நெகிழி மாசுபாட்டிலிருந்து விடுதலை வேண்டும்!



தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது, அதன் பயன்பாட்டை குறைப்பது, மறுசுழற்சி அல்லது அப்சைக்கிளிங் (Upcycling) செய்து அவற்றை மீண்டும் பயன்படும் பொருட்களாக மாற்றுவது என பிளாஸ்டிக்கை தவிர்ப்பதற்கான பல்வேறு வழிகள் உள்ளன.
இவ்வகையில், நாம் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பிளாஸ்டிக்குகள் நிலப்பரப்புகளில் கொட்டப்படுவதை தடுக்கும் விதமாகவும், மறுபயன்பாட்டு பொருளாக மாற்றும் விதமாகவும் பிளாஸ்டிக் கழிவுகளை நெசவு செய்து அழகான பைகளாக தயாரித்து வருகிறது மஹாராஷ்டிரா, புனேவில் அமைந்துள்ள ரீசர்க்கா (reCharkha) நிறுவனம்.

“ரீ சர்க்கா என்பதில் ‘ரீ’ என்பது ‘மீண்டும்’ என்பதையும் ‘சர்க்கா’ என்பது ‘நூற்புச் சக்கரம்’ என்று குறிக்கிறது. அதாவது, பிளாஸ்டிக்கை நூற்பு சக்கரத்தின் உதவியுடன் கைத்தறி நெசவின் மூலம் நெய்து அதனை மீண்டும் பயன்படுத்தும் பொருட்களாக மாற்றுவது.
பிளாஸ்டிக் துண்டுகளை நேர்த்தியாக நெய்யப்பட்ட துணியாக மாற்றி அதனை அழகான பைகளாக வடிவமைக்கிறோம். பைகள் எல்லோராலும் எல்லா வகைகளிலும் பயன்படுத்தப்படும் பொருள் என்பதால் அதனை தயாரித்து மக்களிடம் கொண்டு செல்லும்போது பிளாஸ்டிக் மாசுபாடு குறித்தான விழிப்புணர்வும் ஏற்படும்” என்கிறார் ரீசர்க்கா நிறுவனர் அமிதா தேஷ்பாண்டே.

“சிறுவயதிலிருந்தே பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நிலைத்தன்மையை கடைபிடிப்பதிலும் எனக்குள் ஏற்பட்ட ஆர்வம், சுற்றியிருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, கழிவுகளை சரியான வழிகளில் அப்புறப்படுத்துவது போன்றவற்றில் கவனமாக செயல்பட தூண்டியது. இத்தகைய வாழ்க்கை முறையே ரீசர்க்கா நிறுவ காரணம். ஐ.டி துறையில்தான் வேலை பார்த்து வந்தேன்.

ஆனால் அந்த வேலையை காட்டிலும் எனக்கு வேறு சில நோக்கங்கள் இருப்பதை உணர்ந்தேன். சுற்றுச்சூழல் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். பின்னர் வேலையை விட்டுவிட்டு அமெரிக்கா சென்று சஸ்டெயினபிள் பிசினஸ் டெவெலப்மென்ட் (sustainable business development) துறையில் முதுகலை பட்டம் படித்தேன். அப்போது அங்கேயே கழிவுகளை சேகரிக்கும் செயற்கூட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுடன் பங்காற்றும் செயல்திட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டேன்.

நம் தாய் நாடான இந்தியாவிற்கு வந்தும் இதுபோன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டும் எனவும், நம் நாட்டிலும் நிலைத்தன்மை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்பினேன். நம் நாட்டில் தற்போதைய சூழலில் சரிசெய்யப்படவேண்டிய முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வுக்கான முயன்றேன். 

2013ல் இந்தியா திரும்பிய போது நெகிழி மாசுபாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் கிராமப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் போன்றவை எனக்கு முக்கிய பிரச்னைகளாக தெரிந்தன. இம்மூன்றையும் ஒன்றிணைத்து தீர்வுகாண முயன்றபோதுதான் இந்த ஐடியா கிடைத்தது.

பயன்பாட்டிற்குப்பின் நிலப்பரப்புகளிலும் கிடங்குகளிலும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது. பாதிப்புகளை குறைத்துக்கொள்ளும் விதமாக கழிவுகளாகும் பிளாஸ்டிக்குகளை அப்சைக்கிளிங் செய்து மறுபயன்பாட்டு பொருட்களாக தயாரித்து மக்கள் மீண்டும் பயன்படுத்தலாம். அடுத்தகட்டமாக அப்சைக்கிளிங் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை மறுபயன்பாட்டு பொருட்களாக மாற்ற பாரம்பரியமான கைத்தறி நெசவுமுறையை முயற்சி செய்தேன்.

