மாணவர்களுக்கும் எனக்குமான பந்தம் தொடர்கிறது!



ஆசிரியர் பிரபாவதி

‘Letter to A Teacher’ என்கிற ஆங்கில நூலைத் தமிழில் அறிமுகப்படுத்திய ஜே. ஷாஜகானின் “எங்களை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க?” என்ற நூல், உணர்வுபூர்வமாக என்னை பாதித்தது. தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் பாதர் மிலானி நடத்திய பார்ப்பியானாவில் சேர்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். 
இதனை உள்வாங்கி, மெதுவாகக் கற்கும் திறனுடையோரின் திறமைகளை நானும் ஊக்கப்படுத்த ஆரம்பித்தேன் என்கிற ஆசிரியர் பிரபாவதி, தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, புதூர் ஒன்றிய பள்ளியின் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக தன்னம்பிக்கையோடு வலம் வருகிறார்.

‘‘எந்தவொரு மாணவனையும் கல்வியால் புறந்தள்ளாது, அவனுக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து ஊக்குவிப்பதே ஆசிரியராக எனது கடமை’’ என்றவர் மேலும் பேச ஆரம்பித்தார்.‘‘அரசுப் பள்ளி ஆசிரியராய் நான் பணி வாய்ப்பு பெற்று 20 வருடங்களைத் தொட்டாச்சு. 
இப்போதும் மாணவர்களுக்கும் எனக்குமான பந்தம் அப்படியே தொடர்கிறது’’ எனப் புன்னகைத்தவர், ‘‘என்னிடம் ஆங்கிலம் படித்த பல மாணவ, மாணவியர் இன்று ஆங்கிலப் பட்டதாரிகளாகவும், அரசுப் பணிகளிலும், ஐ.டி மற்றும் மருத்துவத் துறை சார்ந்து மும்பை, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களிலும் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், என்னிடம் படித்த அந்த மாணவர்கள் மனதில் இப்போதும் நான் இருக்கிறேன்’’ என குழந்தையாய் மாறி உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.

‘‘ஆரம்பத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமப் பள்ளியில் நான் பணியாற்றிய போது, தூத்துக்குடியில் இருந்து, மாணவர்களுக்காக டெக்கான் க்ரானிகல், தி இன்டு யங் வேர்ல்டு இவற்றுடன் இன்னும் சில எளிய ஆங்கிலப் படக் கதைகளுடன் கூடிய புத்தகங்களை மாணவர்கள் படிக்க வாங்கிச் செல்வேன். காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டம் முடியும் போது, ஆங்கில நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை மாணவர்களை வைத்தே வாசிக்க வைப்பேன். இப்படியாக ஆங்கிலத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டினேன்.     

அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் வரும் மாணவர்கள் தலையில் சரியாக எண்ணெய் வைக்காமல், சீருடை அணியாமல் ஒழுங்கற்று வந்து கொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சீர்படுத்தி, கல்வியை நோக்கி கவனத்தை திருப்பவும் முயற்சித்தேன். டவுன் சின்ட்ரோம் குறையுடன் ஒரு பெண்ணும் அப்போது பள்ளியில் இருந்தார். எல்லா மாணவர்களோடு அவரையும் இணைத்து பழக வைத்ததில், குறிப்பிட்ட அந்தப் பெண்ணிடமும் மாற்றம் இருந்தது.

மாணவர்களை படிக்க வைப்பதோடு நிற்காமல், அவர்களின் குடும்பப் பிரச்னைகளையும் காது கொடுத்து கேட்க ஆரம்பித்ததில், கூலித் தொழிலாளர்களான அவர்களின் பெற்றோர், அதிகாலையில் வேலைக்கு சென்றுவிட, மாணவர்கள் சாப்பிடாமல், பசியோடு வருவதை கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களின் பசியை போக்கிய பிறகே படிப்பின் பக்கம் கவனத்தை திருப்ப ஆரம்பித்தேன்.

நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை செய்த நான்கரை ஆண்டும் மாணவர்கள் ஆர்வத்தோடு ஆங்கிலத்தை என்னிடம் கற்க ஆரம்பித்தனர்.  புத்தகம் வாசிப்பதிலும், எழுதுவதிலும் தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி, ஒவ்வொரு மாணவனையும் நீங்கள் என்னவாக மாற விரும்புகிறீர்கள் என அவர்கள் பெயருக்குப் பின்னால் நோட்டில் எழுதச் சொல்லியதில், ஒரு மாணவன் ஐபிஎஸ், இன்னொரு மாணவன் டாக்டர், இன்னொருவன் இஞ்சினியர், ஆசிரியர் என எழுதினார்கள். என்னிடம் படித்த மாணவன் ஒருவன் அவன்  சொன்னபடியே ஐபிஎஸ் தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்றுவிட்டான்.

