சிறுகதை - அவரவர் வாழ்க்கை



கோவிலில் ஆன்மீக சொற்பொழிவை ரசித்துக் கேட்டு விட்டு அமுதாவும் கணேசனும் இரண்டு பஸ் பிடித்து, வேப்பம்பாளையம் ஸ்டாப்பிங்கில் இறங்கி, இருளடைந்த பாதையில் முக்கால் கிலோ மீட்டர் நடந்து மூச்சு வாங்க அப்பார்ட்மென்ட்டை அடைந்தனர். 
லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த ரஞ்சித் தலையை நிமிர்த்தி வேர்த்துப் பூத்து, களைப்படைந்த அவர்களின் முகங்களை பார்த்ததுமே புரிந்து கொண்டு, ‘‘பஸ்ல வந்தீங்களா?’’ என்றான்.

 ‘‘ஏம்பா, இப்படி கஷ்டப்படுறீங்க? கால் டாக்ஸில வந்திருக்கலாமில்ல?’’ என்று கோபித்துக் கொண்டான். ‘‘அது சரி! டாக்சிக்காரன் ஐநூறு ரூபாயில்ல  கேப்பான். பஸ்ல பழனியில் இருந்து ஈரோடு வந்து போகவே எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு ஆகாதே’’ என்றார் கணேசன் சிரித்துக் கொண்டே. ‘‘அப்பா, சில விஷயங்கள்ல பணத்தை கணக்கு பார்க்கக்கூடாது. நம்ம சவுகர்யம் தான் முக்கியம். இன்னிக்குப் பாருங்க.

வீட்ல டின்னர் செய்யல. ஆபீஸ்ல இருந்து வரும் போதே கவிதாவுக்கு சிவியர் மைக்ரேன். உள்ள படுத்துட்டிருக்கா. ஆன்லைன்ல இட்லி ஆர்டர் பண்ணி வாங்கிட்டேன். டேபிள் மேல இருக்கு. நானும் சுதீஷும் சாப்பிட்டாச்சு. கவிதா ஒண்ணும் வேண்டானுட்டா. நீங்களும் அம்மாவும் போய் சாப்பிடுங்க’’ என்றான் ரஞ்சித். 

முகம் கை கால்கள் அலம்பிக்கொண்டு கணேசனுக்கு பரிமாறிய அமுதா படுக்கையறையில் நுழைந்தாள். வெளிச்சத்திற்கு பயந்து, இரவு விளக்கைக் கூட போடாமல் இருட்டில் படுத்திருந்த  மருமகளின் தோள் தொட்டு மெல்ல உசுப்பினாள். கண்களை சுருக்கியபடி அவளைப் பார்த்து  ‘‘வந்துட்டீங்களா அத்தை?’’ என்று எழுந்து அமர்ந்தாள்.

 ‘‘ஏம்மா, சாப்பிடாம படுத்தா, தலைவலி இன்னும் ஜாஸ்தியாகும். ரெண்டு இட்லி சாப்பிடு. நீ சிரமப்படாதே. நான் இங்கியே கொண்டு வந்து தரேன். கொஞ்ச நேரம் கழிச்சு பால் காய்ச்சித் தரேன் அதையும் குடி. கொஞ்சம் தலைவலி மட்டுப்படும்...’’வேண்டாம் என்று மறுத்தவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். 

தானும் இரவு உணவை உண்டு முடித்து, பாத்திரங்களைத் துலக்கி வைத்து விட்டு, இளம்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூளைப் போட்டு கவிதாவிடம் கொடுத்தாள். ‘’இப்பத் தூங்கும்மா. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? மெதுவா எந்திரி, நான் பார்த்துக்கறேன்’’ என்ற மாமியாரை நன்றி ததும்பப் பார்த்தாள் கவிதா.

 இரண்டாவது படுக்கையறைக்குள் நுழைந்த போது, ‘‘தாத்தா, நேத்து நீங்க சொன்ன ரிடிலுக்கான ஆன்ஸர் என்ன? எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க’’ என்று கணேசனிடம் கேட்டுக்கொண்டிருந்தான் சுதீஷ். அவர் அதை விளக்கமாக சொல்லி முடித்ததும், ஓடி வந்து அமுதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.  

