இந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை!



அறிவோம்

ஏறக்குறைய 300 வருடங்களாக சீனாவில்  பயன்படுத்தப்பட்டு வருகிறது செலரி என்ற கீரை.  நாம் உணவின் மீது கொத்தமல்லி தழையை தூவுவது போல சீனர்கள் செலரியைத் தூவுகிறார்கள். சாலட், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றில் செலரி சேர்க்கப்பட்டிருப்பதையும் உணவகங்களில் கவனித்திருப்போம். துரித உணவுகளின் மேல் திரும்பியிருக்கும் இந்தியர்களின் காதலால், இப்போது நம்மிடையேயும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர் மேகலாவிடம் செலரியின் மருத்துவப் பயன்கள் என்னவென்று கேட்டோம்...

‘‘பார்ப்பதற்கு கொத்தமல்லியைப் போல காட்சியளிக்கும் Celery கீரை குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதன் தண்டுப்பகுதி, விதை மற்றும் இலை எல்லாவற்றையுமே உணவாக உட்கொள்ளலாம். இந்தக்கீரை வகை, தொன்றுதொட்டு பயிரிடப்பட்டு வந்தாலும் அதிகம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இதன் ஊட்டச்சத்துக்களையும், நம் உணவில் பயன்படுத்த ஏற்றது என்பதையும் உறுதி செய்கிறது.

செலரியில் வைட்டமின்கள் C, K, A, B6 மற்றும் தாது உப்புக்களான பொட்டாசியம், மெக்னீசியம், மிகுந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் இயற்கை ரசாயனம் பொருந்திய ஃப்ளேவனாய்ட்ஸ், பாலிஃபெனால் நிரம்பப் பெற்ற தாவரச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்தச் சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைப்பதற்கு இதை நாம் இட்லி அல்லது இடியாப்பம் போல் ஆவியில் வேக வைத்துத்தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சத்து குறையாமல் 95 சதவிகிதத்திற்கு மேல் நமக்குக் கிடைக்கும்.

செலரியைக் கொதிக்க வைக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் 40% சதவிகிதத்திற்கு மேல் ஊட்டச்சத்து அழிவு ஏற்படும். எனவே, ஆவியில் வேக வைப்பதுதான் சரியான, பயனுள்ள அணுகுமுறையாகும். செலரி பெரும்பாலும் சூப் வகைகளில் மேலே அலங்கரிக்க பயன்படுத்தி வந்தாலும் அதன் விதைகளை மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

செலரியில் உள்ள ஆன்டி பேக்டீரியல் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட பாக்டீரியாக்களையும், மற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை தடுப்பதோடு, அவற்றை அழித்து தொற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்கிறது.

இது ஒரு சிறுநீர்த் தூண்டியாக இருப்பதோடு, சிறுநீரில் உள்ள யூரிக் அமில அளவையும் குறைக்கிறது. எனவே, சிறுநீர்க்குழாயிலுள்ள தொற்று, சிறுநீரகத்திலுள்ள தொற்றுகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் நீர்க்கட்டிகள் ஆகியவற்றுக்கான சிறந்த தீர்வாகும் என்று சொல்லலாம். செலரி கீரையை ரத்தம் உறைதல் மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் உண்ணக் கூடாது.

செலரி விதையிலிருந்து எடுக்கப்படும் சாற்றில் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பொட்டாசியம், கால்சியம் மிகுந்துள்ள செலரி தசை இறுக்கத்தை குறைத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

செலரி உடலின் கொழுப்பை குறைப்பதால், இதய நோய் வராமல் தடுக்க முடியும். இதிலிருக்கும் தனிப்பட்ட கலவையான கொழுப்புச்சத்தைக் குறைக்கக்கூடிய Butylphthalide(BuPh), கொழுப்பு புரதம், மொத்த கொழுப்பு மற்றும் மிகை ட்ரைகிளிசரைடை குறைக்கிறது. இதனால், இதய நோய் வராமல் தடுக்கிறது

செலரியில் இருக்கும் Polysaccharides மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள், எதிர்ப்பு அழற்சி என்று சொல்லப்படும் உணவாக அமைகிறது. உடலில் ஏற்படும் அழற்சியைப் போக்கக்கூடியதாகும். ஆகவேதான் செலரி வலி நிவாரணியாகிறது. இது கீல்வாதம்(Gout), முடக்குவாதம்(Rheimatoid Arthritis) மற்றும் மூட்டுவலி ஆகியவற்றிற்கும் சரியான உணவாகிறது. இதை உணவில் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் மேற்கூறிய பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

இயற்கை ரசாயனம் அமையப்பெற்றதில் மிக முக்கியமான மூலக்கூறான Apigenin என்பது புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், நரம்பு வளர்ச்சி மற்றும் நரம்பு உயிரணு பெருக்கத்திற்கும் உதவுகிறது. மற்றுமொரு முக்கிய ஃப்ளேவனாயிடான (Luteolin) லூட்டியோலின் புற்றுநோயைத் தடுத்து வலியைக் குறைக்கவும், எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது. டி.என்.ஏ., சேர்மத்தை சரி செய்வதற்கும் ஊக்கமளிக்கிறது.

செலரியில் கலோரிச்சத்து கம்மியாகவும் தேவையான நார்ச்சத்தும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு ஏதுவாகிறது. இதில் மிகக்குறைந்த கிளைசீமிக் குறியீடே உள்ளது. செலரி சிறந்த கல்லீரல் சுத்திகரிப்பு உணவு ஆகும். செலரி முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம், கல்லீரல் நோய்களை தடுக்க உதவும். டையூரிடிக் பண்புகள் கொண்டிருக்கும், செலரி உடலில் இருந்து நச்சுகள், கழிவுகள் மற்றும் மாசுபடுதல்களை நீக்கலாம்.

செலரியின் டையூரிடிக் விளைவு பல செரிமான நன்மைகளை தருகிறது. செலரி சாப்பிடுவதால் உடலில் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளலாம், Bloating என்று சொல்லப்படும் வயிற்று உப்பசம் குறைந்து, செரிமானத்தை அதிகரிக்கலாம்.செலரியில் இருக்கும் Ethanol சாறு, செரிமான மண்டலத்தில்  புண்கள் உருவாவதை தடுக்கக்கூடியது .

அல்சர் பிரச்னை இருப்பவர்கள் ரெகுலராக செலரிச்சாறை எடுத்துக் கொள்வதால் வயிற்றிலுள்ள புண்களை ஆற்ற முடியும். இந்தக்கீரை ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அவர்கள் மட்டும் தவிர்த்து விடலாம். சிறுநீர் தூண்டியாகவும், வலி நிவாரணியாகவும், புற்றுநோய் தடுப்பு, ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு மற்றும் உடல் எடை குறைவதற்கும் வழி வகுக்கும் செலரியின் பண்புகள் யாவும் ஆய்வில் கண்டறிந்த உண்மையாகும்.’’

- இந்துமதி