ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிகளை வகுக்க வேண்டும்!செய்திகள் வாசிப்பது டாக்டர்

ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக புதிய விதிகளை வகுப்பதற்காக மத்திய அரசுக்கு மார்ச் 20 வரை சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முறையாக பதிவு செய்யப்படாத ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான மற்றும் தவறான மருந்துகள் விற்பனை  செய்யப்படுவதால் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிகளை ஜனவரி 31-க்குள்  அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த விதிகளை அறிவிக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

அப்போது, ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் தரப்பில், ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு புதிய விதிகளை வகுக்க உள்ள நிலையில், தனி நீதிபதியின் இந்த தடை உத்தரவால் ஆன்லைன் மருந்து நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு ஜனவரி 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய விதிகளை அறிவிக்கக் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்தது நீட்டிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

- கௌதம்