முக்கனிகளில் முதற்கனி!
இயற்கை 360°
சித்திரைக் கனியில், முக்கனிகளில் முதற்கனியாக, நமது செந்தமிழ் கனியாக தித்திக்கும் மாம்பழத்துடன் இன்றைய இயற்கைப் பயணத்தை தொடர்வோம்...
“மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்..!” என ஆரம்பக் கல்வியில் இணைந்திருக்கும் இனிய மாம்பழத்தின் தாவரப்பெயர் Mangifera indica. தோன்றிய இடம் இந்தியா மற்றும் மியான்மர்.
 மாம்பழம் என்றதும் பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறங்களோடு, இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் நம் நினைவில் வந்தாலும், எல்லோரும் விரும்புவது சேலத்து மாம்பழம்தான். ஆந்திரா மாநிலத்தில் இது பங்கனப்பள்ளி, கர்நாடகத்தில் தோதாபுரி, தெலுங்கானாவில் ஹிமாம் பசந்த், மகாராஷ்டிரத்தில் அல்போன்சா, கேரளாவில் செந்தூரம், உத்தரப்பிரதேசத்தில் தஸ்ஸேரி, மேற்குவங்கத்தில் ஹிம் சாகர், கோஹித்தூர் என பல்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தப்படுகிறது.

மாங்காய் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்த மேங்கோ, 1498களில் வணிகம் புரிந்துவந்த போர்ச்சுகீசிய வணிகர்களால், ஐரோப்பா வரை கொண்டு செல்லப்பட்டது. நம்மால் பெரிதும் கொண்டாடப்படும் அல்போன்சா மாம்பழத்திற்கு, அந்தப் பெயர் வரக் காரணம், அல்போன்ஸ் எனும் போர்ச்சுகீசிய வைசிராய்.
மிக விலை உயர்ந்த ஜப்பானிய மியசாகி மாம்பழம், பாகிஸ்தானிய சிந்த்ரி, இலங்கையின் கறுத்த கொழும்பன், ஃபிலிப்பைன்ஸின் காரபாவ் என ஏறத்தாழ 1200 வகைகளுடன் உலகெங்கும் மாம்பழம் வலம் வருகிறது.
தனது ஒவ்வொரு சுவையான சதைப்பகுதியிலும், ஓராயிரம் பலன்களைத் தருவது மாங்கனிதான் என்று கூறும் நிபுணர்கள், இதிலுள்ள அதிக நார்ச்சத்து, நீர்த்தன்மை மற்றும் அதிக கலோரிகள், கனிமங்கள், வைட்டமின்கள் நிறைந்தது. ஒரு கப் மாம்பழம், நமது அன்றாட வைட்டமின் சி தேவையை முழுமையாகவும், வைட்டமின் ஏ தேவையை 50%மும் அள்ளித்தருகிறது.
வைட்டமின் பி6 நிறைந்த மாம்பழத்தில், தேவையான அளவு தையமின், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ, பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட கனிம நுண்ணூட்டங்கள் சேர்ந்து, ‘சூப்பர் ஃப்ரூட்’ என நம்மை அழைக்க வைக்கிறது. நிறம், மணம், சுவை தாண்டி, ஒரு மகத்தான பழமாகவும், அத்துடன் மாங்காய், மாம்பூ, மாவிலை, மாங்கொட்டை, மாமரத்துப்பட்டை என மாமரத்தின் அனைத்து பாகங்களும், ஊட்டச்சத்துகளும் மருத்துவ குணங்களும் நிறைந்தவை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களும் மருத்துவர்களும். மாங்கிஃபெரின் என்கிற மஞ்சள் நிற தாதுப்பொருள், மாம்பழத்தின் நிறத்திற்குக் காரணமாகிறது என்றால், டெர்பீன்கள், லாக்டோன்கள், ஃப்யூரோன்கள் மணத்திற்குக் காரணமாக இருக்கிறது. மேலும் க்வர்செடின், கிரிப்டோ-சாந்தின், கெம்ப்ஃபரால், சிட்ரிக் அமிலம், கேஃபிக் அமிலம், காலிக் அமிலம் உள்ளிட்ட ஃபீனாலிக் சேர்க்கைகளும், ஆந்த்தோ-சயனின்களும், 25 வகையான கரோட்டினாய்டுகளும், எண்ணற்ற தாவரச்சத்துகளின் ஆரோக்கிய குணங்கள் ஒன்று சேர்ந்து, மாம்பழத்தை கனிகளின் அரசனாக முடிசூட வைக்கின்றன.
