நம்பிக்கையும் பெருமிதமும்!



பவர்கட் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் ஈரோடு, மகாராஜா பொறியியல் கல்லூரி மாணவிகளின் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பம்பு செட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அவர்களது கண்டுபிடிப்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். - ஜி.கே.கணபதி, மதுரை.

ஆசியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த பத்து கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் சென்னை ஐ.ஐ.டிக்கு இடம் கிடைத்திருப்பது
பெருமையான விஷயம்தான்.
- எஸ்.குணசுந்தரி, விழுப்புரம்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயதான சிவானந்த், 93 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று சிறப்பு அனுமதியுடன் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதி, வெற்றி பெற்று சாதித்துள்ளதை படித்து ஆச்சரியமடைந்தேன். இயற்பியல் துறையில் வருங்காலத்தில் விஞ்ஞானியாக வேண்டும் என்ற இவரது ஆசை நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.
- பி.கே.இஸ்மாயில், நாகை.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவல நிலையை கச்சிதமான படம் பிடித்துக் காட்டியது இடைநிற்றல் பற்றிய கட்டுரை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. அந்த கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இடைநிற்றலை இல்லாது ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ந.சிவகாமி, கும்பகோணம்.

மாநகராட்சிப் பள்ளிகள் பற்றிய தவறான கற்பிதங்களை தகர்த்து வீசியிருக்கிறார் அனுசுயா. +2 தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் அளவில் மூன்றாவது இடம் பிடித்து சாதித்துள்ளதோடு மருத்துவக்
கல்லூரியையும் எட்டிப் பிடித்திருப்பது நம்பிக்கையையும், பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது.
- ஜெ.முருகதாஸ், கன்னியாகுமரி.

‘வேலைக்கு வெல்கம்’ பகுதி, என்னைப் போன்ற பல இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. நேர்முகத்தேர்வு பற்றிய பயத்தை அடியோடு ஒழித்து, நிதானமாக அணுக வழிகாட்டியுள்ளது.
- டி.ரேவதிகுமார், திருநெல்வேலி.

வருவாய்த்துறை அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவது மாதிரி ஒரு சிரமமான வேலை எதுவும் கிடையாது. புறக்கணிப்பு, அவமானமான பேச்சு, கேலி என பல அனுபவங்களைச் சந்திக்க நேரிடும். ‘குங்குமச்சிமிழ்’ சான்றிதழ் பெறுவதற்கான கச்சிதமான வழிகளைக் காட்டியிருக்கிறது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது முதல் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது வரை தெளிவாக குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

- டி.மலர்மதி, மதுரை.