‘‘பாட்டி! எனக்கு பிரகலாதன் கதை சொல்றேன்னு சொன்னியே’’ என்று சலுகையுடன் கொஞ்சினான். அவள் சொல்ல சொல்ல விழிகள் விரிய கேட்டுக்கொண்டே, ‘ம்’ கொட்டினான். கதை முடியும் தருவாயில் அப்படியே பாட்டியின் மடியில் படுத்து உறங்கிப்போனான்.  

கணேசன் பழனியில் உள்ள அரசுப் பள்ளியில் கணக்கு வாத்தியாராக வேலை பார்த்து ஓய்வுபெற்று எட்டு மாதங்கள் ஆகின்றன. மகள் சரிதா திருமணமாகி மதுரையில் இருக்கிறாள். மகன் ரஞ்சித் ஈரோடு கலெக்டரேட்டிலும், கவிதா ஒரு தனியார் அலுவலகத்திலும் பணி புரிகின்றனர். அவ்வப்போது கணேசனும் அமுதாவும் ஈரோடு வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கிச்செல்வர்.

வெளியே போய் வந்த அசதியில் இருவரும் தூங்கிவிட்டாலும், பழக்கத்தின் காரணமாக, சரியாக ஐந்தரைக்கெல்லாம் அமுதாவிற்கு விழிப்பு வந்து, எழுந்து அமர, கணேசனும் கண் விழித்தார்.
 ‘‘ஒரு காபி சாப்ட்டுட்டு, வாக் போயிட்டு வருவோமா அமுதா?’’ புன்னைகையுடன் தலையாட்டினாள்.

பத்து நிமிடங்களில் இருவரும் தயாராகி, கிளம்ப எத்தனித்த போது,  ‘‘தாத்தா, எங்க போறீங்க ரெண்டு பேரும்?’’ கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்த பேரனை வியப்புடன் பார்த்தனர் இருவரும். ‘‘அடப் போக்கிரிப் பயலே, ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட?’’ என்று பேரனின் தலையை அன்புடன் வருடினாள் அமுதா. 

அவர்கள் நடைப்பயிற்சிக்குக் கிளம்பியதை தெரிந்து கொண்ட சுதீஷ், தானும் தாத்தா, பாட்டியுடன் வருகிறேன் என்றான். சாக்ஸ், ஷூ அணிந்து கொண்டு கிளம்பினான். வீட்டுக்கருகில் இருந்த பூங்காவில் அரைமணி நேரம் நடந்தனர். சுதீஷும் உற்சாகமாக அவர்களுடன் நடந்தான். அங்கிருந்த செடி கொடிகளின் பெயர்களை கேட்டுத் தெரிந்து கொண்டான். இடையில் சறுக்கலில் விளையாடி, ஊஞ்சலில் ஆடினான்.

வீடு திரும்பிய போது, நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த ரஞ்சித், ‘’அடேங்கப்பா, லீவு நாள்ல ஒன்பது மணி வரை தூங்கற நம்ம சுதீஷா இது?’’ என வியந்தான்.  ‘‘தாத்தா, பாட்டி கூட ரொம்ப ஜாலியா இருக்குப்பா. ஐ லவ் தெம் அன்ட் வான்ட் டு பி வித் தெம்’’ என்றான் குதித்துக் கொண்டு. ‘‘கேட்டீங்களாப்பா உங்க பேரன் சொல்றதை? நீங்க வந்த இந்த ரெண்டு நாள்லயே அவன் கிட்ட எத்தனை மாற்றங்கள் தெரியுமா?

காலையில எந்திரிக்கறதுல இருந்து, ஸ்கூலுக்கு ரெடியாகறது, சாப்பிடறதுன்னு எல்லாம் கரெக்டா நடக்குது. செல்போனே கதியா இருந்தவன் இப்போ அதை எப்பவாவதுதான் எடுக்கறான்.’’

கையில் காபி டம்ளர்களோடு வந்த கவிதா, ‘‘நானுமே காலைல நிம்மதியா உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுட்டு ஆபீஸுக்கு போறேன். இதுவே மத்த நாட்கள்ல நின்னுக்கிட்டு, எதையோ பேருக்கு கொறிச்சுட்டு ஓடுவேன். மதியமே தலைவலி வந்துடும். இப்ப நின்னு நிதானமா கிளம்ப முடியுது. எல்லாம் அத்தையோட உதவியால’’ என்றாள் பூரிப்புடன்.