நம்மால் தூக்கியெறியப்படும் மாம்பழத்தின் தோலில் கூடுதல் ஃபீனாலிக் சேர்க்கைகளும், வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து அழற்சிஎதிர்ப்புப் பண்புகளை அதிகரிக்கிறது. விதைப்பகுதியின் தடிமனான பட்டைக்குள் இருக்கும் கெர்னல் எனப்படும் உள்விதையில் மாவுச்சத்து தவிர, அத்தியாவசிய அமினோ அமிலங்களும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன.
இவ்வளவு சத்துகள் நிறைந்த மாம்பழம், ஆரோக்கியமான உணவாகத் திகழ்வது மட்டுமன்றி, அதன் அழற்சி எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு, தொற்றுநோய் எதிர்ப்பு, ரத்த நாள அடைப்பு எதிர்ப்பு உள்ளிட்ட பண்புகளால், பல்வேறு வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.குறிப்பாக, வயிற்று அழற்சி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நாட்பட்ட நுரையீரல் நோய், கண்புரை, மலச்சிக்கல், எலும்புப்புரை ஆகிய நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும், புற்றுநோய் பரவுதலைக் குறைக்கவும் உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த உணவுத் தேர்வாக, கரோட்டீன் உள்ளிட்ட அதன் முக்கியச் சத்துகள், விழி ஆரோக்கியம், எலும்பு மற்றும் தசைகள் வலிமை, சருமப் பாதுகாப்பு போன்றவற்றை அதிகரிக்கிறது. ‘‘இவ்வளவு இனிப்பு நிறைந்த பழம், சர்க்கரையின் அளவைக் கூட்டி, சர்க்கரை நோயாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமல்லவா?’’ என்ற நமது இயல்பான கேள்விக்கு, அதன் அதிக நார்ச்சத்தும், எளிதில் செரிமானமாகாத குறைந்த க்ளைசீமிக் நிலையும், மிதமான அளவில் அனைவருக்குமான முழுமையான ஆரோக்கியமான உணவு என அறுதியிட்டுக் கூற வைக்கிறது. ஆக, குழந்தைகளையும் நம்மையும், ‘‘அப்படியே சாப்பிட” அழைக்கிறது நமது உணவு அறிவியல்.
சுவைக்கு சதை என்றால், முழுமையான ஆரோக்கியத்திற்கு தோலில் உள்ள நார்ச்சத்தும், அதிமுக்கிய தாவரச்சத்துகளும் தான். மாங்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பு கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இலை மற்றும் காம்பில் இருந்து பெறப்படும் மருந்து, குடல் புழுக்கள், தொற்று நோய்களில் இருந்து நம்மை காக்க பயன்படுகிறது.
பறித்தவுடன் உட்கொள்ளப்படும் பழம் மாம்பழமே. அதிகப்படியாக உட்கொள்ளப்படும் மாம்பழத்தில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்தினால் வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கால்சியம் கார்ஃபைடு கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களாலும் வயிற்றுப்போக்கு, வாந்தி, வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்படும் என்பதால், நீரில் ஊறவைத்து, நன்கு கழுவிய பின் உட்கொள்ள வேண்டும்.
