நீரிழிவு நோயாளிகளின் எலும்பு மூட்டு பாதிப்புகள்



எலும்பே நலம்தானா?!

நீரிழிவு வந்துவிட்டால் உணவு முதல் உடற்பயிற்சிகள் வரை எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அந்தவகையில், எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்னைகள் வரும் வாய்ப்புகளும் உண்டு.
குறிப்பாக, நரம்புகளை பாதிக்கிற டயாபட்டிக் நியூரோபதி, ரத்த தமனிகளில் உண்டாகும் பிரச்னைகள், உடற்பருமன் போன்றவையும் எலும்பு மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.இதுபோல் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பல வகையான எலும்பு, மூட்டு பாதிப்புகளை பற்றி பார்ப்போம்…

நியூரோபதிக் ஆர்த்ரோபதி (Neuropathic arthropathy)
இதை Charcot joint என்றும் சொல்வதுண்டு. நரம்பு பாதிப்பால் மூட்டுகளின் ஆரோக்கியம் மோசமாகி உருவாகும் பிரச்னை இது. நீரிழிவாளர்களுக்கு இது சகஜம். இந்த பிரச்னை பெரும்பாலும் பாதங்களில் அதிகமிருக்கும்.

* அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட மூட்டு பகுதிகளில் மரத்துப்போன மாதிரி உணர்வு, உணர்ச்சியற்ற தன்மை இருக்கும். அந்த பகுதிகள் சூடாகி, சிவந்து, வீங்கி காணப்படும். நிலையற்ற தன்மையோ, சரியான வடிவில்லாமலோகூட இருக்கலாம்.

* சிகிச்சை
சீக்கிரமே கண்டுபிடித்தால் சிகிச்சைகளும் எளிதாகும். பாதிப்பு தீவிரமடைவதையும் தவிர்க்கலாம். அதிக எடை தூக்கும் வேலைகளை தவிர்க்க வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு சப்போர்ட் தரக்கூடிய கருவிகளை உபயோகிப்பது ஓரளவுக்கு உதவும்.

டயாபட்டிக் ஹேண்ட் சிண்ட்ரோம் (Diabetic hand syndrome)
இதற்கும் Diabetic cheiroarthropathy என இன்னொரு பெயர் உண்டு. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கைகளில் உள்ள தோல் பகுதியானது மெழுகுபூச்சுடனும், தடித்தும் காணப்படும். விரல்களது இயக்கமும் குறைவதை உணரலாம். இந்த பாதிப்புக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இது வரலாம் என்று தெரிகிறது.

* அறிகுறிகள்
விரல்களை நீட்டி மடக்க முடியாமல் போகும். இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று தட்டையாக அழுத்த முடியாது.

* சிகிச்சை
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஒரே தீர்வு. பாதிப்பின் தீவிரம் அதிகமாகாமல் இருக்க சில தெரபிகள் உதவலாம். ஆனால் குறைந்துபோன விரல்களின் இயக்கத்தை ரிவர்ஸ் செய்ய முடியாது.

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis)
இந்த பிரச்னையை பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். எலும்புகள் மென்மையாகி, ஸ்பான்ஜ் போல மாறும். அதனால் லேசாக தடுக்கி விழுந்தாலோ, சின்னதாக அடிபட்டாலோகூட எலும்புகள் முறிந்து போகலாம். பொதுவாக பெண்களுக்கு, அதிலும் மாதவிடாய் நின்ற பிறகு இந்த பிரச்னை அதிகம் ஏற்படுவது சகஜம். ஆனால், டைப் 1 நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் தாக்கும் அபாயம் மிக அதிகம்.

*அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் இது பெரிய அறிகுறிகளை காட்டுவதில்லை. நோயின் தீவிரம் அதிகமான நிலையில் உடலே வளைந்து கூன்போட்டது போல மாறும். எலும்புகள் பலவீனமானதால் எளிதில் உடையும். அடிக்கடி ஃபிராக்சர் ஆகும். உயரம் குறைந்த மாதிரி
உணர்வார்கள்.

