டியர் டாக்டர்





அடேங்கப்பா... அட்டையில் நாக்கைச் சுழற்றி காட்டி ‘சைவம் என்பது சைவமே அல்ல’ என்ற ஒரு ஷாக் ரிப்போர்ட்டையும் தந்து, சுத்த சைவப் பிரியர்களின் வயிற்றில் புளியை கரைத்ததோடு இல்லாமல், மருந்துகளின் இன்றைய ஏமாற்று விலைகளை பட்டியலிட்டு, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ப(ய)ங்க(ர)ம் எத்தகையது எனவும் எடுத்துச் சொல்லியதையும் பாராட்டியே ஆகணும்!

- சுகந்தி நாராயணன், வியாசர் காலனி.

பெற்றோர், பிள்ளைகளை ‘டேய்... தோலை உரித்து விடுவேன்’ என மிரட்டுவதை பார்த்திருப்போம்... கேட்டிருப்போம். ஆனா, உண்மையிலேயே நம் தோலை உரித்து அடுத்தவர்களுக்கு உபயோகப்படுத்துவது ரொம்ப ரொம்ப ஆச்சரியம்தான்!இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் புற்று நோயாளிகள் உருவாகிறார்கள் என்பதை படித்ததும் வேதனை அடைந்தேன். அதே நேரம் பொதுநல வழக்கு  ஒன்று உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருப்பது ஆறுதலான விஷயம். அந்த வழக்கு ஏழைகளுக்கு சாதகமாகட்டும்!

- எஸ். துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம்.

உண்கிற உணவுக்கும் உடலின் உறுப்புகளுக்குமுள்ள நெருங்கிய தொடர்பு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை (துள்ளாத மனமும் துள்ளும்) நலம். அன்றாடம் உட்கொண்டு வரும் கேரட், தக்காளி, காளான், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றால் நமது உடல் உறுப்புகளுக்கு கிடைத்து வரும் நன்மைகளை பொருள்பட எடுத்துரைத்திருந்தது.

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மருத்துவ மாணவர்களுக்கும் பயன் அளிக்கும் இதழ்!

‘குங்குமம் டாக்டர்’ முதல் இதழில் டாக்டர் கு.கணேசன் எழுதிய ‘எபோலா வைரஸ்’ பற்றிய கட்டுரை மிக அருமை. வைரஸின் அமைப்பில் ஆரம்பித்து, நோய் தோன்றிய வரலாறு, நோய் ஏற்படும் விதம், அறிகுறிகள், பரிசோதனை முறைகள், தற்போதைய சிகிச்சைகள், தடுப்பு ஏற்பாடுகள், அரசின் கடமை என்று பல தலைப்புகளில் ஒரு மருத்துவ மாணவனுக்குத் தேவையான எல்லா விவரங்களையும் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் பாடப் புத்தகத்தில் கூட இல்லை.

ஆகவே, எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்கள் கல்லூரியில் இந்தக் கட்டுரையை எல்லா மாணவர்களும் கட்டாயம் படித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று, இந்தக் கட்டுரை வெளிவந்த இதழை கல்லூரி நிர்வாகமே இரண்டாம் ஆண்டு படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் இலவசமாகக் கொடுத்தது. இதிலிருந்தே இந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை எல்லோரும் புரிந்து கொண்டோம்.

 ‘குங்குமம் டாக்டரு’க்கு எங்கள் கல்லூரியின் சார்பில் மிக்க நன்றி. ‘குங்குமம் டாக்டர்’ சாதாரண வாசகருக்கு மட்டுமல்லாமல் மருத்துவ மாணவர்களுக்கும் பயனுள்ளதாக வெளிவருகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் தங்கள் மருத்துவச் சேவை!

- இரா.தனுஜா, எம்.பி.பி.எஸ், இரண்டாம் ஆண்டு, செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, சென்னை.