செய்திகள் வாசிப்பது டாக்டர்




மிளகாய் மேஜிக்!


சிவப்பு மிளகாயில் உள்ள ரசாயனத்துக்கு புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது என சமீபத்தில் அறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் நாட்டிங்கம் பல்கலைக்கழகத்தில் செய்த ஆராய்ச்சியில் மிளகாயில் உள்ள கேப்சைசின் என்கிற ரசாயனத்துக்கு, நுரையீரல் மற்றும் கணையத்தில் உள்ள கேன்சர் செல்களை அழிக்கும் வல்லமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் முக்கியமான கீமோதெரபிக்கு இணையான வேலையை மிளகாய் செய்கிறதாம்... அதுவும் பக்க விளைவுகள் இன்றி!

மைக்ரோவேவில் சமைக்கலாமா?

மைக்ரோவேவ் அவன் சமையல் மட்டுமல்ல... எல்லாவகை சமையலிலும் உணவில் உள்ள சத்துகள் குறையும். ஆனால், பிற சமையல் முறைகளை விட மைக்ரோவேவ் சமையலில் சத்துகள் அதிக அளவில் வெளியேறிவிடுகின்றன. அதிக நேரம் உணவை சமைக்கும் போது சத்து இழப்பைத் தவிர்க்க முடியாது.

மைக்ரோவேவ் சமையல் அதிக அளவு வெப்பத்தில் நடப்பதால் நிறைய சத்துகள் இழக்கப்படுகின்றன. நீரில் கரையும் வைட்டமின்களான ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை மைக்ரோவேவில் சமைக்கும் போது எளிதில் வெளியேறிவிடுகின்றன.

முழு சமையலையும் தவிர்க்க முடியாவிட்டாலும் வெண்டைக்காய், பசலைக்கீரை, சிக்கன் போன்ற வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை மைக்ரோவேவில் சமைக்காமல், இயற்கையான முறையில் சமைத்தால் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும்.

உங்கள் மூளைக்குள் ஒரு நிபுணர்!

மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு பிரத்யேக செயலை செய்கிறது. ஃப்ரன்டல் லோப் பகுதி முன் நெற்றியின் வலதுபுறமாக அமைந்துள்ளது. திட்டமிட்டு செய்கிற செயல்களையும் அது நடக்காவிட்டால்  மாற்று ஏற்பாடுகளையும் கவனிப்பதே இதன் வேலை. இது தவிர ‘இன்று இட்லியா? தோசையா?’ என்று நீங்கள் நினைப்பதை மூளையில் தற்காலிகமாக சேமித்து உங்களுக்கு நினைவுப்படுத்துவதும் ஃப்ரன்டல்  லோப் பகுதியே. இதற்குப் பின்னால் பரைடல் (Parietal) லோப் உள்ளது. இது உணர்ச்சிகளை உடலுக்குத் தெரியப்படுத்துகிறது. நமது வாசிக்கும் பழக்கத்துக்கும் கணக்குப் போடும் திறனுக்கும் பரைடல் லோப்தான் காரணம்!