பல்கலைப் பார்வை



கோவைக்கு பெருமை சேர்க்கும் பாரதியார் பல்கலைக்கழகம்

ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் 1804ம் ஆண்டு உருவானது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் முதுநிலை கல்வி மையம் கோவை - மருதமலை சாலையில் செயல்பட்டு வந்தது. இங்கு கல்வி மையம் இருந்தாலும் விடைத்தாள் திருத்துவதில் இருந்து அனைத்து நடவடிக்கைகளும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடனே நடந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் கோவை கல்வி மையத்திற்கும் இடையே அதிக தொலைவு  இருந்ததால் இம்மையத்தில் படிக்கும் கல்வியாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, கோவை மாவட்டத்திற்கென தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என அப்போதைய கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  இக்கோரிக்கையை ஏற்று, மாணவ, மாணவி களின் சிரமங்களைக் குறைக்க கோவையில் ‘பாரதியார்’ பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க ஆவன செய்தது தமிழக அரசு.

கோவை - மருதமலை சாலை வடவள்ளியில் கல்வீரம்பாளையம் கிராமம், சோமையம்பாளையம் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைக்க  சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ‘பாரதியார் பல்கலைக்கழகம்’ அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1982ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் துவக்கிவைக்கப்பட்டது. ஆரம்பத்தில், கலை, அறிவியல் படிப்புடன், சட்டப்படிப்புகள், பொறியியல் படிப்புகள் இங்கு கற்பிக்கப்பட்டு வந்தன. அதன்பின்னர், குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது. அதேபோல், அண்ணா பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டு பொறியியல் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது.

இன்றைய நிலையில் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களின் கீழ் ஏராளமான உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களுள் குறிப்பிடத்தகுந்த பல சிறப்புகளுடன் தரமான பல்கலைக்கழகமாக கோவை பாரதியார் பல்கலைக்
கழகம் உள்ளது.

தஉறுப்புக் கல்லூரிகள் பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில்  111 உறுப்பு கல்லூரிகள், 26 ஆராய்ச்சி மையங்கள், 6 அரசு கல்லூரிகள், 16 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 83 சுயநிதிக் கல்லூரிகள் செயல்படுகின்றன.  மொத்தம் இந்தக் கல்லூரிகளில் 7,131 பேராசிரியர்கள் உள்ளனர். 54,325 மாணவ, மாணவிகள் இளங்கலை பிரிவிலும் 4,212 மாணவ, மாணவிகள் முதுகலை பிரிவிலும் 2,691 பேர் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் (எம்.பில்., பிஎச்.டி) படிக்கின்றனர்.

கோவையின் அடையாளமாக இப்பல்கலைக்கழகம் உள்ளது என்றால் மிகையல்ல.  பல அறிஞர்கள், அறிவியலாளர்கள் இப்பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளனர். தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தின் 9வது துணைவேந்தராக ஜேம்ஸ்பிச்சை செயலாற்றுகிறார். பதிவாளராக மனோகரன், தொலைதூரக் கல்விக்கூட இயக்கக இயக்குனராக கோவிந்தராஜ், பாரதியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளராக மங்கள்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

தபாடத்திட்டங்கள் இப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பல்வேறு முதுகலை படிப்புகள், முழுநேர ஆராய்ச்சிப்படிப்புகள், பகுதிநேர ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. 34 வகையான ஆசிரியர், ஆராய்ச்சிப் படிப்புகள், தொலைதூர கல்விக்கூடம், அகாடமி கல்விக் கல்லூரி, அறிவியல் ஆராய்ச்சி மையமான டி.ஆர்.டி.ஓ போன்றவை உள்ளன. தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்பவும், மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய வகையிலும் பாட வகைகள் உருவாக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றன.

ததொலைதூர கல்வித்திட்டம் இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கூடம் கடந்த 1991-1992ல் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், முதுகலை படிப்புகள், பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த மையம் மூலம் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ, பாடப்பிரிவுகள், சான்றிதழ் படிப்புகள், எம்.சி.ஏ. பி.எட், எம்.எட் போன்றவை என மொத்தம் 200க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள 350 கல்வி மையங்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆண்டுதோறும் பல ஆயிரம் மாணவ, மாணவிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விக்கூடத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் படிக்கின்றனர். இக்கல்வி மையத்தில் பட்டயப்படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது.

