மெட்ராஸ் ஐ...



கண்ணே கவனி!

ஒரு துளி கண்ணீரிலே 100 கோடி வைரஸ்!

பாகிஸ்தான் ராணுவம்போல அவ்வப்போது நம்மை இம்சைப்படுத்துவது ‘மெட்ராஸ் ஐ’க்குப் பொழுதுபோக்கு! பருவ மழை வேண்டுமானாலும் பொய்க்கும்... மெட்ராஸ் ஐ மட்டும் தவறுவதே இல்லை. சிக்கிய அனைவரையும் ஒரு ரவுண்டு பாடாகப் படுத்திவிட்டுப் போகிற மெட்ராஸ் ஐ பற்றி கண் அறுவை சிகிச்சை மருத்துவரான கௌசிக்கிடம் கேட்டோம்...

‘‘கண்களில் ஏற்படும் ஒருவகையான வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் ஐ’. சென்னையில் முதன்முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தப் பெயர். இந்த வைரஸ் தொற்று கண்களின் வெள்ளைப் பகுதியிலேயே அதிகம் ஏற்படும். 10 பேரில் இரண்டு பேருக்கு அரிதாகக் கருவிழியில் தொற்றும். ஜலதோஷத்தில் அடினோவைரஸ்கள் (Adenoviruses) தொண்டையிலும் மூக்கிலும் தொற்றியிருக்கும்.

அதேபோல, மெட்ராஸ் ஐயில் கண்களில் அடினோவைரஸ்கள் தொற்றிக் கொள்கின்றன. ஜலதோஷம் போலவே 3 முதல் 5 நாட்கள் நம்மை சிரமப்படுத்திவிட்டுத் தானாகவே சென்றுவிடும். மெட்ராஸ் ஐக்கு சிகிச்சை கிடையாது. பாதிக்கப்பட்டவரின் சிரமத்தைக் குறைப்பதற்கான வலிநிவாரணிகள், மாத்திரைகள், சொட்டு மருந்துகள் கொடுப்போம். இதுகூட நோயாளி அந்த 3 நாட்களை எதிர்கொள்வதற்குஉதவியாகத்தான்.

மெட்ராஸ் ஐ வந்தவரின் கண்களைப் பார்ப்பதால் மற்றவர்களுக்கும் ஒட்டிக்கொள்ளும் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் கைகளின் வழியாகவே இந்த வைரஸ் பரவுகிறது. காற்றின் மூலம் அரிதாகவே பரவுகிறது. மெட்ராஸ் ஐ வந்த ஒருவரது கைகள் தொட்ட பொருளை, மற்றவர் தொட்டுவிட்டுத் தெரியாமல் தங்கள் கண்கள் மீது கை பட்டுவிட்டால், அடுத்த 24 மணிநேரத்தில் அவரையும் இந்த நோய் தொற்றிக் கொள்ளும்.

பொது இடங்களையும் பொதுவான பொருட்களையும் முடிந்த வரை பயன்படுத்தாமல் இருப்பது மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க உதவும். இதிலிருந்து தற்காத்துக் கொள்ள சுத்தமாக இருப்பது ஒன்றே சிறந்த வழி. குறிப்பாக நண்பர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ மெட்ராஸ் ஐ வந்திருந்தால், உடன் இருக்கும் மற்றவர்கள் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது அவசியம்.

வெறும் தண்ணீரில் கைகளை கழுவுவதைவிட சோப், கிருமிநாசினிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. ஒரு சொட்டுக் கண்ணீரிலேயே 100 கோடி வைரஸ்கள் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!’’ என்று எச்சரிக்கிறார்.

மெட்ராஸ் ஐ வருவதற்கான அறிகுறிகள் பற்றி கண் சிகிச்சை மருத்துவரான அம்பிகாவிடம் கேட்டோம். ‘‘கண்கள் சிவப்பாவது, இமைகள் வீங்குவது அல்லது ஒட்டிக் கொள்வது, கண்களிலிருந்து அழுக்குகள் வெளியேறுவது, மண் விழுந்தது போல் உறுத்திக் கொண்டே இருப்பது, வலி, கண்ணீர் அதிகமாக வருவது போன்றவை இதன் அறிகுறிகள்.

அரிதாக இந்த வைரஸ்களுடன் பாக்டீரியாக்களும் சேர்ந்துகொண்டால், கண்களில் சீழ் வரும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளும் தெரியும். இது ஒரு கண்ணில் ஏற்பட்டு, அடுத்த கண்ணுக்கும் பரவும். இரண்டு கண்களிலும் சேர்ந்தும் வரலாம்.

சமீபத்தில் வேறுவிதமான அறிகுறிகளும் தெரிகின்றன. காதுக்குப் பக்கத்தில் நெறி கட்டுவது, உறுத்தல் இல்லாமலேயே மெலிதான சிவப்பாகக் கண்கள் மாறுவது, கண்களில் தூசு பட்டது போல கண்ணீர் வருவது, கண்களில் வலி போன்ற உணர்வு ஆகியவை மெட்ராஸ் ஐ போலவே தெரியாது.

இது வழக்கமான அறிகுறிகளாக இல்லாததால், கண்களில் ஏதோ தூசு விழுந்துவிட்டது, வெயிலில் அலைந்ததால் கண்கள் சிவப்பாக மாறியிருக்கும் என்று மக்கள் அலட்சியமாக இருந்துவிடுவார்கள். இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் வரப்போவதில்லை, இரண்டு, மூன்று நாட்களில் தானே சரியாகிவிடும் என்றாலும் சொட்டு மருந்துகள், மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்வது நல்லதுதானே!’’ என்கிறார் அம்பிகா.

காதுக்குப் பக்கத்தில் நெறி கட்டுவது, உறுத்தல் இல்லாமலேயே மெலிதான சிவப்பாகக் கண்கள்  மாறுவது, கண்களில் தூசு பட்டது  போல் கண்ணீர் வருவது, கண்களில்  வலி போன்ற உணர்வு ஆகியவையும்  மெட்ராஸ் ஐயின் அறிகுறிகளாக  இருக்கலாம்...

- எஸ்.கே.பார்த்தசாரதி