டியர் டாக்டர்* ‘அவர் ஓயாமல் உழைக்க இதுதான் காரணம்’ என்ற இதய சிகிச்சை மருத்துவர் சொக்கலிங்கம் கலைஞரைப் பற்றி சொன்ன ரகசியம் இதயத்தைத் தொட்டது. சிறப்பான அஞ்சலியில் கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய படிப்பினைகள் இருந்தன. ‘ஏன் இந்த அலோபதி வெறுப்பு’ கவர் ஸ்டோரி சரியான தருணத்தில் பல நல்ல கருத்துள்ள விஷயங்களை தெளிவுபடுத்தியது. இதுநாள் வரை இருந்த ‘குடல் வால் பற்றிய ஒரு பயம் அகன்றது. ‘மெட்ராஸ் கீரை’ பிரமாதம்.
- சிம்மவாஹினி, வியாசர்பாடி.

*சித்த மருத்துவர் பானுமதி ‘எண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ’ என்ற கட்டுரையின் மூலம் பலரும் அறியாத வாழைப்பூவின் மருத்துவ மகிமைகளை கூறியவிதம்,
வாழைப்பூவை விரும்பி நாடி உண்ண வைத்தது!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.  

* கூந்தல் பராமரிப்பிற்காக கண்ட இடங்களில் மருத்துவர்களைத் தேடி அலைந்து, ஆயிரக்கணக்கில் பணம் செலவழிப்பதை விட்டு சரும நல மருத்துவரை அணுகுவது சிறந்த வழி என கடந்த இதழில் வெளியான அழகே... என் ஆரோக்கியமே தொடர் புரிய வைத்தது.
- வளர்மதி, செங்கல்பட்டு.

* ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து விடுபட நினைப்பவர்கள், சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும் என டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி இருந்தார். சிகரெட் பிடிக்கும் நண்பர்கள் இதனை உணர்ந்தாவது பழக்கத்தைக் கைவிட வேண்டும். இப்பாதிப்பால் எலும்புகளின் பலவீனம் வெளியில் எதுவும் தெரியாது என எச்சரித்திருந்தார்.
- கோபாலகிருஷ்ணன், மேற்கு தாம்பரம்.

* ‘Upper Body Work out’ பொருத்தமான படங்களுடன் மிகத் தெளிவாக இருந்தது; ‘ஹெல்த் காலண்டர்’ பகுதியில் இடம் பெற்றிருந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்!
- தமிழ்ச்செல்வம், மதுரை.

* கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸ் அவர்கள் ‘மஞ்சள் காமாலை’ குறித்த தகவல்களை நன்றாக புரியும்படி, விளக்கி இருந்தார். மிக அருமை!
- ராமசாமி, செங்குன்றம்.

* ‘ஏன் இந்த அலோபதி வெறுப்பு?! தீர்வுகளைத் தேடுவோம்’ கவர் ஸ்டோரியில், மாற்று மருத்துவம், அலோபதி மருத்துவம் இரண்டிலும் உள்ள சாதக பாதகங்களை அலசி இருந்தது ஒரு தெளிவை தந்தது. மக்கள் குழம்பிக் கொண்டிருக்கும் இந்த இண்டர்நெட் காலத்தில் வந்த ஒரு விழிப்புணர்வு கட்டுரை.
- கங்காதரன், மதுராந்தகம்.