தஉள்கட்டமைப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுக்கூடங்கள், வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், உள்விளையாட்டு அரங்கம், கலந்துரையாடல் மையங்கள் போன்றவை சர்வதேசத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கப்பட்டது. ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் மூலமாக தங்களது ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தி வருகின்றனர். இம்மையம் துவக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 5,643 ஆராய்ச்சி மாணவர்கள் படித்து பயன் பெற்றுள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மனோகரன் கூறுகையில், ‘‘அகில இந்திய அளவில் பாரதியார் பல்கலைக்கழகம் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்தப் பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. தொலைதூர மற்றும் உயர்கல்வியிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையிலும் பி.பி.டி, எம்.பி.டி உள்ளிட்ட புதிய விளையாட்டு படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பல்கலைக்கழகத்திற்குள் தடுப்பணை, கழிவு நீர் குட்டை உருவாக்கி மழைநீரைச் சேகரித்து வருகிறோம். நூலகம், ஆராய்ச்சி மையம், உள்விளையாட்டு அரங்கம், வொய்-பை வசதிகள் உள்ளன.

பேராசிரியர்களின் சிறப்பான கற்பிப்புத் திறனால் கல்வித்தரம் மேலோங்கியுள்ளது’’ என்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை கூறுகையில், ‘‘பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் சிறப்பாக இருப்பதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு வந்து தங்கி, படிக்கின்றனர். இங்கு, கல்வித்திறன் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஆராய்ச்சிக் கூடங்கள், நூலகங்கள், உள்கட்டமைப்பு, விளையாட்டு என அனைத்து வசதிகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் தரத்தை உலகளவில் விரிவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

தமாணவர் விடுதிகள் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக ஹாஸ்டல் வசதிகள் உள்ளன. மாணவர்களுக்கு மட்டும் நான்கு  விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றோடு பார்வையாளர்கள் தங்குவதற்கும் அறைகள் உள்ளன.  தநூலகம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகம் 11,750 சதுர அடியில் இயங்கி வருகிறது. நூலகம் வாரநாட்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இங்கு அனைத்து தலைப்பு களிலும் 1,47,350 நூல்கள் உள்ளன. கல்வி தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் 153 தருவிக்கப்படுகின்றன. 1880ம் ஆண்டு வாக்கில் வெளிவந்த நூல்களும் பல அரிய புத்தகங்களும் ரெஃபரன்ஸ்க்காக இங்கு கிடைக்கும். ரெஃபரன்ஸ் எடுப்பவர்கள் நகல் எடுத்துக் கொள்ள ஜெராக்ஸ் மிஷின் உள்ளது.

தஆலோசனை மையம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆலோசனை மையமும் இயங்கிவருகிறது. இந்த ஆலோசனை மையம் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செம்மையாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை மையம் கல்வியாளர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் முதல் எதிர்காலத் திட்டங்கள் வரை அனைத்து விதமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

தசுகாதார மையம் பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களுக்கும் ஜெனரல் செக்கப் செய்துகொள்ளவும், அவசர சிகிச்சை வழங்கவும் மிகவும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஸ்மார்ட் கார்டு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சுகாதார மையத்துக்காக ஒரு ஆம்புலன்ஸும் வாங்கப்பட்டுள்ளது.

தஉடற்பயிற்சி மையம் தொலைதூரக் கல்வி மையத்தின் தரைத்தளத்தில் ஒரு உடற்பயிற்சி மையம் இயங்கிவருகிறது. பெண்களுக்காக தனியான உடற்பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களைக் கொண்டு, வார நாட்களில் மட்டும் காலை மாலை இருவேளைகளும் உடற்பயிற்சி அளிக்கப்படுகின்றது. இங்கு அனைத்துவிதமான மேம்பட்ட உடற்பயிற்சிக் கருவிகளும் உள்ளன.

இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு சமீபத்தில், ‘நாக்’ அமைப்பு ‘ஏ கிரேடு’ அந்தஸ்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது!
 
- டி.ஜி.ரகுபதி, என்.தாமோதரன்
படங்கள்: சி.கார்த்தீஸ்வரன்