மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவது எப்படி?



இந்தியாவில் சுமார் 7 கோடிக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது ஒரு அறிக்கை. 'மாற்றுத்திறனாளிகளை கருணை அடிப்படையில் பார்க்கக்கூடாது... உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும்' என்கிறது ஐ.நாவின் சாசன விதி. இதைக் கருத்தில் கொண்டே மாற்றுத் திறனாளிகள் பிற மக்களுக்கு சமமாக வாழ வேண்டும் என்பதற்காக அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித் தொகைகள், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுகள், நிதியுதவிகள் என பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை பெறுவதற்கு அடிப்படை தேவை ‘மாற்றுத் திறனாளி’ என்கிற தேசிய அடையாள அட்டை. மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகை எதுவாயினும் அதைப்பெற இந்த அடையாள அட்டை அவசியம்.
   
இந்த தேசிய அடையாள அட்டையை எப்படிப் பெறுவது?


முதலில், உடல் குறைபாடுக்கான மருத்துவச் சான்றிதழ் வாங்க வேண்டும். “இந்தச் சான்றிதழை வாங்குவது எளிது என்கிறார் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் தீபக்.

அவர் தரும் தகவல்கள்...


* மாற்றுத் திறனாளிகள் எந்தவொரு விஷயத்திற்கும் முதலில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களையே அணுக வேண்டும். இங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் சிரமங்கள் குறைகின்றன. சில மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் உடல் குறைபாடு சான்றிதழ் பெறுவதற்கான ஏற்பாடுகள் உண்டு. குறிப்பிட்ட தேதியில் மருத்துவரே அந்த அலுவலகத்துக்கு வந்து சோதித்து சான்றிதழ் தந்து விடுவார். அலைச்சலோ, குழப்பமோ இல்லாமல் சான்றிதழை வாங்கி விடலாம். அந்த வாய்ப்பு இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவமனைக்குச் சென்று இந்தச் சான்றிதழைப் பெறலாம்.

* ஊனத்தின் விழுக்காடு 40 சதவிகித்திற்கும் மேல் இருக்க வேண்டும் என்கிறது மக்கள் சாசனம். இதனை மருத்துவர் தீர்மானிப்பார்.

* இந்தச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது இருப்பிடச் சான்று ஒன்றையும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் இந்தச் சான்றிதழ் கிடைத்துவிடும். அதன்பிறகு, அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் செய்யலாம்.

* இந்த அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களிலேயே கிடைக்கின்றன. அதைப் பூர்த்தி செய்து மருத்துவச் சான்றிதழையும் இணைத்துக் கொடுத்தால், தேசிய அடையாள அட்டையை வழங்கிவிடுவார்கள்.

* ஒருவேளை இதில் தாமதமோ அல்லது குறைபாடோ இருந்தால், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் முறை
யிடலாம்.

முகவரி:


மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,
மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்,
ஜவஹர்லால் நேரு உள்வட்டச்சாலை,
கே.கே.நகர், சென்னை-78, தொ.பேசி : 044 24719947

இந்தத் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பஸ், ரயில் போன்றவற்றில் கட்டணச் சலுகையுடன் பயணம் செய்ய முடியும். அதற்கும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பஸ் பாஸ் பெறுவது எப்படி?


* தமிழக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் போன்ற அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் 75% இலவச பயணக் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களோடு உடன் வரும் உதவியாளருக்கும் இந்தக் சலுகை கிடைக்கும். 

* இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஏரியா போக்குவரத்துக் கழகங்கள் அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களிலேயே கிடைக்கும். இதனுடன் தேசிய அடையாள அட்டையின் நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் பெயர், அடையாள அட்டை எண், முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம், சுயமாக வேலை செய்யும் இடம் போன்றவற்றிற்கு சென்றுவர மட்டுமே இந்தச் சலுகையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அரசு. இதுதவிர தூரப் பயணங்களுக்கும் அடையாள அட்டையைப் பயன்படுத்தி கட்டண சலுகைப் பெறலாம். 
   
ரயில் பாஸ் பெறுவது எப்படி?


* ரயிலில் பயணச் சலுகை பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங் களை ரயில் நிலையங்களில் வாங்கிக் கொள்ளலாம். இந்த விண்ணப்பமே ஒரு மருத்துவச் சான்றிதழ் தான். இதில், முகவரி, தந்தைப் பெயர், வயது, பாலினம், எந்த வகையில் மாற்றுத் திறனாளி(இதனை மருத்துவர் குறிப்பிட்டுவிடுவார்) என்பதைக் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். நிறைவில், ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி அதனை மருத்துவரிடம் அத்தாட்சி கையெப்பம் வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான். 

* பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களைத் தவிர மற்ற ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் துணைக்கு பாதுகாப்பு நபர்கள் இல்லாமல் இந்தச் சலுகையில் பயணம் செய்ய முடியாது.

* 25 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 5 வருடம் வரையிலும், 25 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 10 வருடம் வரையிலும், அதற்கு மேல் வயதானவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இந்தச் சான்றிதழ் செல்லுபடியாகும். மற்றவர்கள் குறிப்பிட்ட வருடம் முடிந்ததும் புதிய சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

* இந்தச் சான்றிதழின் நகலை வைத்து ரயிலில் கட்டணச் சலுகை பெற்று பயணிக்க முடியும். ஆனால், பயணத்தின் போது ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்தால் ஒரிஜினல் சான்றிதழைக் காட்ட வேண்டியது அவசியம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை, நிவாரண உதவித் தொகை, திருமண நிதியுதவி போன்ற சில திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றைப் பெறுவது எப்படி? அடுத்த இதழில் பார்க்கலாம்.

- பேராச்சி கண்ணன்