கப்பல்படையில் பைலட் வேலை!



இந்தியக் கப்பல் படையில் திருமணமாகாத எஞ்சினியரிங் பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் கப்பல்படைப் பிரிவில் சிறப்பு நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியுடன் பணி நியமனம் செய்யப்படுவது உண்டு. தற்போது அதற்கான கோர்ஸ் கமென்சிங் ஜனவரி-2016 திட்டத்தில் எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு பைலட், அப்சர்வர் போன்ற பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு திருமணமாகாத ஆண்கள்/பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பயிற்சித் திட்டத்தின் பெயர்: கோர்ஸ் கமென்சிங் ஜனவரி-2016

பணி விவரங்கள்:எக்சிகியூட்டிவ் பிரிவு

1. பைலட் - ஆண்கள் மட்டும்
2. அப்சர்வர் - ஆண்/பெண்

கல்வித் தகுதி: பி.இ./பி.டெக். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அப்சர்வர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரு பணிகளுக்கு விண்ணப்பிப் பவர்களும் பிளஸ்-2வில் இயற்பியல் மற்றும் கணிதத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 வயதினைக் கடந்தவராகவும், 24 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும். அதாவது 2.1.1992 மற்றும் 1.1.1997 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உடல்தகுதி: பைலட் மற்றும் அப்சர்வர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 162.5 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். அப்சர்வர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் 152 செ.மீ உயரம் இருப்பது அவசியம்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் சர்வீஸ் செலக்ஷன் போர்டு மூலம் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப ‘கட் ஆஃப்’ மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஸ்டேஜ்-1 தேர்வு மூலம் இன்டலிஜென்ஸ் டெஸ்ட், பிக்சர் பர்செப்ஷன் போன்றவையும் ஸ்டேஜ்-2 தேர்வில் குரூப் டிஸ்கஷன் டெஸ்ட் மற்றும் நேர்காணல் போன்ற தேர்வுகளும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பி.ஏ.பி.டி (P.A.B.T) மற்றும் மருத்துவ தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 18.4.2015 வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெற முடியும். தேவையான விவரங்களை கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தை கணினி பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்  . கணினி பிரதி எடுத்த விண்ணப்பத்தை 28.4.2015ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விரிவான தகவல்களுக்கு:www.joinindiannavy.gov.in