பார்வையற்றோருக்கும் பயன் தரும் காலணி!



கிரிஸ்பியன் லாரன்ஸ்ஸும் அனிருத் ஷர்மாவும் அமெரிக்காவில் எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள். விரும்பியிருந்தால் அங்கேயே ஒரு நல்ல கம்பெனியில் நல்ல வேலையில் செட்டிலாகி இருக்கலாம். அவர்களுக்கோ, படித்த தொழில்நுட்பத்தைக் கொண்டு பலருக்கும் பயன்படும்படி இந்தியாவிலேயே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருந்தது!

ஹைதராபாத்தில் ஒரு அபார்ட்மென்டில் 50க்கும் குறைவான நபர்களைக் கொண்டு இவர்கள் ஆரம்பித்த Ducere tech  நிறுவனத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிறுவனம் சார்பாக இவர்கள் தயாரித்த‘லே சல்’ (Lechal) நவீனக் காலணி உலகளவில் பிரபலமாகியிருக்கிறது.‘லே சல்’  என்றால் இந்தியில் ‘அழைத்துச் செல்’ என்று அர்த்தம். இந்தக் காலணிப் பகுதியை (Insole)  ஷூவுக்குள் பொருத்திக் கொண்டு ஸ்மார்ட்போனில் அவர்கள் அளிக்கும் ‘ஆப்’பை (App) தரவிறக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

நீங்கள் எந்தப் பாதையில் போகிறீர்கள் என்பதையும், எப்படிப் போக வேண்டும் என்ற வழியையும் ‘மேப்’ போலவே   இது சொல்லும். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், முழுப் பார்வையை இழந்தவர்கள் என இரு தரப்பினருக்குமே ‘லே சல்’ வரப்பிரசாதம் என பாராட்டுகள் தொடர்கின்றன. ‘லே சல்’ காலணியின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான கிரிஸ்பியன் லாரன்ஸிடம் பேசினோம்...

* ‘லே சல்’ காலணியை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது?

‘‘டுய்செர் டெக் நிறுவனத்தை 2011ல் தொடங்கினோம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காலணிகளை புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதே எண்ணமுள்ள அனிருத் ஷர்மாவை சந்தித்தேன். இருவருமே எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தவர்கள் என்பதால், அணியும் பொருட்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்பினோம். அப்போது அனிருத், ‘பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவி செய்யும் உபகரணங்களில் பல வருடங்களாகவே எந்த மாற்றமும் இல்லை. குச்சிகளையும் வழிகாட்டும் நாய்களையும்தான் இன்னமும் பயன்படுத்துகிறார்கள்’ என்றார்.

எங்கள் இருவருக்கும் ஹெப்டிக் (Heptic) தொழில்நுட்பத்தில் ஆர்வம் உண்டு. ஹெப்டிக் என்பது தொடுதல் மூலம் இயங்கும் தொழில்நுட்பம். அதை மையமாக கொண்டு தயாரித்ததுதான் ‘லே சல்’  காலணி. பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே ‘லே சல்’ பயன்படும். ‘லே சல்’ லில் பலவகை புதுமைகளையும் புகுத்தி வருகிறோம். இன்று சந்தையில் மதிப்புமிக்க ஃபேஷன் காலணியாக மாறியுள்ளது. பல நபர்களின் அன்றாட வாழ்வில்   பயனுள்ளதாக வும் விளங்குகிறது..’’

* ‘லே சல்’ எவ்வாறு வழி காட்டுகிறது?


‘‘ ‘லே சல்’ உலகிலேயே தொடுதல் உணர்வுடன் செயல்படும் முதல் காலணி. இதை அணிபவர்கள் இந்த உணர்வை அடைய முடியும். எந்த ஷூவிலும் பொருத்திக்கொள்ளும் வகையில் Insole ஆகவும் கிடைக்கிறது. ஷூவுடனும் தயாரிக்கிறோம். ப்ளூ டூத் தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்துபவரின் ஸ்மார்ட் போனில் ‘லே சல்’ ஆப் தரவிறக்கம் செய்தால் போதும். நடக்கும் நபரின் கால், சைகைகள் அல்லது குரல் கட்டளைகளை வைத்தே திசைகளை தீர்மானிக்கும்.

உங்கள் உடலின் ஃபிட்னஸ் அளவையும் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் அடிக்கடிச் செல்லும் இடங்கள், புதிய வழிகள், ஒரு நாளில் எத்தனை மணிநேரம் நடந்தீர்கள், எவ்வளவு தொலைவு, செலவாகியுள்ள கலோரி அளவு என எல்லா தகவல்களையும் ‘லே சல்’   மூலம் கால்நுனியில்   வைத்துக்கொள்ள முடியும்!’’

* ‘லே சல்’ காலணியை எங்கே வாங்குவது?

‘‘www.lechal.com வலைத்தளத்தில் முன்பதிவு செய்து எளிதில் வாங்கலாம். நவீன எலெக்ட்ரானிக் கருவிகள் விற்பனை செய்யும் பெரிய ஸ்டோர்களின் மூலமாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவலாக கிடைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்...’’

* ‘லே சல்’லுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

‘‘ ‘லே சல்’ காலணிகளை எல்லோரும் பயன்படுத்தலாம். ஃபிட்னஸில் ஆர்வம் உள்ளவர்களும் விரும்பிப் பயன்படுத்து கிறார்கள். உடல்நலத்தில் அக்கறை கொண்டவர்கள், ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சி செய்பவர்கள் பலரும் வெற்றிகரமாக பயன்படுத்துகிறார்கள். ஃபேஷனுக்காக பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். உலகெங்கிலும் இருந்து 50 ஆயிரம் முன்பதிவுகள் வந்துள்ளன...’’

* பார்வையற்றவர்களுக்கு ‘லே சல்’ எவ்விதம் உதவுகிறது?

‘‘குச்சியை வைத்து தட்டுத் தடுமாறி நடப்பதை ‘லே சல்’ மாற்றுவதோடு, தன்னம்பிக்கையும் அளிக்கிறது. உற்ற தோழனாக வழி காட்டுகிறது. நாங்கள் கொடுத்து இருக்கும் ஆப், குரல் மூலமான கட்டளைகளுக் கும் பதில் அளிப்பதால் பயன்படுத்துபவர்கள் முழுமை உணர்வுடன் செயல்பட முடியும்.

ஒலி அளவையும் ஸ்மார்ட்போன் மூலம் கூட்டி, குறைத்துக் கொள்ளலாம். இது ஒரு ஆரம்பம்தான். ‘லே சல்’ விற்பனையின் மூலம் வரும் லாபத்தில் ஒரு பகுதியை பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக ஹைதராபாத்திலுள்ள எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனையுடன் இணைந்து செலவிடுகிறோம்.’’

* விலை என்ன?

‘‘ஷூ உள்ளே பொருத்தப் பயன்படும் Insole மட்டும் 100 அமெரிக்க டாலரில் இருந்து 150 அமெரிக்க டாலர் வரை. ஷூவுடன் வாங்கினால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகும்...’’

நீங்கள் அடிக்கடிச் செல்லும் இடங்கள், புதிய வழிகள், ஒரு நாள் எத்தனை மணிநேரம் நடந்தீர்கள், எவ்வளவு தொலைவு, செலவாகியுள்ள கலோரி அளவு என எல்லா தகவல்களையும் ‘லே சல்’ மூலம் கால்நுனியில் வைத்துக்கொள்ள முடியும்!

- விஜய் மகேந்திரன்