அளவுக்கு மிஞ்சினால்...



ஆர்த்தோரெக்ஸியா அலர்ட்

‘‘உடல்நலத்தைப் பேணக்கூடிய உணவுகளை மட்டும் பிடிவாதமாகச் சாப்பிடும் உணவுப் பழக்கம் சார்ந்த நோயினை ஆர்த்தோரெக்ஸியா(Orthorexia) என்று சொல்கிறோம். இந்த நோய் உடையவர்களுக்கு எப்போதும் படபடப்பு, பசியின்மை, உணவு உட்கொள்வதில் கோளாறு போன்ற பிரச்னைகள் இருக்கும்.

1997-ம் ஆண்டு அமெரிக்க மருத்துவர் ஸ்டீவன் பிராட்மேன் (Steven Bratman) என்பவர்தான் முதன்முதலில் இந்த நோயை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆர்த்தோரெக்ஸியா என்பது கிரேக்க மொழிச் சொல்.
அதுதான் ஆர்த்தோ என்பதற்கான காரணம். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் Ortho என்ற வார்த்தைக்கு Straight, Right என்றும் பொருள் உண்டு. Orexia என்ற வார்த்தையை பசியைக் குறிக்கும் Appetite என்ற பொருளில் புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி இதற்கும் எலும்புக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்றவர், ஆர்த்தோரெக்ஸியா பற்றி தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கென ஒரு தரமான உணவு என்று தானாகவே வரையறை செய்து அதன்படி பிடிவாதமாகச் செயல்படுவார்கள். தங்களுடைய உடல் எடையைப் பற்றி ஏதும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களாகவே சுத்தமான, தரமான உடல் நலத்திற்கான உணவுகளை நிர்ணயித்துக் கொள்வார்கள்.

செயற்கையாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், மரபணு மாற்ற உணவுகள், பூச்சிமருந்து பயன்படுத்திய உணவுகள், கொழுப்பு, உப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், கால்நடையிலிருந்து கிடைக்கும் உணவுகள் மற்றும் உடல்நலத்தை பாதிக்கும் என்கிற உணவுப்பொருட்கள் போன்றவற்றை இந்நோய் உடையவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றலாம்.

இந்த நோயாளிகள் உடல்நலத்திற்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுப்பதில் பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள். இல்லாத ஆஸ்துமா பற்றியும், ஜீரண கோளாறுகள் பற்றியும், ஒவ்வாமை பற்றியும், மனநிலை பற்றியும் மிகவும் கவலை கொள்வார்கள். அவர்களாகவே ஒவ்வாமையை நினைத்து பல உணவுகளைத் தவிர்ப்பார்கள்.

இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் அதிகம் விரும்புவார்கள். இதனால் அவர்கள் பெரும்பாலான உணவுகளைத் தவிர்த்து விடுவதுண்டு. இவர்கள் சாப்பாடு பரிமாறும் பாத்திரங்கள் சுத்தமாக உள்ளதா, உணவுப் பொருட்களும், உணவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளதா என்றும் அதிகமாக கவலைப்படுவார்கள்.’’

அனோரெக்ஸியா, புலிமியா போன்ற உணவுக்கோளாறுகளில் இருந்து ஆர்த்தோரெக்ஸியா எந்த வகையில் மாறுபடுகிறது?!‘‘உணவைக் கண்டாலே வெறுத்து ஓடும் நோயினை அனோரெக்ஸியா நெர்வோஸா(Anorexia nervosa) என்று சொல்கிறோம். உணவுகளை அதிகம் சாப்பிட்டு, பின் உணவைத் தானாகவே வாந்தி எடுக்க வைக்கும் நோயினை புலிமியா(Bulimia) என்று சொல்கிறோம்.

இந்த இரண்டு நோய்களும் உணவை உட்கொள்ளும் அளவைப் பொருத்தது. இவை இரண்டும் மனநோய்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல தானாகவே சில உணவுகளை உடல் நலத்திற்கு சரியான உணவு என்று கருதி அவைகளை  மட்டும் சாப்பிடுவதை ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஷா (Orthorexia Nervosa) என்று சொல்கிறோம்.

ஆர்தோரெக்ஸியா நோயுடையவர்கள் உண்மையிலேயே தங்கள் உடல்நலத்திற்குத் தேவையான அனேக உணவுகளை அவர்களாகவே தவிர்த்து விடுவார்கள். இதனால் இவர்களுக்கு பல்வேறு உணர்ச்சிகள் மனதளவில் ஓடிக்கொண்டே இருக்கும்.’’
ஆர்த்தோரெக்ஸியாவால் அவர்களின் நிலையில் ஏற்படும் மாற்றம் என்ன?

‘‘ஆர்த்தோரெக்ஸியா பாதிப்புடையவர்கள் எப்பொழுதும் உணவைப் பற்றியும், அதன் அளவைப் பற்றியும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். சரியான உணவு வழிமுறைகளை கடைபிடிப்பதில் கவனமாக இருப்பார்கள். தினமும் அடுத்த நாள் உணவைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களால் தீர்மானிக்கப்பட்ட உடல்நலத்திற்கான உணவை சாப்பிட்டால்  மனதிருப்தியும், ஆன்ம திருப்தியும் அடைவார்கள். மற்றவர்கள் அவர்களைப் போல உணவு உட்கொள்ளும் முறைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களை ஏளனம் செய்வர்.

