தாய்ப்பால் தானம் கொடுக்க பெண்கள் முன்வர வேண்டும்!
உடல் உறுப்புகள் தானம், ரத்த தானம் என்பது போல தாய்ப் பாலையும் தானம் செய்யலாம். தாய்ப்பால் தானம் கொடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தற்போது பல பெண்களும் தாய்ப்பால் தானம் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். தாய்ப்பாலினை தானம் வழங்குவதை இளம் தாய்மார்கள் இன்று பெருமையாக கருதத் துவங்கியுள்ளனர்.
 தாய்ப்பால் தானம் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும் அதை எப்படி கொடுக்க வேண்டும்... எங்கு, யாரிடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் பல பெண்களுக்கு இன்றும் சந்தேகம் உள்ளது. அது போன்ற சந்தேகங்களை தீர்த்து தாய்ப்பால் தானம் கொடுப்பவர்களின் வீடுகளுக்கே சென்று சேகரித்து அதை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சேவையை செய்து வருகிறார் விசித்ரா செந்தில்குமார்.
 திருப்பூரை சேர்ந்த இவர் தாய்ப்பால் கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கும் சென்றடையும் வகையில் இந்த சேவைப்பணியை செய்து வருகிறார்கள், விசித்ரா தலைமையிலான ரோட்டரி உறுப்பினர்கள். கடந்த ஐந்தாண்டுகளாக தானமாக கொடுக்கும் தாய்ப்பாலை சேகரித்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு வழங்கி வரும் பணி குறித்து விசித்ராவிடம் பேசும் போது...

‘‘எனக்கு சொந்த ஊர் கோவை. கல்யாணமாகி திருப்பூர்ல இருக்கேன். நான் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர். அதுல முழு நேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறேன். திருப்பூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி ஒன்றை தொடங்கியிருந்தார்கள். மருத்துவமனையில் பிரசவத்திற்காக வரும் சில பெண்களுக்கு குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கும். குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும்.
அவ்வாறு பிறக்கும் குழந்தைகளை கண்காணிப்பில் மருத்துவமனையில் வைப்பார்கள். மேலும் சில அம்மாக்களுக்கு உடல் பிரச்னை காரணமாக தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமானது. அதற்காகவே அந்த மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.
இதில் பிரசவத்திற்கு வரும் மற்ற பெண்கள் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் தங்களுடைய குழந்தைகளுக்கு கொடுத்தது போக மீதியை தானமாக கொடுக்கிறார்கள். குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற பிறகும் சிலர் தாய்ப்பால் தானம் கொடுப்பதை தொடர்ந்து வருகிறார்கள்.
அவ்வாறு கொடுப்பவர்களிடம் தாய்ப்பாலினை பெற்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் சேவையைதான் நாங்க எங்க கிளப் மூலமாக செய்ய துவங்கினோம். மேலும் கிளப் மூலம் தாய்ப்பால் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.
அதற்காக மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று தாய்மார்களிடம் பேசி தாய்ப்பால் தானம் கொடுப்பது குறித்து அவர்களுக்கு புரிய வைக்கிறோம்’’ என்றவர், தாய்ப்பால் தானம் கொடுப்பது குறித்து பேசத் தொடங்கினார்.
‘‘பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் தான் அமிர்தம். பிறந்த குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, அறிவாற்றலையும் மேம்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் தாய்மார்களுக்கும் நல்லது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும். தாய்ப்பால் தானம் கொடுப்பதால் தன் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய பால் குறைந்துவிடும் என்கிற எண்ணம் வேண்டாம்.
எந்தளவிற்கு பால் கொடுக்கிறோமோ அந்தளவிற்கு பால் மீண்டும் ஊற ஆரம்பிக்கும். குழந்தை பிறந்த பின், ஓராண்டு காலம் வரை கூட தாய்ப்பாலை தானமாக வழங்கலாம். தாய்ப்பாலை சேகரிப்பதற்கான உபகரணங்களை நாங்களே கொடுக்கிறோம்.
தாய்ப்பாலை 6 மாதங்கள் வரைக்கும் பதப்படுத்தி வைக்கலாம். தற்போது தாய்ப்பால் அதிகமாக தேவைப்படுவதால் தாய்ப்பால் கொடுத்ததும் உடனே குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. எங்களிடம் ஒரு பெண் கடந்த 9 மாதங்களில் அதிகபட்சம் 117 லிட்டர் வரை தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளார்.
நகரங்களில் இருந்து தற்போது கிராமங்களில் இருக்கும் தாய்மார்களும் தாய்ப்பால் கொடுக்க முன் வருகின்றனர். அவிநாசி ஊரகப்பகுதியில் ஏராளமான தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எப்படி தங்களுடைய உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகிறோம். கிராமப்புறங்களில் உள்ள சிலரின் வீடுகளில் குளிர் சாதனப் பெட்டி இருக்காது.
பாலை சேகரித்ததும் அதனை பதப்படுத்த வேண்டும். இல்லையெனில் கெட்டு விடும். தாய்ப்பாலை தானம் செய்ய விரும்புபவர்கள் அது குறித்து எங்களிடம் தெரிவித்தால் போதும். எங்க குழுவில் உள்ளவர்கள் அவர்களிடம் பாலினைப் பெற்று உடனடியாக பதப்படுத்தி வைத்து அதனை தாய்ப்பால் வங்கியில் கொண்டு சேர்த்துவிடுவோம்.
இந்தப் பணியினைதான் நாங்க தற்போது செய்து வருகிறோம். சிலர் அவர்களே நேரடியாக வங்கியில் பாலினை கொடுத்திடுவார்கள். வர முடியாதவர்களுக்கு நாங்க அந்த சேவையினை செய்கிறோம். இதன் மூலம் எண்ணற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கிறது.
குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தை துவங்கி, சரியான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் வரையிலான எல்லா குழ்ந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். முன்பு பிறந்த குழந்தைகளுக்கு பால் பவுடர் கொடுக்கும் நிலை இருந்தது.
இப்போது அதிகளவில் தாய்ப்பால் தானம் கொடுப்பதால் பவுடர் பால் கொடுக்காமல், தாய்ப்பாலே கொடுக்கிறோம் என்று மருத்துவமனை தர்ப்பில் கூறுகிறார்கள். இந்த சேவையை ஒரு இயக்கமாக மாற்றி பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் விசித்ரா செந்தில்குமார்.
மா.வினோத்குமார்
|