உலகின் பெரிய பறவை!



உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப் பெரிய பறவையின் புதைபடிமத்திலிருந்து அதன் மாதிரித் தோற்றத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த இந்தப் பறவையின் எச்சங்களை ஆராய்ந்துள்ளார்கள். இந்த ஆய்வு முடிவு, விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இருபுற இறக்கைகளையும் விரித்தபடி இந்தப் பறவை பறந்தால், அது சுமார் 21 அடி அகலத்தில் இருந்திருக்குமாம். அதாவது ஒரு ஒட்டகச்சிவிங்கியின் உயரம்!

தற்போது உயிர்வாழும் பறவைகளிலேயே அல்பட்ராஸ் என்னும் கடற்பறவைதான் மிகப்பெரிய பறவையாக அறியப்படுகிறது. இதன்  இறக்கைகளின் அகலம் அதிகபட்சம் 10 அடிதான். அப்படிப் பார்க்கும்போது இந்தப் புதைபடிம பறவை அல்பட்ராஸைவிட இரண்டு மடங்கு பெரிய பறவையாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்படும் இந்த பறவையின் உருவத்தை விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கிப் பார்த்தபோது அந்த பறவையின் வடிவைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். இந்தப் பறவையின் உருவத்தையும் எடையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது நிலத்திலிருந்து வானத்துக்கு மேலெழும்பும்போதும் வானிலிருந்து நிலத்துக்குக் கீழிறங்கும்போதும் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த அதீத சைஸே கூட அதன் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனப்படுகிறது.

பெலகோர்னிஸ் சந்தெர்ஸி   (Pelagornis sandersi)   என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தப் பறவையின் புதைபடிமம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டது. இது கடல்நாரையின் முப்பாட்டன்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இது பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது. கூடிய சீக்கிரம் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்த அனிமேஷன் பறவையின் அட்டகாசத்தைக் கூட எதிர்பார்க்கலாம்!

 காவ்யா, சிதம்பரம்.