சமையல் அறைக்குள் நுழைந்த அமுதா குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து காய்கறிகளை எடுத்து, ஒரு டப்பில் தண்ணீர் பிடித்து அவற்றை அலசினாள். நீர் வடிகட்டும்
பாத்திரத்தில் போட்டு ஒரு ஓரமாக வைத்தாள்.

மீண்டும் ஹாலுக்கு வந்தபோது, ‘‘அப்பா, நான் ஏற்கனவே உங்ககிட்ட கேட்டுக்கிட்ட மாதிரி நீங்க ரெண்டு பேரும் எங்களோடயே இருந்துடுங்க. அதைவிட பெரிய பாக்கியம் எங்களுக்கு எதுவும் இல்லை’’ என்றான் ரஞ்சித்.கணேசன் மவுனமாக மனைவியை ஏறிட்டார். அவள் எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, கவிதா மாமியாரின் முகத்தை ஆவலோடு பார்த்தாள்.

‘‘இல்லைப்பா, இத்தனை நாள் நான் வேலைக்கு ஓடி, உன்னையும், சரிதாவையும் வளர்த்துப் படிக்க வச்சு, கல்யாணம் பண்ணி, எங்க கடமையை செஞ்சி முடிச்சிட்டோம்...’’ அவர் சொல்லச்சொல்ல மகன், மருமகள் இருவர் முகங்களும் மாறின.

 ‘‘இப்ப கொஞ்சநாளாத்தான் நாங்க எங்களுக்கான  வாழ்க்கையை ஆத்மார்த்தமா வாழ ஆரம்பிச்சிருக்கோம்’’ என்ற தந்தையை ரஞ்சித் சற்றே ஆச்சர்யத்துடன் பார்க்க, கவிதா குரோத முகம் காட்டினாள். ‘‘ஏன் அத்தை, நாங்க உங்களுக்கு மூணாவது மனுஷங்களாத் தெரியறமா?’’ வெடுக்கென்ற அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமுதா புன்னகை புரிந்தாள். ‘‘அப்படியெல்லாம் இல்லம்மா கவிதா. 

நான் ரிட்டயரானதுக்கு அப்புறம் கடந்த சில மாசமா அரசுப்பள்ளியில பத்தாவது, பனிரெண்டாவது படிக்கற பசங்களுக்கு இலவசமா ட்யூஷன் எடுக்கறேன். பாவம் அவங்களால ஆயிரக்கணக்கில் செலவழிச்சு, ட்யூஷன் படிக்க முடியாதுல்ல?’’என்றவரிடம்,  ‘‘சரி, நீங்க பாடம் சொல்லித்தறீங்க.

அத்தை என்ன பண்ணறாங்க? படிக்க வர்ற பசங்களுக்கு அட்டென்டன்ஸ் எடுப்பாங்களா? க்ளாஸ் முடிஞ்சு அவங்க போனதுக்கு அப்புறம், அவங்க போட்டுட்டுப் போன குப்பையெல்லாம் வாரி எடுப்பாங்களா?’’ எரிச்சலும், ஆத்திரமும் கலந்து இன்னது பேசுகிறோம் என்கிற நிதானமின்றி அவள் பேச, கணேசனின் முகம் வருத்தத்தில் சுருங்க,  ‘‘ஏய் கவிதா, அறிவில்லை உனக்கு? இப்படித்தான் பேசுவியா?’’ என்றான் ரஞ்சித் கோபமாக.

 ‘‘விடுப்பா. அவளுக்கு நேத்து இருந்த ஒத்தை தலைவலி இன்னமும் சரியாகி இருக்காது. அந்த வலியிலதான் பேசுறா. நான் தப்பாவே எடுத்துக்கல’’  என்றாள் அமுதா நிதானமாக.
 ‘‘இந்தக் குணம்தான் என்னைப் பேச வைக்கிது. 

பொதுவா மாமியார்னா குத்தலும், குறையுமா பேசுவாங்க. மருமகளை குறை சொல்லுவாங்க. ஆனா நீங்க அப்படி இல்லை. தங்கமான குணம். எங்களுக்கு கல்யாணம் ஆன இந்தப் பத்து வருஷத்தில கடிஞ்சு ஒரு வார்த்தை பேசினதில்லை. இப்படி ஒருத்தர் கிடைக்க நான் ரொம்பக் கொடுத்து வச்சிருக்கணும்.

