ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்!



‘‘வாழ்க்கையில் சாதிக்கணும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அந்தப் பாதையை நோக்கித்தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் ஐஸ்வர்யா. இவர் ‘ஐஷுஸ் லேர்னிங் ஸ்பேஸ்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு ஃபோனிக்ஸ் மூலம் ஆங்கில வார்த்தைகளை வாசிப்பது, ஆங்கில இலக்கணம் என அனைத்திற்கான பயிற்சியினை ஆன்லைன் மூலமாக அளித்து வருகிறார்.
‘‘நான் சென்னைப் பொண்ணு. படிச்சதெல்லாம் இங்கதான். என்னுடைய அம்மா சிங்கிள் பேரன்ட்தான். அப்பா, அம்மாவிற்கும் சில மனஸ்தாபம் என்பதால் பிரிஞ்சிட்டாங்க. அம்மா கஷ்டப்பட்டுதான் எங்களை வளர்த்தாங்க. நான் அரசுப் பள்ளியில்தான் படிச்சேன். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே எனக்கு திருமணமானது.

காரணம், அம்மாவுக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை என்பதால் சொந்தத்தில் வரன் பார்த்து என் பாட்டி திருமணம் முடிச்சாங்க. அவங்க ஊர் காஞ்சிபுரம் என்பதால், திருமணத்திற்குப் பிறகு நான் அங்கு செட்டிலாயிட்டேன். ஆனால் என் கணவர்தான் இன்று வரை எனக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். படிப்பு முக்கியம் அதை பாதியில் நிறுத்த வேண்டாம் என்று சொன்னவர் என்னை கல்லூரி பட்டப்படிப்பை முடிக்க சொன்னார்’’ என்றவர், பட்டப்படிப்பை முடித்துவிட்டு பள்ளி ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

‘‘பள்ளி வேலையை நான் தேர்வு செய்ய காரணம், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு என்னால் வேலையும் செய்ய முடியும் என்பதால்தான். பள்ளி வேலைகள் அனைத்தும் நான் கற்றுக் கொண்டேன். என் அம்மாவிற்கு நான் நிறைய படிக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் அரசுத் தேர்வுகளை எழுதினேன். குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு தேர்வு எழுத செல்வேன். பயணம் காரணமாக குழந்தைக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. அதனால் என்னால் வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

அரசு வேலை வேண்டாம் என்று முடிவு செய்து ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக வேலைக்கு சேர்ந்தேன். அந்த சமயத்தில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. சம்பளமும் பாதியானது. வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் எனக்கு தெரிந்ததை ஆன்லைனில் செய்ய விரும்பினேன். அதன் முதல் அத்தியாயமாக ஃபோனிக்ஸ் முறைக்கான பயிற்சி மேற்கொண்டேன். 

அதற்கு காரணம் என் குழந்தை. அவள் வார்த்தைகளை படிக்க மிகவும் சிரமப்பட்டாள். அவளுக்கு வார்த்தைகளை எளிதாக படிக்க ஆங்கில எழுத்துக்களை ஃபோனிக்ஸ் முறையில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதால் நான் அதற்கான பயிற்சி எடுத்தேன். அவளிடம் நல்ல மாற்றம் தெரிந்தது.

அப்போது என் குழந்தை போல் மற்ற குழந்தைகளும் வார்த்தைகளை படிக்க சிரமப்படலாம். அதற்கான பயிற்சியினை ஆன்லைனில் அளித்தால் என்ன என்று தோன்றியது. மேலும் கோவிட் என்பதால் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. உடனே இணையத்தில் ரூ.300க்கு ஃபோனிக்ஸ் வர்க்‌ஷாப் குறித்து செய்தியை வௌியிட்டேன். பத்து பேர் சேர்ந்தாங்க. என்னுடைய பயிற்சிக்கு ‘ஐஷுஸ் லேர்னிங் ஸ்பேஸ்’ என்று பெயர் வைத்தேன்.

இது முழுக்க முழுக்க ஆன்லைன் பிளாட்ஃபார்ம் என்பதால், ெபற்றோர்களும் வீட்டில் குழந்தைகளை ஏதாவது ஒரு பயிற்சியில் ஈடுபடுத்த விரும்பினாங்க. ஒரு பேட்சில் ஐந்து மாணவர்கள் என்பதால், காலை முதல் இரவு வரை வரிசையாக தனித்தனி பேட்சாக பயிற்சியினை ஆரம்பிச்சேன். 

கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள், நண்பர்கள் மூலம் என் பயிற்சி குறித்து தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்தும் மாணவர்கள் சேர்ந்தார்கள். அவர்களின் நேரத்திற்கு ஏற்பவும் பயிற்சி அளித்தேன். இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் என 250க்கும் மேற்பட்ட பசங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்’’ என்றவர், அவரின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தன்னை அவ்வப்போது அப்கிரேடும் செய்து கொள்கிறார்.

