ஆனால் நீண்ட காலம் திரும்பத் திரும்ப செய்யும்போது, மனம் தடுமாறக்கூடும். ‘பலமுறை செய்ததுதானே’ என்று அலட்சியம் எழும். இப்படி மனம் சலனப்படாமல் இருக்க எதையாவது செய்ய வேண்டும். இளம் வயதில் செய்யாமல், புதியதாகச் செய்பவர்கள் இந்த நிலையை அடைவதற்கு நீண்ட நாள் பயிற்சி தேவைப்படலாம்.

சூரிய நமஸ்காரத்தைச் செய்பவர்கள், ஒவ்வொரு நாளும் இதைப் புது அனுபவமாக உணர்வதற்கு முன்தயாரிப்புகள் அவசியம். இப்படி உரிய முறையில் - சரியாக முன் தயாரிப்புகளோடு செய்வதற்கும், அவை இல்லாமல் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. குறிப்பாக காலையில் பலரும் உடல் இறுக்கத்தால் தவிப்பது இன்று இயல்பாகி விட்டது. உணவு, வாழ்க்கை முறை, மனநிலை, வேலைகள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். உங்கள் உடல் இறுக்கமாக இருந்தால், வார்ம் அப் என்பது உடலைத் தளர்த்துவதற்கான பயிற்சி என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப நீங்கள் பயிற்சியைத் தேர்வு செய்யலாம். சிறு சிறு அசைவுகளில் தொடங்கி முழு உடலையும் அப்பயிற்சியில் இணைத்து விட்டால், சூரிய நமஸ்காரம் எளிதாகி விடும். மூச்சும் நன்றாக இருக்கும்.

வார்ம் அப் என்பது உதாரணமாக இப்படி இருக்கலாம்... யோகா செய்யும் மேட் அல்லது துணிவிரிப்பின்மீது முன்னும் பின்னும் கைகளை வீசியபடி நடந்து, பிறகு இறுக்கமான பகுதிகளை மட்டும் அசைவுகள் மூலம் தளர்த்தி தயார்படுத்திக் கொள்ளலாம். அல்லது முதுகைத் தரையில் வைத்துப் படுத்து, உடலை இரு பக்கமும் முறுக்கி (twist) தளர்வைப் பெறலாம். அல்லது உடலின் பகுதிகளை ஒவ்வொன்றாக அசைவுகள் மூலம் தயார் செய்யலாம். இதற்குப் பல வகையான பயிற்சிகள் உள்ளன. இப்படியான தயாரிப்புக்கு சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். இப்படி உடலைத் தயார் செய்ததும் தேவையெனில் சிறிது நேரம் அமைதியாய் இருப்பது, மூச்சையும் மனதையும் இயல்பு நிலையில் வைக்க உதவும்.

இந்த நேரத்தில் அமைதியாக இருப்பது, பிற எண்ணங்கள் மற்றும் உணர்வுகளிலிருந்து விடுபட்டு சூரிய நமஸ்காரத்தோடு ஆத்மார்த்தமாக இணைய உதவும். இப்படித் தயாராவது உங்களை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லும். புதுப்புது உணர்வுகள் வரலாம்; நேரம் என்கிற பிரக்ஞை இல்லாமல், சுயத்தை மறக்கும் ஒரு நிலையும் சிலருக்கு ஏற்படலாம். இப்படியான பயணத்தில் பெரும் சக்தியும், பேரானந்தமும் கூட சாத்தியம். சிலருக்கு பயிற்சிக்குப் பின்னர் புதுப்புது சிந்தனைகள் வரலாம்; பேரமைதி ஏற்படலாம்.

நம்பிக்கை உள்ளவர்களில் பலர், பாராயணங்களைக் (Chantings) கொண்டு, தங்களை முழு ஈடுபாட்டுத்தளத்திற்குக் கொண்டுபோய் விடுவார்கள். அதிலிருந்து அவர்கள் செய்யும் எதுவும் தரமானதாக அமையும்; சிலர் தியானம் போல் பயிற்சிகளைச் செய்வார்கள். ஆனால் அதற்காக இந்த முன்தயாரிப்புக்கே நீண்ட நேரம் செலவழிப்பது சரியல்ல. பள்ளி, கல்லூரி மற்றும் யோகப் பயிற்சி செய்யும் சில இடங்களில் மாணவர்களை எடுத்தவுடனேயே கண்களை மூடச்சொல்லி வேதனைப்படுத்துவது உற்சாகமூட்டாத விஷயம்.

எனது வகுப்பில் வார்ம் அப் பயிற்சிக்கு முக்கிய இடம் உண்டு. அது நேரத்திற்கு ஏற்ப மாறும்; குழுவுக்கு குழு மாறுபடும். எடுத்த உடனேயே ஆசனங்களைச் செய்வது பலருக்குக் கடினமாக இருக்கிறது. இறுக்கமாக இருக்கும் உடல்பகுதிகளை அசைவுகள் மூலம் தளர்த்திக்கொண்டால், ஆசனப் பயிற்சியின்போது பிரச்னை வராமல் இருக்கும். அதே நேரம் நன்றாகச் செய்யவும் முடியும். இந்த வார்ம் அப் பயிற்சிகள் எளிமையாக இருக்கும்போது, ‘நம்மால் எளிதாய் செய்ய முடிகிறதே’ என்ற எண்ணம் வரும். இதனால் சூரிய நமஸ்காரத்தை சுலபமாகச் செய்ய முடியும்.

