பல்கலைப் பார்வை!




வெள்ளிவிழா கொண்டாடும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்


கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, திருநெல்வேலியின் கொக்கிரக்குளம் மாவட்ட ஆட்சியக வளாகத்தில் தொடங்கப்பட்டது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். கஜேந்திர காட்கர் கமிஷன் பரிந்துரைபடி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தென்பகுதிக் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்க் கவிஞரான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரில் இயங்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் என 24 துறைகள் செயல்படுகின்றன.

உள்கட்டமைப்பு

திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் 520 ஏக்கர் பரப்பில் பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகம் மற்றும் பல்கலைக்கழகத் துறைகள் செயல்படுகின்றன. இது தவிர, 120 ஏக்கர் ஆழ்வார்குறிச்சியிலும், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பரம கல்யாணி கல்லூரியிலும், ராஜாக்கமங்கலத்தில் 70 ஏக்கர் பரப்பில் கடல் அறிவியல்துறை மற்றும் தொழில்நுட்ப மையமும் செயல்படுகின்றன. நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியாகத் திகழும் இந்தப் பல்கலைக் கழகம்  வெள்ளிவிழா கொண்டாட உள்ளது என்பது இனிப்பான செய்தி. இந்தப் பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய நூலகம் உள்ளது. அதில் துறைவாரியாக ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் உள்ளன.

துணை வேந்தர்கள்

வேதகிரி ஷண்முகசுந்தரம், க.ப.அறவாணன் உள்ளிட்ட பல அறிஞர்களைத் துணைவேந்தர்களாக கொண்டு செயல்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் டாக்டர் குமரகுரு. இவர் ‘குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி’யிடம் பேசியபோது, ‘‘தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதிய கவிஞர் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரியில் 2 ஆயிரத்து 100 மாணவ, மாணவியர் நேரடியாக கல்வி பயில்கின்றனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் நேரடியாக செயல்படும் 6 கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 64 கல்லூரிகள், 4 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மூலம் 74 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பெறுகிறார்கள்.

இந்தப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, ம.தி.தா இந்துக் கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி ஆகியவை 100 ஆண்டுகளைக் கடந்து உயர் கல்வி சேவை செய்கின்றன. உலகின் எதிர்கால சவால்களாக உள்ள பொருள் தொடர்பான ஆராய்ச்சிக் கல்விகளுக்கு இந்தப் பல்கலைக்கழகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. 

 VISION - 2023   என்ற தமிழக அரசின் குறிக்கோளில் மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி என்பது முக்கியமான அம்சமாக உள்ளது. அதை முன்னிலைப்படுத்தி புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி தருவதே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கம். 

இப்பல்கலைக்கழகத்தில் தற்போது 24 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பல்வேறு மத்திய நிறுவனங்களான யூஜிசி, டி.எஸ்.டி, டி.பி.டி போன்றவை நிதி உதவி செய்கின்றன. இதன் பலனாக பல்வேறு ஆராய்ச்சி வசதிகளும், மாணவர்களுக்கு ஆராய்ச்சி உதவித்தொகையும் கிடைக்கிறது.  இந்த ஆண்டு தாவரவியல், விலங்கியல், மற்றும் புதுப்பிக்கத்தக்க வல்ல ஆற்றல் ஆகிய மூன்று புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதுநிலைப் பாட வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

ஆழ்வார்குறிச்சியில் செயல்படும் பரம கல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வு மையம் மூலம் சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படுகிறது. தென்மாவட்டங்களில் உள்ள கடலோர மக்களின் வாழ்வாதார வழிகளை ஆராயும் வகையில் ராஜாக்கமங்கலத்தில் உள்ள கடல் சார் அறிவியல் ஆராய்ச்சி மைய கல்வி உதவுகிறது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் இந்தியாவில் செயல்படும் கல்வி சார் நிறுவனங்கள் மூலம் அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி கல்வி அளிக்கப்படுகிறது. எம்.பில், பிஎச்.டி படிக்க முழுநேர மற்றும் பகுதிநேர வசதி உள்ளது’’ என்கிறார் பெருமையுடன்.

