அதோகதியாகும் உடற்கல்வி



கவனிக்குமா கல்வித்துறை?

மாணவர்கள் கல்வியைப் பெறுவதோடு உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளைக் கொண்டு வந்தது தமிழக அரசு. ஆனால், இப்போது அந்த நோக்கமெல்லாம் கானல் நீராகி வருகிறது என்பதுதான் வேதனை! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் குறைந்து வெகுநாட்களாகிவிட்டன. உபகரணங்கள் வாங்க துளியளவுகூட பணம் ஒதுக்கப்படுவதில்லையாம். இதனால், எதிர்காலத்தில் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் இல்லாமலே போய்விடும் என அபயக்குரல் எழுப்புகிறார்கள் உடற்கல்வி ஆசிரியர்கள்.

என்னதான் சிக்கல்?

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்-உடற்கல்வி இயக்குநர் சங்க மாநிலத் தலைவர் சங்கரப் பெருமாளிடம் கேட்டோம். “இங்கு நிறைய பிரச்னைகள் இருக்கு’’ என வருத்தத்தோடு ஆரம்பித்தவர் அதை அடுக்க ஆரம்பித்தார். “அரசுப் பள்ளிகளில் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்குவதில்லை என்பது உண்மைதான். இருபது வருஷத்துக்கு முன் உடற்கல்வி வகுப்புக்கு தனி மரியாதை இருந்தது. பள்ளியில் கடைசி பாடவேளை உடற்கல்வியாதான் இருக்கும். அதுக்குப்பிறகும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்போம். ஆர்வமாக விளையாடுவார்கள். விளையாட்டில் சாதிக்கவும் செய்தார்கள். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. படிப்பு மட்டுமே குறிக்கோளாக நினைக்கிறார்கள்.

பள்ளியும், பெற்றோரும் விளையாட்டை, உடற்கல்வியை வேண்டாத ஒன்றாக கருதுகிறார்கள். ஸ்போர்ட்ஸ் நிதியெல்லாம் மாணவர்கள் பள்ளியில் சேரும்பொழுதே வசூலிக்கும் வழக்கம் இருந்தது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 7 ரூபாயும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு வரை 14 ரூபாயும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடம் இருந்து 21 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. இதைக் கொண்டு தேவையான உபகரணங்கள் வாங்கலாம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு, ‘இந்த நிதியை மாணவர்களிடம் வசூலிக்க வேண்டாம். அரசே கொடுக்கும்’ என்று சொன்னது. அதன்பிறகு, ஒவ்வொரு வருஷமும் இந்த நிதியை அந்தந்தப் பள்ளிகளுக்கு அரசு கொடுக்க ஆரம்பித்தது. அன்று ஆரம்பித்தது சிக்கல்.

அரசு, இந்த நிதியை விளையாட்டுக்கென தனியாக ஒதுக்கி தரமால், பள்ளிகளுக்கு தரும் பொது நிதியோடு சேர்த்து கொடுத்தது. பள்ளி நிர்வாகம் விளையாட்டுக்கு ஒதுக்கிய நிதியை மற்ற செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. இதனால், பல பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் இல்லை. இப்போது, கேரம், ஷட்டில், பேட்மின்டன் என நிறைய விளையாட்டுகள் வந்துவிட்டன. உபகரணங்கள் இல்லாததால் மாணவர்களால் விளையாட முடியாத சூழல் உள்ளது.

இது ஒருபுறமிருக்க ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மாநில, தேசிய போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு நடத்துவார்கள். வட்டம் முதல் மாநிலம் வரையில் இந்தப் போட்டி நடக்கும். இதற்கு 10 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வழியாக பள்ளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இதை மாணவர்களுக்கு பயணச் செலவு, உணவுச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதையும் மாணவர்களுக்கு கொடுப்பதில்லை.

அரசுப் பள்ளிகளில் படிக்கிற பெரும்பாலான மாணவர்கள் ஏழை மாணவர்கள். ஆனால் விளையாட்டில் திறமையானவர்கள். அரசின் உதவிகள் கிடைப்பதில் இப்படி தடைகள் இருந்தால் அவர்கள் எப்படி விளையாட்டுத்துறைகளில் சாதிக்க ஆர்வத்தோடு பயிற்சி செய்ய முடியும்?

இப்போது, அரசு நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் வேலையையே நீக்கிவிட்டார்கள். இதனால், அரசு நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டே கேள்விக்குறிதான். அடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்தான் விளையாட்டு சொல்லித்தரும் நிலை உள்ளது. பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு உடற்கல்வி வகுப்புகளை பல பள்ளிகளில் நீக்கி வெகுநாளாயிற்று. சில பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகளை மற்ற ஆசிரியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் விளையாட்டுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

ஒரு உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லாத உயர்நிலைப் பள்ளிகள் மட்டும் தமிழகத்தில் 185 இருக்கின்றன. அடுத்து, நடுநிலைப் பள்ளிகளில் இருந்த சுமார் 5 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை சரண்டர் செய்துள்ளார்கள். இதோடு பணி நிரப்பாமல் காலியாக இருக்கும் இடங்கள் மட்டும் 5 ஆயிரத்து 200. இதில் 1,200 இடங்களை மட்டும்தான் நிரப்புவோம் என அரசு சொல்கிறது. இதற்கு முன்பு 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருந்தார். ஆனால் இன்று எத்தனை மாணவர்கள் இருந்தாலும் அதிகபட்சம் மூன்று பேர்தான் இருக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வந்துவிட்டார்கள். இப்படி இருந்தால் எப்படி உடற்கல்வி சொல்லி தரமுடியும்?

ஆகவே, அரசு உடனடியாக நடுநிலைப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியரையாவது பணியமர்த்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். தேவையான நிதியை விளையாட்டு ஒதுக்கித் தரவேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான நாளைய சமுதாயத்தை உருவாக்க முடியும்’’ என ஆதங்கமாக முடிக்கிறார், சங்கரப் பெருமாள்.

- பேராச்சி கண்ணன்