வீடு தவிர வெளியில் உணவு உட்கொண்டால் அது சரிபட்டு வராது  என்று எண்ணுவார்கள். உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்கும் விஷயத்தில் நண்பர்களோ, குடும்ப உறவினர்களோ  தன்னுடைய கருத்துக்கு ஒத்துப் போகவில்லை என்றால் அவர்களிடம் இருந்து விலகியே நிற்பார்கள். பெரும்பாலும் மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட உணவை விரும்ப மாட்டார்கள். இவர்களுக்கு எப்பொழுதும் மனச் சிதைவும், நேரத்திற்கு ஒரு குணமும், படபடப்பும் இருந்துகொண்டே இருக்கும்.’’

இந்நோயாளிகளின் மனநிலையால் ஏற்படும் பாதிப்புகள்..‘‘உடல்நலத்தைப் பேணுகிற உணவை உட்கொள்கிறோம் என்கிற இந்த நோயாளிகளின் தவறான எண்ணத்தால்  அவர்களுடைய செயல்பாடுகளிலும், வாழ்க்கை முறைகளிலும் மாற்றம் காணப்படும். இதனால் மற்றவர்களுடனான உறவுகள்
பாதிக்கப்படும். அவர்கள் மிகவும் சரியான உணவை உட்கொள்வதாக நினைத்துக் கொள்வதோடு, மற்றவர்களைவிட நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வதுண்டு. இதனால் குடும்ப உறவுகளிலும், நண்பர்களிடமும் உள்ள உறவு பாதிக்கப்படும்.

தனது உணவுப் பழக்க வழக்கம்தான் சிறந்தது என்று எண்ணுவார்கள். அவர்களாகவே தேர்ந்தெடுத்த உணவு குறைவாக இருப்பதோடு அது சரிவிகித உணவாக இல்லாமல் போவதால், அவர்களுக்கு உடல்நலக்கேடு உண்டாகிறது. இதனால் அவர்களுடைய உடல் நலம், மன நலம் மற்றும் இதய நலனிலும் பாதிப்பு உண்டாகிறது.’’

ஆர்த்தோரெக்ஸியாவை முன்கூட்டியே அறிவதற்கான அறிகுறிகள்

1. இந்நோய் பாதிப்பு உடையவர்கள் தங்களுடைய உணவில் என்னென்ன மாதிரியான உணவு வகைகள் சேர்ந்துள்ளது என்று பட்டியலிடுவார்கள்.

2. உணவில் சேர்க்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உடல் நலத்திற்கு என்ன மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கும் என்று எண்ணிக்கொண்டே இருப்பார்கள்.

3. சர்க்கரை, மாவுப் பொருட்கள் மற்றும் கால்நடையிலிருந்து பெறப்படும் பொருட்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்ப்பார்கள்.

4. எல்லா உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள். அவர்களாகவே எது சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறது என்று நினைக்கிறார்களோ அந்த உணவுகளை மட்டுமே உண்பார்கள்.

5. மற்றவர்களுடைய உணவுப் பழக்கவழக்கத்திலும் ஆர்வம் காண்பிப்பார்கள். தான் சாப்பிடக்கூடிய உணவுகளை எப்படி தயார் செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

6. அவர்களாகவே பாதுகாப்பானது என்று எண்ணுகின்ற, உடல் நலத்திற்கான உணவு கிடைக்கவில்லை என்றால்
மிகவும் கவலைப்படுவார்கள்.

7. அவர்களுடைய உடல் மெலிவைப் பற்றியோ, பருமன் பற்றியோ கவலைப்படமாட்டார்கள்.

ஆர்த்தோரெக்ஸியாவுக்கு தீர்வு என்ன?

‘‘மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களுடைய உணவைப் பற்றிய அந்த குறுகிய கண்ணோட்டத்தை நீக்கி,  அனைத்து தரமான உணவுகளையும், சரிவிகித உணவுகளையும் சாப்பிடும்படி செய்ய வேண்டும். மனச்சிதைவும்,  மனப்பிறழ்வும், படபடப்பும், பிடிவாத குணமும் இருந்தால் மனநல மருத்துவரை அணுக வேண்டும். மேலும் உணவுப் பழக்க வழக்கங்களை சீர்படுத்த உணவு பற்றிய ஆலோசகர்களை அணுக வேண்டும்.

இந்நோய் மிகவும் நுணுக்கமாகக் கண்டறியப்பட்ட நோய். சமூகத்தில் முன்பே இந்நோய் காணப்பட்டாலும்  இப்போதுதான் அறியப்படுகிறது. மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்குரிய மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு சரியான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிப்பதன் மூலம் பெரியளவிலான பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.’’

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள். அது உண்மை என்று நிரூபிக்கிறது Orthorexia. பசிக்காகவும், ருசிக்காகவும் பார்ப்பதையெல்லாம் சாப்பிடுகிறவர்கள் ஒரு வகை. அதேபோல், ஒவ்வோர் உணவையும் பார்த்து, கவனமாகத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் விழிப்புணர்வு கொண்டவர்கள் இன்னொரு வகை. ஆனால், இதே விழிப்புணர்வு எல்லை தாண்டினால் என்னவாகும் என்பதற்கு பதில்தான் ஆர்த்தோரெக்ஸியா.

உணவியல் தொடர்பான இந்த ஆர்த்தோரெக்ஸியா பற்றியும், அதற்கு ஏன் ஆர்த்தோ என்று எலும்பு தொடர்பான பெயர் வைக்கப்பட்டது என்றும் எலும்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ராமகுருவிடம் பேசினோம்...

- க.கதிரவன்