காற்றைக் கொண்டு நாற்று நடலாம்!



மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு

“இன்னிக்கு விவசாயம் கைவிடப்படுறதுக்கு முக்கியமான காரணம் பணியாட்கள் பற்றாக்குறை. நமக்கே நமக்கா சில விவசாயக் கருவிகளை உருவாக்கினாதான் வருங்காலத்துல விவசாயம் வாழும். அதுக்கான ஒரு முயற்சிதான் இந்த டிராக்டர்!’’ - கோரஸ் குரலில் அறிமுகம் தருகிறார்கள் பிரின்ஸ் பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் இறுதியாண்டு மாணவர்கள்.

 சென்னை அருகே பொன்மாரில் உள்ள இந்தக் கல்லூரி மாணவர்கள் சந்திரகுமார், ரகு, சந்தோஷ், முத்துமுருகன் என நான்கு பேர் கொண்ட குழு இப்படியொரு டிராக்டரை உருவாக்கியிருக்கிறது. டிராக்டர் மட்டுமல்ல... நாற்று நடும் இயந்திரமாகவும், மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டராகவும் கூட இதைப் பயன்படுத்தலாம் என்கிறது இந்தக் குழு!

‘‘இந்த டிராக்டர்ல 20 எச்.பி டாடா இண்டிகா எஞ்சினைத்தான் பயன்படுத்தியிருக்கோம். அதோட, 12 எச்.பி. ஜெனரேட்டரை இணைச்சிருக்கோம். அதுல உருவாகுற பவர் மூலமா 7 எச்.பி மோட்டார் ஒண்ணு ஓடுது. சைக்கிள் கடையில காற்றடிக்கிற மெஷின் இருக்கு பாருங்க... அதே முறையில இந்த மோட்டார் காற்றை கம்ப்ரஸ் பண்ணி ஒரு சிலிண்டர்ல சேகரிச்சு வைக்கும். இந்த காத்தோட அழுத்தத்துலதான் நாற்று நடுற வேலை நடக்குது!’’ என இதன் செய்முறையை எளிதாக விளக்குகிறார் சந்திரகுமார்.

‘‘காத்தோட அழுத்தத்தால இயங்குற ரெண்டு பிஸ்டன்கள் மண்ணுக்குள்ள போயிப் போயி வரும். அதுக்கு இடையில ஒரு டிரேயை பொருத்தி அதுல தான் நாற்றுகளை அடுக்கி வச்சிருப்போம். இந்தக் கருவி நாலு வரிசையா 250 மி.மீ இடைவெளி விட்டு நாற்றுகளை ஊன்றும். இந்த டிராக்டரின் பின்பக்க வீலுக்கு ஃபோர் நாட் செவன் வண்டியின் டயரைப் பயன்படுத்தியுள்ளோம். டிராக்டர் நகர்வதற்காக இந்த வீலில் ஒரு புள்ளி அமைத்து அதன் மூலம் டிஃபரன்ஷியலை இணைத்துள்ளோம்’’ என்கிறார் ரகு.

‘‘இப்போ பயன்பாட்டுல இருக்குற நாற்று நடும் இயந்திரங்கள் எல்லாம் வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதி செய்யப்படுறதுதான். அந்தக் கருவிகளால நாற்று நட மட்டுமே முடியும். ஆனா, எங்களோட இந்த டிராக்டரை வச்சி நாற்றும் நடலாம்... நிலத்தை உழவும் செய்யலாம்... மின்சாரம் இல்லாதப்போ ஜெனரேட்டராவும் பயன்படுத்திக்கலாம். முக்கியமா விவசாய நிலங்களில் பம்ப்செட்டை இயக்க இது ரொம்பப் பயன்படும்’’ என்று டிராக்டரின் பல்வேறு பயன்பாட்டை பட்டியலிடுகிறார்கள் சந்தோஷும் முத்து முருகனும்! விவசாய மக்களுக்கு உதவும் விதமாக மாணவர்கள் உழைத்திருப்பது அருமை. பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் தமிழகத்துக்கே பெருமை!

எம்.நாகமணி
படங்கள் : ஏ.டி. தமிழ்வாணன்