இத்தனை நாள் மாமா வேலை பாத்திட்டு இருந்தாங்க. அதனால நீங்க அங்கியும் நாங்க இங்கயும் இருக்கோம். இப்ப நீங்க ரெண்டு பேரும் வந்து எங்களோட இருந்தா, எல்லோருக்கும் சந்தோஷமா இருக்குமுன்னு நினைச்சேன். 

அதான் உரிமையில அப்படிப் பேசினேன். உங்களுக்கு மகன், பேரன் கூட ஒண்ணா இருக்கணும்னு ஆசையில்லையா அத்தை?’’ ‘‘ஆசையில்லாம இல்லம்மா. ஆனா, இப்பதான் நாங்க ரெண்டு பேரும் எங்களுக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிருக்கோம்’’ என்றாள் அமுதா.

 ‘‘நான் புரியும்படி சொல்றேன் கேளுங்க. சம்பளம் வாங்கிட்டு வேலை பார்த்தப்போ கிடைக்காத ஆத்ம திருப்தியும், சந்தோஷமும், இப்ப வசதி இல்லாத பசங்களுக்கு இலவசமா சொல்லித்தர்றதுல எனக்குக் கிடைக்கிது. அம்பத்தஞ்சு பசங்க என்கிட்ட டியூஷன் படிக்கிறாங்க. சாயந்திரம் ஆறுலருந்து எட்டு வரைக்கும் பாடம் நடக்கும். நம்ம வீட்டு மொட்டை மாடியில் ஷெட் போட்டு எடுக்கறேன்.

தினமும் காலையில எழுந்து குளிச்சிட்டு நானும் அம்மாவும் அடிவாரத்துல கிரி வீதி வலம் வந்து முருகன் கோயிலுக்கு போய் நின்னு நிதானமா தரிசனம் பண்றோம். மனசுக்கு எவ்வளவு இதமா இருக்கு தெரியுமா? அப்புறம், இன்னொரு விஷயம் உங்க அம்மா என்னை விட பிஸி தெரியுமா இப்ப...’’ அவரை இடைமறித்த அமுதா, ஒரு நிமிஷம் இருங்க, இந்தா வந்துட்டேன் என்று எழுந்து உள்ளே சென்றாள்.

இரண்டு நிமிடம் கழித்து திரும்பியவளின் கையில் இருந்த தட்டில் விதவிதமான  காய்கறிகள்.  ‘‘இதைப் பாத்தியா கவிதா? இந்த கத்தரிக்காய், புடலங்காய், தக்காளி, வெண்டைக்காய் எல்லாம் நான் கடையில் வாங்கிட்டு வந்ததுன்னு நினைச்சியா? இல்லை, இதெல்லாம் நானே விளைவிச்சது தெரியுமா?’’ என்றதும் மகனும் மருமகளும் வியந்தனர்.

 ‘‘நம்ம வீட்டுக்குப் பின்னாடி ரெண்டு சென்ட் காலி இடம் இருக்குல்ல. அதுல கீரை, காய்கறிகள் பயிரிட்டு இயற்கை முறையில விவசாயம் பண்றா உங்க அம்மா. தோட்டத்துல மண்ணு கொத்தறது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சறது, இயற்கை உரம் தயாரிக்கிறது, பறிச்ச காய்கறிகளை கடைகளுக்குப் போடுறதுக்குன்னு  உங்க அம்மாவுக்கு ஒரு டீமே உதவுது.’’
 ‘‘அம்மா, என்னம்மா அப்பா என்னென்னமோ சொல்றாரு... நிஜமா?’’ என்றான் ரஞ்சித் வியப்புடன்.

 ‘‘ஆமாம்ப்பா, நம்ம வீட்டுல வேலை செய்யற கனகாவும் அவ கூட்டாளிக நாலஞ்சு பேரும் தான் எனக்கு விவசாயத்தில் கை கொடுக்குறாங்க. ரொம்பப் பாவம் அந்தப் பெண்கள். அவங்க புருஷன்கள் கூலி வேலை செஞ்சுட்டு, வர்ற வழியிலேயே சாராயக்கடைக்கு போய் தண்ணி போட்டுட்டுதான் நைட் வீட்டுக்கே வருவாங்க. 

