கல்வி உரிமைச் சட்டம்!



உண்மை நிலை என்ன?

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்காக 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில் 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன. கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியாதது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால் இந்த உயரிய திட்டம் பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போகிறது. தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் 11.25 சதவீதம்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. அலகாபாத் ஐ.ஐ.எம். எடுத்த சர்வே மூலம் இந்தப் புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.

‘பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை’ அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘கல்வி உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது என்றால், கட்டணம் இல்லா கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும். அப்படியென்றால் அதன் பிரிவு சொல்லக்கூடிய பிரிவு 1 சி-யின்படி ஒரு மாணவன் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தால் கல்வி செயல்பாட்டுக்கு ஆகக்கூடிய முழு கட்டணத்தையும் அரசு ஏற்க வேண்டும். கல்வியியல் செயல்பாட்டுக்கு அந்த மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வாங்கக்கூடாது. கல்வியியல் செயல்பாடு என்பது சீருடை, காலணி முதல் கொண்டு அனைத்தும் தருவதுதான். பெண்களாக இருந்தால் ரிப்பன் உள்பட எல்லாம் தரவேண்டும். அதேபோன்று புத்தகம், குறிப்பேடு, மதிய உணவு, அவர்கள் பயன்படுத்தும் ஜியாமட்ரி பாக்ஸ் எல்லாம் தரவேண்டும். கல்வியியல் இணை செயல்பாடுகளுக்கும் அரசு பணம் செலவு செய்ய வேண்டும்.

உதாரணமாக, கல்விச் சுற்றுலா போகிறார்கள் என்றால் அதற்கும் அரசுதான் பணம் தர வேண்டும். பணம் கட்டி சேரும் மாணவர்கள் சுற்றுலாவுக்கான பணத்தை கொடுத்துவிடுவார்கள். ஆனால், 25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் பள்ளி படிப்பை முடித்து வெளிவரும் வரை ஒரு பைசா கூட வாங்காமல் பாடம் நடத்த வேண்டும்’’ என்று கல்வி உரிமைச் சட்டத்தின்  அனைத்து சாராம்சங்களையும் பட்டியலிட்டு காட்டுகிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

மேலும் அவர், ‘‘சட்டமன்றத்தில் தமிழக அரசு கொடுத்துள்ள அறிக்கைப்படி நூறு சதவீத அளவு இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்லா தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் 2012 ஜூலை மாதம் 2ம் தேதி கொடுத்த தீர்ப்பில், ‘இந்தச் சட்டத்தின்படியும் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படியும் ஒரு தனியார் பள்ளி இந்த பிரிவின்கீழ் 25 சதவீத மாணவர்களை வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினரில் இருந்து இத்தனை மாணவர்களை சேர்த்திருக்கிறோம் என்று தெரியப்படுத்தினால் அதை நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே, சேர்க்கை என்பது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்கள்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது தனியார் பள்ளிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே சட்டமன்றத்தில் தமிழக அரசு தனியார் பள்ளிகளில் 100 விழுக்காடு 25 சதவீத சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இத்தகைய பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறதா, விளிம்புநிலை மக்கள் அதாவது தாழ்த்தப்பட்ட, கல்வியறிவு இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகளைத்தான் இந்த பள்ளிகளில் சேர்த்தார்கள் என்றால் மதிய உணவு இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?

எத்தனை பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது? மதிய உணவு சாப்பிட்டார்களா சாப்பிடவில்லையா? இந்தச் சட்டத்தின்படி மதிய உணவு தரவேண்டுமா தரவேண்டாமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டுமா... வேண்டாமா? இந்தச் சட்டத்தின்படி கல்வி சுற்றுலாவுக்கு அரசு பணம் தரவேண்டாமா? இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஆனால் இன்றைய தேதிவரை அரசு எந்தவிதக் கட்டணமும் தரவில்லை என்று தனியார் பள்ளிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன.

ஆனால், சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது தனியார் பள்ளிகளுக்கு பணம் கொடுத்துவிடுவார்கள். ஆனால், அந்த மாணவர்கள் எந்த வசதியையும் அனுபவிக்காமலே வெளியே வந்துவிடுவார்கள். எந்த அடிப்படையில் தமிழகத்தில் 25 சதவீத ஒதுக்கீடு 11.25 விழுக்காடுதான் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அலகாபாத் ஐ.ஐ.எம். முடிவு வெளிவந்துள்ளது என்று தமிழக அரசு கேள்வி கேட்க வேண்டாமா? அப்படி தமிழக அரசு எந்தவிதக் கேள்வியும் எழுப்பாததற்கு காரணம் என்ன?

இதன் உண்மைத்தன்மையை ஆராய தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஆகவே, அரசு இதை ஆராய வேண்டும்; கேள்வியும் எழுப்ப வேண்டும்.

அரசினுடைய பொறுப்பிலும் செலவிலும் தாய்மொழி வழியில் அருகாமைப் பள்ளி அமைப்பில் பொதுப்பள்ளி முறையில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைப் பள்ளி கல்வி வரை குறைந்தபட்சம் அரசு கொடுக்க முன்வந்தால் மட்டுமே கல்வி உரிமையாக ஏற்க முடியும். இப்போது உள்ள கல்வி உரிமைச்சட்டம் என்பது உண்மையான கல்வி உரிமையைக் கொடுக்கவில்லை’’ என்று கல்வி உரிமைச் சட்டத்தின் உண்மையான நிலையை தெள்ளத் தெளிவாகப் விளக்கிக் கூறினார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.