நெய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பைகளாக தயாரித்த போது அது அழகான வடிவமைப்பில் வந்தன. இந்த யோசனையின் மூலம் கிராமப்புற கைத்தறி கலைஞர்களும் வேலை வாய்ப்பினை பெறுவார்கள். இருவேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளில் ஒரே சமயத்தில் ஈடுபட முடிந்தது” என்றவர் இதனை நிலைத்தன்மை கொண்ட தொழிலாக மாற்றியது குறித்து விளக்குகிறார்.

“ஆரம்பத்தில் மறுபயன்பாட்டு பொருட்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது சிரமமாக இருந்தது. ஆனால் நாங்க தயாரிக்கும் பொருட்களை சிறந்த தரத்தில் வழங்கியதால் மறுபயன்பாட்டு பொருட்களின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. பைகளை தயாரிக்க நான்கு படிநிலைகளை மேற்கொள்கிறோம். 

முதலில் பிளாஸ்டிக் சேகரிப்பு. அதில் உள்ள தொற்றுக்கிருமிகளை அகற்றி சுத்தம் செய்வது. நீளமான துண்டுகளாக்கி அவற்றை நூற்பு சக்கரத்தின் உதவியுடன் இழைகளாக மாற்றி கைத்தறி நெசவாளர்கள் துணியாக மாற்றுகின்றனர். 

கடைசியாக கைவினை கலைஞர்கள் அதனை அழகிய பைகளாக வடிவமைக்கின்றனர். முதுகு பைகள், டோட் பைகள், லேப்டாப் பைகள், ஜோலா பைகள், பர்ஸ்கள்... மட்டுமில்லாமல் மேட்கள், அலங்கார பொருட்கள் என பல வகைப் பொருட்களை தயாரிக்கிறோம்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு மறுபயன்பாட்டு பொருட்களை பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர். கார்ப்பரேட் மற்றும் வெட்டிங் கிஃப்ட்டிங் போன்றவற்றிற்கும் எங்களை தேர்ந்தெடுக்கின்றனர். 

எங்களின் பைகளை வாங்கி உபயோகிப்பவர்கள் பிளாஸ்டிக் மாசுபாடு குறைப்பு மற்றும் நிலைத்தன்மையுடன் வாழ்வதில் பங்கெடுப்பதாக கூறுகின்றனர். மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்குகளை அப்சைக்கிளிங் செய்வதின் மூலம் ஜீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் செய்யமுடிகிறது.

இந்தியாவில் புனே மற்றும் மும்பை ஆகிய இரண்டு இடங்களில் எங்களின் கடைகள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும் பொருட்களை விற்பனை செய்கிறோம். பாரம்பரிய கைத்தறி நெசவின் மூலம் பிளாஸ்டிக்குகளை மறுபயன்பாட்டு பொருட்களாக மாற்றுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் எங்களது அப்சைக்கிளிங் யூனிட்டினை பார்வையிட வருகின்றனர். 

மாணவர்களும் எக்ஸ்பிரிமெண்டல் டூர் போன்று வந்து பார்வையிடுவார்கள். ஒரு சமூக அக்கறையுடன் நிலைத்தன்மை சார்ந்த தொழில்முனைவோராக இருப்பது சற்றே சிரமமான காரியம் எனினும், சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைப்பதிலும் பங்கெடுப்பதிலும் நிலைத்தன்மையுடன் வாழ்வதிலும் மன நிறைவு கிடைக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் இருக்கின்ற ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட மக்கள் இணையும்போதுதான் இது போன்ற தொழில்கள் சாத்தியப்படுகின்றன. பிளாஸ்டிக் மறுபயன்பாடு மேம்பாடு மட்டுமின்றி தொழில்முனைவோராக இருந்து கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதிலும் சமூக மேம்பாட்டில் பங்கெடுத்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதால், அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது” என்றவர் தங்களின் நோக்கத்தினை பகிர்ந்தார்.

“நாங்க பிளாஸ்டிக்கை பயன்படுத்துங்கள். அதனை மறுசுழற்சி அல்லது அப்சைக்கிளிங் செய்து கொள்ளலாம் என எப்போதும் சொல்வதில்லை. மறுபயன்பாட்டு தயாரிப்புகள் வாழ்வில் நிலைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வுதான். மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். 

மறுபயன்பாட்டின் மூலம் பிளாஸ்டிக்குகள் நிலப்பரப்பு மற்றும் கிடங்குகளில் சேர்க்கப்படுவது தடுக்கப்படும். மக்கள் அனைவரும் நிலைத்தன்மையை கடைபிடித்து வாழும்போது சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ‘நெகிழி மாசுபாட்டிலிருந்து விடுதலை வேண்டும்’ என்பதே எங்களின் முக்கிய நோக்கம்” என்கிறார் அமிதா தேஷ்பாண்டே.

ரம்யா ரங்கநாதன்