அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!



டாக்டர் டி.நாராயண ரெட்டி

புளிப்பின் சுவை போலவும்
தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும்
கோப்பை மதுவில்
வழியும் கசப்பைப் போலவும்
இந்த இரவு சுடர்கிறது
- சுதீர் செந்தில்

பெற்றோரும் பிள்ளைகளை இந்த விஷயத்தில் பக்குவமாக நடத்த வேண்டும்...

நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி பிளேயர், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர் என அறை முழுக்க அத்தனை வசதி, செழுமை. பாக்கெட் மணிக்கும் குறைவில்லை. விடுமுறை என்பது நவீனுக்குக் கொண்டாட்ட தினங்கள். நண்பர்களோடு ஊர் சுற்றுவான். காலையில் கிளம்பினால் இரவில்தான் வீடு திரும்புவான். வந்ததும் முதல் வேலையாக இரவு உணவை முடிப்பான்.

அடுத்த வேலை? மாடி அறைக்குச் செல்வது... நண்பர்களிடம் வாங்கி வந்த போர்னோ டிவிடிகளை விரும்பிப் பார்ப்பது. இரவு முழுக்க அவன் அறையில் டி.வி. ஓடிக் கொண்டிருக்கும். சத்தம் வெளியே கேட்காது. அப்படி என்ன படம் பார்க்கிறான்? என்று பெற்றோருக்கு சந்தேகம்... ஆனாலும், அவன் மேலிருந்த நம்பிக்கையில் அவனிடம் கேட்கவில்லை.

ஒருநாள் அம்மா அவன் அறையை சுத்தம் செய்ய உள்ளே வந்திருக்கிறார். யதேச்சையாக அலமாரியைத் திறந்தவர் அதிர்ந்து போனார். அலமாரியில் இருந்தவற்றில் பெரும்பாலானவை ஆபாச டிவிடிக்கள்... கம்ப்யூட்டரை ஆன் செய்தால் ஹாலிவுட், பாலிவுட் நடிகைகளின் அரை நிர்வாணப் படங்கள். உடனே கணவருக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார். 

அன்று மாலை நவீன், நண்பனோடு வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வினாடியே, கன்னத்தில் ஓர் அறை விட்டார் அப்பா. நண்பனுக்கு முன் தன்னை அடித்தது அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அப்பா ஆபாச டிவிடிகளை உடைத்து வெளியே எறிந்தார். இன்டர்நெட் வசதியையும் துண்டிக்க போவதாகச் சொன்னார். ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான நவீன், வீட்டை விட்டு வெளியேறினான்.

எங்கெங்கோ தேடி நவீனை கண்டுபிடித்தார்கள்... மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். மருத்துவரோ வளர்ந்த பையனை மோசமாக நடத்தியதற்காக பெற்றோரை கண்டித்தார். இந்தப் பிரச்னை நவீனுக்கு மட்டுமில்லை... விடலைப் பருவத்தில் இருக்கும் எத்தனையோ பேருக்கு இருக்கிறது.

‘போர்னியா’ என்றால் கிரேக்க மொழியில் ‘விலை மகளிர்’ என்று அர்த்தம். அவர்களின் நடத்தையை எழுதுவது ‘போர்னோகிராபி’. புத்தகங்களில் எழுத்துகளாக மட்டும் வந்த போர்னோகிராபி, காலப்போக்கில் வீடியோ படங்களாகவும் உருவானது. இதன் நோக்கம் செக்ஸ் உணர்வுகளை தூண்டிவிடுவதே. செக்ஸை தூண்டிவிடக் கூடிய புத்தகங்கள், படங்கள், ஓவியங்கள், கார்ட்டூன்கள் எல்லாமே Sexually explicit material என்று அழைக்கப்படுகின்றன. இதில் மூன்று வகை...

1. எரோடிகா (Erotica) ஓரளவு அழகியல் தன்மையோடு எடுக்கப்படுவது. வெறுமனே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டுமே தவிர மோசமான மன விளைவுகளை ஏற்படுத்தாது.
2. இழிவு போர்னோ (Degrading pornography) எதிர்பாலினரை மதிக்காமல் தனது விருப்பத்துக்கு ஏற்ப உறவு கொள்வதைக் காட்டுவது. ஆண், பெண்ணுக்கு பிடிக்காத விஷயங்களை செக்ஸில் செய்யச் சொல்லி நிர்பந்திப்பது போன்று... மனநிலையை சற்றுப் பாதிக்கும். எதிர்பாலினம் மீதான மதிப்பைக் குறைக்கும்.

3. வன்முறை போர்னோ (Violent pornography) அருவெறுக்கத்தக்க வன்முறைச் செயல்கள் நிறைய இருக்கும். சவுக்கால் அடிப்பது, ஷூவை நக்கச் செய்வது, ஊசியால் உடலைக் குத்துவது போன்று... தொடர்ந்து பார்ப்பவர்களின் மனநிலை கண்டிப்பாக பாதிக்கப்படும்... மன வன்முறை தூண்டப்படும்.

வாலிப வயதில் செக்ஸ் பற்றித் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் டிவிடியிலோ, இன்டர்நெட்டிலோ போர்னோகிராபி பார்ப்பது சகஜமானதே. அப்படிப் பார்ப்பவர்களை குற்றம் புரிந்தவர் போல பார்ப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். அந்தரங்க விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். கிளுகிளுப்பான சம்பவம் ஏதேனும் நடந்தால், அதைப் பார்க்க விரும்பாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? அப்படி இல்லை என்று சொல்பவர்கள் பொய்தானே சொல்கிறார்கள்?

நீலப்படம் பார்த்தால் கெட்டுப் போவார்கள் என்பதும் தவறான கூற்று. இன்றைய திரைப்படங்கள் தூண்டாத பாலியல் உணர்வையா நீலப்படம் செய்துவிடப் போகிறது? இன்றைக்கு பிரபல கதாநாயகிகளே அந்த உடைகளை அணிந்து, ஆடி கிளர்ச்சி ஏற்படுத்துகிறார்கள். அந்தரங்கமான படுக்கையறை விஷயங்களை தம்பதிகளோ, காதலர்களோ செல்போனில் படம் எடுக்காமல் இருப்பது நல்லது. இன்றைய நவீன யுகத்தில் எல்லாமே காட்சிப்பொருள் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், ஒவ்வொருவரும் தங்களின் அந்தரங்க விஷயங்களை பாதுகாப்பது நல்லது.

ஒருவர் சதாசர்வ காலமும் போர்னோ பார்ப்பதை மட்டுமே வேலையாகச் செய்பவராக இருந்தால், அவர் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். பெற்றோரும் பிள்ளைகளை இந்த விஷயத்தில் பக்குவமாக நடத்த வேண்டும். வீட்டில் பார்க்கக் கூடாது என்றால் வெளியே போய் பார்க்கப் போகிறார்கள். வெளிநாடுகளில் இருப்பது போல ஆண், பெண் நட்பு நம் நாட்டிலும் சகஜமாகிவிட்டால் போர்னோ மீதுள்ள ஆர்வம் இளைய தலைமுறைக்கு இயற்கையாகவே குறைந்துவிடும்.

(தயக்கம் களைவோம்!)