ஒருசிலர் ஐ.டி. துறையில் இருக்கிறார்கள். சிலர் சொந்தமாக தொழில் செய்கிறார்கள். மாணவி ஒருவர் பெங்களூருவில் ப்யூட்டீசியனாக இருக்கிறார். இன்னொரு மாணவி, சென்னையின் பிரபல மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். ஏபிசிடி தெரியாமல் இருந்த மாணவர்களை ஆங்கிலத்தில் பேச நான் செதுக்கி இருக்கிறேன் என நினைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக நிறைவாக  இருக்கு.

மாணவர்கள் படிப்பதற்குத் தேவைப்படும் அனைத்தையும் அரசு இலவசமாகக் கொடுக்கின்றது. மாணவர்கள் செய்ய வேண்டியது நன்றாகப் படிப்பது மட்டுமே. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாதிரி பள்ளியும் அரசால் செயல்பட்டு வருகிறது. சிறப்பாக படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, மாதிரி பள்ளியில் படிக்க அரசே அழைக்கிறது. பள்ளிக்கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் வரும் இந்தப் பள்ளிகளில் கல்வி, உணவு, உடை, படுக்கை, தங்கும் இடம் என எல்லாமே முதல் தரத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

என்னிடத்தில் படித்த மாணவர்களில் மூவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடுவில் அரசு நடத்தும் மாதிரி பள்ளிக்கு தேர்வாகியுள்ளனர். இதுதவிர, மாணவர்களை கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் ஊக்கப்படுத்தும் கலைத்திருவிழாவும் அரசால் நடத்தப்படுகிறது. 

இதில் சிறந்து விளங்கும் மாணவர்களை கல்வி அமைச்சர் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் செல்கிறார். இத்தனை வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதையும், அதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி, தங்களை கல்வியில் சிறந்தவர்களாக  மாற்ற வேண்டியதன் அவசியத்தை அடிக்கடி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

தாய்மொழி தமிழும், உலகத் தொடர்பு மொழி ஆங்கிலமும் இருந்தால், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்பதை மாணவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவு செய்து வருகிறேன். நான் போட்ட விதைகளில் சில விருட்சமாகவும் மாறியிருக்கு’’ எனப் புன்னகைத்த ஆசிரியர் பிரபாவதி, வாசிப்பு பழக்கம் தனக்கு ஏற்பட்ட கதையையும் தொடர்ந்து விவரிக்க ஆரம்பித்தார்.

வாசிப்பில் எனக்கு ஈர்ப்பு ஏற்படக் காரணம் என் அம்மா வழி தாத்தா. அவர்  மூன்று அலமாரிகள் நிறைந்திருக்கும் அளவுக்கு புத்தகங்களை வாங்கிக் குவித்து வைத்திருந்தார். எனவே எனது பள்ளி விடுமுறை தினங்கள் புத்தகங்களோடுதான் கழியத் தொடங்கியது. 

இதில் அம்புலி மாமா, கோகுலம் போன்ற வாரப் பத்திரிகைகளும் இருக்கும். பொட்டலம் கட்டித் தரப்படும் காகிதங்களில் உள்ள துணுக்கு நகைச்சுவைகளைக்கூட படிக்காமல் விடுவதில்லை. பிறகு லெண்டிங் லைப்ரரியிலும் புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.

கல்லூரி சென்ற பிறகும், எனது வாசிப்பு தொடர, கல்லூரி நூலகத்தில் Women’s Era, Reader’s Digest, Twinkle போன்ற ஆங்கில மாதாந்திரப் பத்திரிகைகள் பரிச்சயமாயின. திருமணத்திற்குப் பிறகு எனது கணவரும் புத்தகப் பிரியராக  அமைய, இருவருமாக எங்கள் வீட்டில் குட்டி லைப்ரரியே ஏற்படுத்தி வைத்திருக்கிறோம்.எனக்கு ஆசிரியர் கனவும் இருந்தது. பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்த நிலையில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக எனது கணவரும் ஆசிரியர் என்பதால், என்னை பி.எட். படிக்க ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு TRB தேர்வெழுதியதில், திருவண்ணாமலை அருகில் உள்ள கருமாரப்பட்டி கிராமத்தில் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றேன். அதுவொரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இதில் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.

மாணவர்களைச் சிறந்த மனிதர்களாகப் பரிணமிக்க வைப்பதே கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இறுகப்பற்றி, ஆசிரியர் பணிக்கான எனது பயணத்தை ஆரம்பித்தேன்’’ என்ற ஆசிரியர் பிரபாவதி, ‘‘வாசிப்பு மட்டுமல்ல எழுதுவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. சிறுகதைகளின் தொகுப்பாக புத்தகம் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறேன். விரைவில் அது வெளிவர இருக்கிறது’’ என்றவாறு விடைபெற்றார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ராஜா சிதம்பரம்