இதுக உடல் தேய வீட்டு வேலை செஞ்சு சம்பாதிக்கிற நாலாயிரம் அஞ்சாயிரத்துலயும் கை வைக்கிறாங்க. குடும்பம் நடத்த, பிள்ளைகளை நல்லபடியாக படிக்க வைக்க அந்த பணம் காணுமா? என்கிட்ட வந்து அழுது புலம்புன கனகாவுக்கு ஆறுதல் சொல்லி அவளுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதான் இந்த விவசாய ஐடியா. சும்மா கிடக்கிற இடத்துல விவசாயம் பண்றோம்.

பந்தல்ல கொத்துத் கொத்தா காய்ச்சித் தொங்குற அவரை, புடலை, சுரைக்காய், பாத்திகள்ல விதவிதமான கீரைகள்னு எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்னு  மனசுக்கே இதமா இருக்கு. இடம் நம்மளுடையதுனாலும் பெரும்பான்மையான உழைப்பு அந்த பெண்களோடது. அதுல வர்ற வருமானத்தில் 30% மட்டும் நான் எடுத்துக்கறேன். மீதியை அவங்களுக்கு பிரிச்சுக் கொடுத்துடறேன்...’’ அமுதா சொல்லச் சொல்ல இடைமறித்த கணேசன், ‘‘அதுவும் காசாத் தர்றது இல்ல.

 அவங்க பேர்ல அஞ்சு வருஷத்துக்கு ரெக்கரிங் டெபாசிட்ல மாசம் மாசம் நானே கொண்டு போய் போட்டுடறேன். வட்டியோட, பணம் முதிர்வடையறப்ப அவங்களுக்குத் தேவையான செலவுக்காச்சு இல்லையா? அப்புறம் உங்க அம்மா மதிய வேளைகள்ல கூடை பின்னுறது, ஜுவல் மேக்கிங், ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட்னு இலவச வகுப்புகள் வேற நடத்துறா. 

இதுல பக்கத்துல இருக்குற சேரியில் இருந்து ஏழைப் பெண்கள் வந்து கத்துக்கிட்டு பயனடையறாங்க’’ என்றார் ‘‘அடேங்கப்பா! கேட்கவே ரொம்ப ஆச்சரியமாவும், பெருமையாவும் இருக்கு.  உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நல்ல மனசு. ஊருக்கு உதவுற உங்களை எங்க சுயநலத்திற்காக எங்களோட இருக்கச் சொல்றது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை’’ என்று உணர்ச்சி பொங்கக் கூறிய கவிதா  அத்தையை அணைத்துக் கொண்டாள்.

அவர்கள் பேசுவதை எல்லாம் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த சுதீஷ், ‘‘அப்ப தாத்தாவும் பாட்டியும் என்னோட இங்கே இருக்க மாட்டாங்களா? எனக்கு யாரு இனிமே ஸ்லோகம், ரிடில்ஸ், கதை எல்லாம் சொல்லப் போறா? நான் ரொம்ப அன்லக்கி” என சோகத்துடன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான். 

சிறுவனை அப்படியே அள்ளி தன் மடிமேல் அமர்த்திக் கொண்ட கணேசன், ‘‘யாருடா கண்ணா சொன்னது நீ அன்லக்கினு? நாங்க தான் இங்க இருக்க முடியாதே தவிர உன்னைய விட்டுப் பிரியப் போறோம்னு சொல்லலையே. நீ எங்களோட வந்துடு. அங்க பழனியில ஒரு நல்ல ஸ்கூல்ல உன்னை சேர்த்துடறேன். உனக்கு நானே அருமையா பாடம் சொல்லித் தருவேன்.

உங்க அப்பாவும் அம்மாவும் இங்க ஃப்ரீயா வேலைக்கு போயிட்டு வரட்டும். டீலா?’’ என கைகளை உயர்த்த, டீல் என பெருமகிழ்ச்சியுடன் அவர் கைகளை பிடித்துக் கொண்டான் சுதீஷ். ‘‘உண்மையிலே நீ ரொம்ப லக்கிதான் கண்ணா. எங்களை விட தாத்தாவும் பாட்டியும் உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்க. நீ இன்னும் சிறப்பான குழந்தையா வளருவ’’ என கவிதா சொல்ல அதை ஆமோதித்தான் ரஞ்சித்.

எஸ்.விஜயலட்சுமி