அழகு தரும் வைட்டமின்!



டயட்

‘‘உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து, நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது என்ற பெருமைக்குரிய வைட்டமின் சி, மற்றோர் வகையிலும் சிறப்பு பெறுகிறது. ஒருவர் அழகான தோற்றத்தைப் பெறுவதிலும் இதற்கு மிக முக்கியப் பங்கு உண்டு’’ என்கிற உணவியல் நிபுணர்  ஸ்ரீதேவி, அதன் இன்னும் பல சிறப்புகளை இங்கே விளக்குகிறார்.

*வைட்டமின் சி சத்தினை நம் உடலால் உற்பத்தி செய்ய இயலாது. உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். எனவே, வைட்டமின் சி சத்து குறைபாடு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*வைட்டமின் சி பற்றாக்குறையால் உடல் சோர்வு, உடல் வலி, சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் மாற்றங்கள், பல் மற்றும் ஈறுகளில்  வீக்கம், காயங்கள் குணமடைய தாமதம், ஈறுகளில் ரத்தம் வடிதல், மன அழுத்தம் மற்றும் மன மாற்றங்கள், எடை குறைதல் மூட்டு மற்றும் தசை வலி, தொற்று நோய்கள் போன்றவை ஏற்படும்.

*கொய்யா, அன்னாசி, ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, ப்ராக்கோலி, குடை மிளகாய், பச்சைப்பட்டாணி, கீரை வகைகள் ஆகியவற்றில் வைட்டமின் சி மிகுதியாகக் காணப்படுகிறது.

*ஆன்டி ஆக்ஸிடென்ட் என்ற தன்மையைக் கொண்டவை வைட்டமின் சி உள்ள உணவுகள். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு ஆக்சிஜனேற்ற அழற்சியைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

*ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைப்பதில் வைட்டமின் சி-யின் பணி தவிர்க்க முடியாதது. ரத்த ஓட்டத்தை சீர் செய்து, இதயம் சம்பந்தமான நோயில் இருந்து காக்கும் திறனும் பெற்றது வைட்டமின் சி.

*இன்று உலகையே அச்சுறுத்தி வரும் புற்றுநோயினை வராமல் தடுக்க மிகச்சிறந்த தடுப்பு மருந்து வைட்டமின் சி என்று தைரியமாகச் சொல்லலாம்.

*இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலும், அவை ரத்தத்தில் சீராக உட்கிரகித்துக் கொள்ள வைட்டமின் சி மிகவும் அவசியம். இவை ரத்தத்தின் சிவப்பு அணுக்களை குறையாமல் காக்க உதவுகிறது.

*வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. போதுமான வைட்டமின் சி உணவுகளை சேர்த்துக் கொள்ளும்போது சரும பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். இவை கொலாஜன் உற்பத்தியை தூண்டி நம் சரும ஆரோக்கியத்தைக் காக்கும். வைட்டமின் சி காயங்கள் குணமடையவும் முக்கிய காரணியாக உள்ளது.

*ஜலதோஷம் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற குளிர்காலத்தில் உண்டாகும் உடல் உபாதைகளை வைட்டமின் சிதடுக்கிறது.

*நாள் ஒன்றுக்கு எந்த அளவு வைட்டமின் சி நமக்குத் தேவை என்பதற்கு ஓர் அளவுகோல் இருக்கிறது. இதனை Recommended Daily Allowance(RDA) என்று குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள்.

*RDA - வின் நிர்ணயத்தின்படி 0 முதல் 12 மாதக்குழந்தைக்கு 40 - 50 mg, 3 வயதுக்கு 15 mg, 4 முதல் 8 வயதுக்கு 25 mg, 9 முதல் 13 வயது வரையில் 45 mg, 14 முதல் 18 வயதுக்கு 65 - 75 mg, 19 முதல் 50 வரையிலான ஆணுக்கு 90 mg, 19 முதல் 50 வரையிலான பெண்ணுக்கு 75 mg என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணிகளுக்கு 85 mg அளவும், பாலூட்டும் தாய்க்கு 120 mg அளவு வைட்டமின் சியும் ஒரு நாளில் தேவை.

தொகுப்பு : க.இளஞ்சேரன்