பதிவாளர் தமிழ்ச்செல்வன் பேசுகையில், ‘‘கடந்த 1994 முதல் பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வி மேம்பாட்டிற்கான நிதி வழங்கி ஊக்குவிக்கிறது. மத்திய தொலைதூரக் கல்வி கவுன்சிலால் அங்கீகாரம் பெற்று தொலைதூரக் கல்வி பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் வேலை பார்த்துக்கொண்டே ஆயிரக்கணக்கானோர் பயின்று பட்டம் பெற்று பயனடைகின்றனர்.

சூழ்நிலை காரணமாக சிறைவாசிகளாகிப் போனவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வண்ணம் அவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்கும் வசதியை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. சிறைவாசி களை பட்டதாரிகளாக்கிய பெருமை சுந்தரனார் பல்கலைக்கழகத்தையே சேரும். பல சிறைக்கைதிகள் இப்பல்கலைக்கழக வகுப்புகளில் படித்து தேர்வு பட்டதாரி ஆகியுள்ளார்கள்.

பல்கலைக்கழகம் தனி இணையதள சேவை செய்கிறது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களுக்கு அதிக பலன் கிடைக்கிறது. இங்கே ஞானவாணி என்ற பெயரில் நடத்தப்படும் எஃப்.எம் ரேடியோ மூலம் தினமும் காலையும் கல்விச்சேவை அளிக்கப்படுகிறது.

இதுதவிர, பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பல்கலைக்கழக விளையாட்டுக் கல்வித்துறை நடத்தி வருகிறது’’ என்றவர், பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதோடு இந்த யுனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களையும் இணைத்து பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள், ஆராய்ச்சி நிகழ்வுகள், கருத்தரங்குகள் நடத்தவும் புதிய கட்டிடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஆன்லைனில் படிக்கலாம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் கல்விச் சேவையைத் தொடங்கி இருக்கிறது. www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள முகவரி வழியாகவோ அல்லது www.msu.online.orரீ என்ற இணையதள கல்வி சேவை முகவரி மூலமாகவோ யுனிவர்சிட்டியைத் தொடர்பு கொள்ளலாம். இதிலேயே சேர்க்கை, கட்டணம், வகுப்புகள், பாடங்கள் உள்ளிட்டவைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படும். இந்த சேவை மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும்  இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை கற்க முடியும்.

பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முதுகலை படிப்புகள் சில...

1. Department of Criminology - Criminal Justice
M. Sc. Criminology - Criminal Justice
M.A. Human Rights and Duties Education
P.G. Diploma in Human Rights and Duties Education
Certificate course in Human Rights and Duties Education
Foundation course in Human Rights and Duties Education  Ph.D.
2. Centre for Information Technology - Engineering
M.Tech Computer - Information Technology
M.Phil Information Technology, Ph.D.
3. Centre for Marine Science - Technology at Rajakkamangalam
M. Sc. Marine Biotechnology
M.Sc Microbiology
M. Phil. Marine Biotechnology
M.Phil Microbial Technology
M.Phil Coastal Aquaculture
4. Sri Paramakalyani Centre for Environmental Sciences (SPKCES) at Alwarkurichi
M.Sc. Environmental BioTechnology
M.Sc. Nano Science
5. Department of Biotechnology
M.Sc. Biotechnology
M.Phil Biotechnology
P.G. Diploma in Immuno Technology, Ph.D.
6. Department of Statistics
M.Sc. Statistics with Computer Applications
M.Phil. Statistics
7. Centre for Geo Technology
M.Sc. Applied GeoPhysics
M.Phil. Geo Marine Technology,  Ph.D.
8. Department of Pharmaceutical Chemistry
M.Sc. Pharmaceutical Chemistry

வ.ஜெகதீஸ்
படங்கள்: மா.கண்ணன்