*சிகிச்சை
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே அடிப்படை. நடைபயிற்சி போன்று தினமும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும். வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகள் முக்கியம். மருத்துவரை சந்தித்து தேவைப்பட்டால் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துகொள்ள வேண்டும். எலும்புகள் மேலும் பலவீனமாவதை தடுக்கவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் சிகிச்சைகள் தேவைப்படும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் (Osteoarthritis)
குருத்தெலும்பு மூட்டு உடைவதால் மூட்டுகளில் ஏற்படுகிற பிரச்னை இது. இது உடலின் எந்த எலும்பை வேண்டுமானாலும் பாதிக்கலாம். டைப் 2 டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம்.

*அறிகுறிகள்
மூட்டுகளில் வலி, வீக்கம், இருகிய உணர்வு, மூட்டுகளை அசைப்பதில் சிரமம்.

*சிகிச்சை
உடற்பயிற்சி மிக முக்கியம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். பிசியோதெரபி, வலி நிவாரண மருந்துகள் போன்றவை தேவைப்படும். பாதிப்பின் தீவிரம் அதிகமானால் சிலசமயம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

டிஷ் (DISH)டிஃப்யூஸ் இடியோபதிக் ஸ்கெலிட்டல் ஹைப்பர்ஆஸ்டோசிஸ் என்பதன் சுருக்கமே DISH.
தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் இருகுவதால் ஏற்படுகிற பாதிப்பு இது. டைப் 2 டயாபட்டீஸ் உள்ளவர்களிடம் இது சகஜமாக காணப்படுகிறது. இன்சுலின் அல்லது இன்சுலின் போன்ற வளர்ப்பு காரணிகளால் உடலுக்குள் புதிய எலும்பு வளரும்.

*அறிகுறிகள்

வலி, இறுகிய தன்மை, இயக்கம் குறைந்த உணர்வு போன்றவற்றை உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் உணர்வார்கள். இது முதுகு பகுதியை பாதித்திருந்தால் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் இறுகிய தன்மையை உணர்வார்கள்.

*சிகிச்சை
வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படும். தேவையில்லாமல் புதிதாக வளர்ந்த எலும்பு வளர்ச்சியை நீக்க அறுவை
சிகிச்சையும் தேவைப்படலாம்.

Dupuytren’s contracture
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விரல்கள் உள்ளங்கையை நோக்கி மடங்கி கொள்கிற பிரச்னை இது. உள்ளங்கையையும், விரல்களையும் இணைக்கிற இணைப்பு திசுக்கள் தடிப்பதே இதற்கு காரணம். நீண்டகாலமாக நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு உடலின் வளர்சிதை மாற்றம் பெரியளவில் பாதிப்படைவதால் இந்த பிரச்னை வருகிறது.

*அறிகுறிகள்
உள்ளங்கை பகுதியில் தடிப்புகளை உணர்வார்கள். விரல்களை மடக்கி நீட்டுவதிலும் சிரமம் தெரியும்.

*சிகிச்சைகள்
வலியையும், அழற்சியையும் குறைக்க ஸ்டீராய்டு ஊசி பரிந்துரைக்கப்படலாம்.
அப்போநியூரோட்டமி என்கிற அறுவை சிகிச்சையின் மூலம் தடித்த திசுக்கள் சரிசெய்யப்படும்.

ஃப்ரோசன் ஷோல்டர் (Frozen shoulder)
தோள்பட்டையில் ஏற்படுகிற கடுமையான வலி இது. தோள்பட்டைகளின் இயக்கமும் குறையும். இது ஒரு தோள்பட்டையை மட்டுமே பாதிக்கும். இதற்கான காரணம் துல்லியமாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் நீரிழிவு நோயாளிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிப்படையாக தெரிகிறது.

*அறிகுறிகள்
தோள்பட்டையில் கடுமையான வலி, தோள்பட்டையை அசைக்கமுடியாத நிலை, அன்றாட செயல்களை செய்ய முடியாத நிலை, தூக்கமின்மை போன்றவை.

* சிகிச்சைகள்
பிசியோதெரபியும், சிலவகையான வலி நிவாரண மருந்துகளும் உதவலாம்.

(விசாரிப்போம் !)

எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி