மருத்துவ ஆராய்ச்சிக்கு குளோனிங் குரங்குகள்!புதுமை

அல்சைமர் எனப்படும் மறதி, சிந்திக்கும் திறன் இழத்தல் போன்ற மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கிலிருந்து 5 குளோனிங் குரங்குகளை சீனா உருவாக்கியுள்ளது.

தூக்கமின்மை, மன அழுத்தம், ஞாபக மறதி, சிந்தனை இழத்தல் போன்ற நோய்கள் உள்ள மரபணு மாற்றம்  செய்யப்பட்ட குரங்கு ஒன்றிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் முதல் முறையாக  உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்த கட்டுரை சீனாவில் இருந்து வெளியாகும் National Science Review என்ற ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. இந்த குளோனிங் குரங்கு குட்டிகள் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மூளை அறிவியல் மையத்தில் பிறந்துள்ளன. இன்குபேட்டரில் இந்த குரங்கு குட்டிகள் இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒரே விதமான மரபணு பின்னணியுள்ள குரங்கு குட்டிகளை உருவாக்கியுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய்கள் மனித நோய்களுடன் தொடர்புடையவை. இதற்கு முன்பு அல்சைமர் நோய் ஆராய்ச்சிக்கு எலிகள் மற்றும் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், இவைகள் மனித செயல்பாடுகளில் முற்றிலும்  மாறுபட்டவையாக உள்ளதால் அந்த ஆராய்ச்சி எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. அதனால் மனித உடல் தன்மையுடன் ஒத்துள்ள குரங்குகள் மூலம் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றை தேர்ந்தெடுத்து, அதிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்கு குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கடந்த 2017-ம் ஆண்டு குளோனிங் முறையில் இரண்டு குரங்குகள் உருவாக்கப்பட்டன. விலங்கு  ஆராய்ச்சியில் பின்பற்றப்படும் சர்வதேச நெறிமுறையுடன் இந்த மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

எதிர்காலத்தில் மனித மூளை நோய்களை ஆய்வு செய்வதோடு, அதற்கான மருந்துகள் குளோனிங் முறையில்  உருவாக்கப்படும் குரங்குகளிடம் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்  விலங்குகளின் எண்ணிக்கை குறையும் என்கிறார் இது குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் Mu-Ming Poo.

- க.கதிரவன்