மாம்பழத்தின் சுவையை அப்படியே ருசிப்பதுடன், பல்வேறு உணவுகளாகவும் மாற்றி ருசிக்கலாம். இதிலிருந்து பெறப்படும் ஜூஸில், ஐஸ்கிரீம், ஜாம், ஜெல்லி, மில்க் ஷேக், ஸ்குவாஷ், சர்பத், மெரினேட், லஸ்ஸி தயாராகிறது. இதில் தயாராகும் யின் (Yin) டானிக்கை சீனர்கள் ரத்த சோகை, செரிமானம் இன்மை, ஈறுகள் வீக்கம், இருமலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இதன் காய்கள் பச்சடி, சாலட், சட்னி, சாம்பார், மாங்காய் சாதம் போன்றவற்றில் இடம்பிடிப்பதோடு மீன், இறால் போன்ற கடல் உணவுகளின் சுவையை கூட்ட உதவுகிறது. நாவில் ஊறும் ஊறுகாயாக நமது இல்லங்களிலும், ஆம்சூர் பொடியாகவும் வலம் வருகிறது. பதியன்கள் மூலம் பயிரிடப்படும் மா, 5-8 வருடங்களுக்குப் பிறகே காய்ப்புக்கு வந்து, அடுத்த 40-50 வருடங்கள் தொடர்ந்து பலன் அளிக்கும். மா பூக்கத் தொடங்கிய 12 வாரங்களில், குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கொத்துக்கொத்தாக காய்க்கவும் செய்யும். மாம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அல்போன்சா மற்றும் தஸ்ஸேரி வகை மாம்பழங்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விளைச்சலில் உள்ள மாம்பழம், வணிக ரீதியாகப் பயணித்து மெக்சிகோ, ஈக்வெடார், பிரேசில், ஹவாய், கென்யா, நைஜீரியா, மேற்கிந்திய தீவுகள், கம்போடியா என வெப்ப மண்டலப் பிரதேசங்களிலும், இந்தோனேசியா, சீனா, பாகிஸ்தான், மெக்சிகோ, இலங்கை போன்ற நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. மாம்பழத்தை தேசிய கனியாக இந்தியா, பாகிஸ்தான், ஃபிலிப்பைன்ஸ் நாடுகளும், தேசிய மரமாக பங்களாதேஷும் கொண்டாடுகின்றன.
மாம்பழத்தின் சுவை போலவே, சுவையான வரலாறும் இதற்கு உண்டு. மௌரியப் பேரரசர்கள் செல்வச் செழிப்பிற்கென மாமரங்களை பயிரிட்டனராம். முகலாய அரசர்களான பாபர், அக்பர் ஆகியோரின் பிரியமான பழமாக மாம்பழம் இருக்க, மாமன்னர் அலெக்சாண்டரோ, சிந்துவெளியிலிருந்து எடுத்துச் சென்றதும் மாங்கனிகளே.
பகைமையை வென்று, நல்லிணக்கத்தைத் தரும் மந்திரக் கனியாக மாங்கனியை சீனர்கள் கொண்டாடுகின்றனர். காளிதாசர், கம்பரில் தொடங்கி கவிஞர்கள் பாடாத மாங்கனியும் மாமரப் பூக்களும் இல்லை என்றே சொல்லலாம். சிறுவயதில், தோட்டங்களில் திருடித்தின்ற மாங்காய்களை, ‘Mango Walk’ என சிலேடையாக, மேற்கிந்தியத் தீவுகளில் குறிப்பிடுகின்றனர். ஆனால் இன்றைய நமது‘மேங்கோ வாக்’ எத்தனை எத்தனைப் புரிதல்களை நமக்குத் தருகிறது. முக்கனிகளில் முதல் கனியான மாங்கனியுடன் இந்த சித்திரை நமக்கெல்லாம் சிறக்கட்டும்..!
(இயற்கைப் பயணம் நீளும்..!)
வாசகர் பகுதி
எலும்புத் தேய்மானத்தை பாதுகாக்கும் முருங்கை விதை!
வயதாக ஆக எலும்புத் தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்னைகளும் வந்து பாடாய்படுத்தும். எலும்புத் தேய்மானம் அதிகமாக இருந்தால் எழுந்து நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள்.  முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எலும்புத் தேய்மானமும், கால்சியம் பிரச்னை, மூட்டு வலியும் சேர்ந்து வந்திடும். இதனை தவிர்க்க முருங்கை விதைகளை பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்புத் தேய்மானம், கால்சியம் பிரச்னை ஆகியவை ஓடியே விடும். தேவையான பொருட்கள்: முருங்கை விதை - 5 கிராம், நெய் - 1 ஸ்பூன், பால் - 1 டம்ளர், நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது மிகவும் முற்றிய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
இத்துடன் ஒரு டம்ளர் அளவிற்கு பால் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்னைகளும் சரியாகும். சத்து குறைபாட்டால் தலை சுற்றுதல் மற்றும் கண் பிரச்னை, கண் மங்குதல், கால்சியம் குறைபாடு, மூட்டு வலி, எலும்பு பிரச்னை, எலும்புத் தேய்மானம், கால் வீக்கம், கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும். நரம்பு மண்டலத்தை வலுவாக்கி உடலை பலப்படுத்தும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.
|