‘‘நான் ஃபோனிக்ஸ் மட்டுமில்லாமல், லைஃப் கோச்சுக்கான பயிற்சியும் எடுத்தேன். இப்போது குழந்தைகள் மட்டுமில்லை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் என்னிடம் பயிற்சி பெற வராங்க. எனக்கு சொல்லிக் கொடுக்க பிடிக்கும். அதனால் இப்ப நான் பல அரசுப் பள்ளிகளுக்கு ேநரடியாக சென்று பயிற்சி அளிக்கிறேன். மேலும் மாணவர்களுக்குத் தேவையான ஃபிளாஷ் கார்டுகளையும் தயார் செய்து தருகிறேன்.

இந்த ஃபிளாஷ் கார்டுகளை நானே தயார் செய்து என் பயிற்சிக்காக பயன்படுத்தினேன். ேகாவிட் காலத்தில் எல்லாமே ஆன்லைன் என்பதால், வசதியில்லாத மாணவர்களால் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டார். அதன் பேரில் அந்தக் குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்தேன்.   

ஃபிளாஷ் கார்டுகளை நான் பயன்படுத்துவதைப் பார்த்து வேறொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களின் மாணவர்களுக்கு இதனை ரெடி செய்து தர சொல்லிக் கேட்டார். நான் ஃபிளாஷ்கார்டுகளை கடைகளில் வாங்குவதில்லை. என்னுடைய பயிற்சிக்கு ஏற்ப நானே வீட்டில் தயார் செய்கிறேன். அதை தெரிந்து கொண்டு அவர் கேட்டதால்,
அவருக்கு செய்து கொடுத்தேன். 

அவருக்கு பிடித்துப்போக, அவர் மூலம் பத்து பள்ளியில் இருந்து ஆர்டர் வந்தது. தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்க ஆரம்பிச்சேன். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான ஆங்கில இலக்கண புத்தகங்களை தயார் செய்து வருகிறேன். அதனை இந்த வருடம் பிரசுரிக்க இருக்கிறேன்’’ என்றவர், இந்த நிலைக்கு வர மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

‘‘நான் இந்த வேலையில் சேர்ந்த போது பலரும் என்னை கிண்டல் செய்தாங்க. ‘படிச்சிட்டு ABCD தானே சொல்லித்தர... உனக்கு வேற வேலையே இல்லையா’ன்னு கேட்டவர்களும் இருக்காங்க. அவங்களுக்கு நான் சாதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சாதனைதான். காரணம், இந்தத் தொழில் மூலமாகத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். எனக்கான அடையாளத்தினை ஏற்படுத்தி இருக்கிறேன்.

பெண்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்... உங்களுக்கு தெரிந்த கலையை தொழிலா மாற்றுங்க. வீட்டில் இருந்தபடியே டியூஷன் எடுக்கலாம். 30 பேர் இல்லாமல் பத்து பேர் என பல பேட்சுகளில் டியூஷன் எடுக்கலாம். மேலும் ஆன்லைன் முறையில் வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதுகுறித்த விழிப்புணர்வும் வார இறுதி நாட்களில் நான் கொடுத்து வருகிறேன்’’ என்றவர், ஃபோனிக்ஸ் முறையை பற்றி விவரித்தார்.

‘‘வார்த்தையில் உள்ள எழுத்துக்களை ஒலி மூலம் இணைத்து படிப்பதுதான் ஃபோனிக்ஸ். ஆங்கில வார்த்தைகளை எளிய முறையில் படிக்க உதவும் ஒரு வித கருவி. குழந்தைகளால் எவ்வளவு வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒலி மூலம் அதை எளிதாக அவர்கள் மனதில் பதிய வைக்கலாம். எவ்வளவு பெரிய வார்த்தைகளாக இருந்தாலும் எளிதில் படித்திடுவார்கள். வார்த்தையில் ஆரம்பித்து ஒரு வரி, ஒரு முழு பத்தியும் படிக்க துவங்குவார்கள்.

தற்போது ஆன்லைன் முறையில்தான் பயிற்சி அளிக்கிறேன். அடுத்து குழந்தைகளுக்கு கம்யூனிகேஷன் சார்ந்து பயிற்சி பள்ளி  ஒன்றை  துவங்க  வேண்டும். அங்கு வரும் குழந்தைகள் ஆங்கிலத்தை எளிதாக படிக்கவும், எழுதவும் பயிற்சி அளிக்க வேண்டும். 

ஆங்கிலம் மட்டுமில்லாமல் ஹிந்திக்கான பயிற்சியும் கொடுக்க இருக்கிறேன். கம்யூனிகேஷன் பள்ளி போல் கொண்டு வரணும். குறிப்பாக என்னுடைய கிராமப் பிள்ளைகளின் ஆங்கில மொழியின் ஃபவுண்டேஷன் ஸ்ட்ராங்காக இருக்கணும் என்பதுதான் என் எதிர்கால கனவு’’ என்றார் ஐஸ்வர்யா.

ஷன்மதி