இந்த வார்ம் அப் சில நேரம் நின்ற நிலையில் இருக்கும்; சில வகுப்புகளில் உட்கார்ந்த நிலையில் அமையும்; அசதியாக இருந்தால் படுத்த நிலையிலும் வார்ம் அப் பயிற்சி செய்யலாம். இது பயிற்சி செய்பவர்களையும், அவர்களின் உடல் மற்றும் மனநிலையைப் பொறுத்தும் தரப்பட வேண்டும். எந்த மாதிரி பயிற்சியைத் திட்டமிடுகிறோமோ, அதற்கு ஏற்பவும் வார்ம் அப் பயிற்சி அமையலாம். அதனால் யோகப் பயிற்சியும் மிக நன்றாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த ஜெர்மனி நாட்டு யோகா ஆசிரியர் ஜெசில்லா அவர்கள், மாலையில் பயிற்சி செய்ய வருபவர்களை படுக்கச் சொல்லி, அவர்கள் நன்கு ஓய்வு எடுத்த பின்பே உடல் அசைவுகள் மூலம் அவர்களுக்கு வார்ம் அப் பயிற்சி தருவார். அதன் பிறகுதான் ஆசனம் வரும். இதனால் அவர்கள் இயல்பு நிலைக்கு வரவும் முடியும்; அதன் மூலம் பயிற்சியை நன்கு செய்யவும் முடியும்.

‘நாங்கள் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல்தான் எல்லாம் செய்கிறோம், அதனால் என்ன?’ என்று சிலர் நினைக்கலாம். எல்லாவற்றையும் ஓடி ஓடிச் செய்வது போல் இதையும் செய்தால், அலைந்து திரியும் மனம் எப்படி இருக்கும்? அப்போது மூச்சு எப்படி இருக்கும்? மனமும் மூச்சும் இயல்பாய் இல்லாமல், எப்படி யோகப் பயிற்சி சாத்தியம்?

 எப்படி முன் தயாரிப்பு முக்கியமோ, அதேபோல் பயிற்சிக்குப்பின் என்ன செய்கிறோம் என்பதும் முக்கியம். உதாரணமாக, ஒருவர் தன்னை நன்றாகத் தயார் செய்து கொண்டு, சூரிய நமஸ்காரத்தைச் செய்து முடித்துவிட்டு, அடுத்த வினாடியே வேறு வேலையில் இறங்கி விட்டால் - மொபைலைத் தூக்கிக்கொண்டு தேவையற்ற உணர்வு நிலையில் விழுந்து விட்டால் - பலன் எப்படி இருக்கும்? அன்றைய நாள் எப்படி வளமானதாக மாறும்?

ஆகவேதான் பயிற்சி முடித்ததும் படுத்த நிலையில் சில நிமிடங்களாவது ஓய்வு எடுக்கச்சொல்வார்கள். பல ஆசிரியர்கள் மூச்சுப்பயிற்சி அல்லது தியானப்பயிற்சியைத் தருவார்கள். சிலர் வேறு ஆசனங்களைச் செய்ய வைப்பார்கள். சிலர் பிராணாயாமம் செய்யச் சொல்வார்கள். அல்லது அமைதியாய் இருந்து மூச்சைக் கவனிக்கச் சொல்வார்கள். சிலர் யோக நித்திரை போன்ற முழு உடல் ஓய்வை எடுக்கச் சொல்வார்கள். இப்படி பயிற்சிக்குப் பின்னும் செய்ய ஒரு பட்டியல் உண்டு.

இது ஏன் அவசியம்? அந்த நேரத்தில்தான் இயல்பு நிலைக்கு உடல் திரும்பும். பயிற்சியின் பலன்களை உடல் உணரத் தொடங்கும்; உள்வாங்கும். ஏதாவது பிரச்னைகள் என்றாலும் தெரிய வரும். பயிற்சியின் தாக்கம் எத்தகையது என்று தெரிந்துகொள்ள முடியும்.

இப்படி சூரிய நமஸ்காரப் பயிற்சி ஒரு வட்டத்தால் முழுமை அடைகிறது. துவக்கத்தில் முன் தயாரிப்பு, பிறகு பயிற்சி, அது முடித்ததும் ஓய்வு அல்லது பிராணாயாமம் அல்லது தியானப் பயிற்சி என்று இது அமைந்தால் மன நிறைவு ஏற்படும்; ஆரோக்கியம் கூடுதலாகும். ஒரு பயிற்சியானது இப்படி நிறைவாய் அமையும்போது, அது வாழ்வின் பிற பகுதிகளிலும் பிரதிபலிக்கும். கவனமாய் அந்த அனுபவத்தை பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லலாம்.
காலையில் பலரும் உடல் இறுக்கத்தால் தவிப்பது இன்று இயல்பாகி விட்டது. உணவு, வாழ்க்கை முறை, மனநிலை, வேலைகள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

(உயர்வோம்...)
படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: தன்யா

ஏயெம்