லாபம் ஈட்டும் காளான் ஊறுகாய்!
அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் உணவாக காளான் மாறிவிட்டது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சுவைக்கிறார்கள். இதனைக் கொண்டு பலவித உணவுகளை தயாரிக்கலாம் என்பதாலே காளான் உண்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  அதை புரிந்து கொண்ட கோவையை சேர்ந்த ஜீவிதா கிரிசங்கர், இதனை வளர்ப்பது மட்டுமில்லாமல் அதிலிருந்து ஊறுகாயினை தயாரித்து மதிப்புக்கூட்டும் உணவுப் பொருளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார்.  ‘‘எனக்கு சிறிய வயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. என்ன செய்யலாம்னு தெரியல. ஆனால் ஏதாவது செய்யணும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. என் கணவர் தனியாக தொழில் செய்து வந்தாலும், கணவன்-மனைவி இருவரின் வருமானம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நல்லபடியாக நடத்த முடியும் என்று நினைத்தேன். எனக்கு வெளியே சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை.
வீட்டில் இருந்தபடியே ஓரளவு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலை செய்ய நினைத்தேன். முதலில் இட்லி, தோசை மாவு பிசினசை தொடங்கினேன். வீட்டிலேயே மாவு அரைத்து அதை பேக் செய்து பொள்ளாச்சியில் இருக்கும் கடைகளுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். அதில் ஓரளவுக்கு வருமானம் வந்தது.
அந்த சமயத்தில் என் கணவருக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற காளான் வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டார். அவர் கற்றுக் கொண்டதை எனக்கு வீட்டில் வந்து சொல்லிக் கொடுப்பார். முழுமையாக அவர் பயிற்சியை எடுத்து முடித்த பிறகு, இருவரும் சேர்ந்து காளான் வளர்ப்பில் ஈடுபடலாம் என்று முடிவு செய்தோம். அதன் முதல் கட்டமாக கோயமுத்தூரில் உள்ள வேளாண் துறையில் காளான் விதைகளை பெற்று காளான் வளர்ப்பில் ஈடுபட தொடங்கினோம்’’ என்றவர் அதன் வளர்ச்சி முறைகளைப் பற்றி விவரித்தார்‘‘விதைகளை பெற்றவுடன் முதலில் 10க்கு 10 இடத்தில் கூரை அமைத்து 50 பெட் மட்டும் போட்டு காளான் வளர்க்கத் தொடங்கினோம். 2021ல் பட்டன் காளான் வளர்ப்பு அதிகம் இருந்தது. நாங்கள் சிப்பி காளான்தான் வளர்த்தோம். நல்ல விளைச்சல் கிடைத்ததால் அதை விற்பனைக்கு கொடுத்தோம்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 10க்கு 60 மற்றும் 11க்கு 94 என்ற அளவில் இரண்டு கூரைகள் அமைத்து பெரிய அளவில் காளான் வளர்ப்பில் ஈடுபட தொடங்கினோம். ஒரு கொட்டகையில் 1000 காளான் பெட்டும் மற்றொரு கொட்டகையில் 1800 பெட்டும் போட்டுள்ளோம். இந்த காளான்களை 12க்கு 24 அளவு நீளமான பாலிதீன் பையில்தான் உற்பத்தி செய்ய முடியும்.
அப்படி செய்தால் விளைச்சலைப் பார்க்க முடியும். இதைவிட சிறிய பையாக இருந்தால் அதை கூரையில் கட்டும் போது அதன் எடை தாங்காமல்கீழே விழுந்துவிடும். கொட்டகையை பொறுத்தவரையில் சுற்றியும் கூரை அமைத்துள்ளோம். அதன் மூலம் அனைத்து பக்கத்தில் இருந்தும் காற்று உள்ளே செல்லும் வகையிலும், சூட்டை உள்ளே கடத்தாதவாறு சாக்குப்பைகளை ஈரம் செய்து கட்டியுள்ளேன்.
ஒரு படுக்கை அமைக்க 200 கிராம் விதைகள் தேவைப்படும். காளானுக்கான பெட் அமைக்க நாங்கள் மரத்தூள் மற்றும் வைக்கோலை பயன்படுத்துகிறோம். முதன்முறையாக மரத்தூளில் காளான் பெட் அமைப்பது சற்று சவாலாகத்தான் இருந்தது. இந்த மரத்தூளை கேரளாவில் இருந்து வாங்கி வருகிறோம்.
மரத்தூளை சுடுதண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்து மறுநாள் அதை பாலிதீன் பையில் போட்டு விதையை தூவுவோம். தற்போது மரத்தூளில் 20 பெட் இருக்கிறது. மற்ற அனைத்தும் வைக்கோல்தான். வைக்கோலில் காளான் பெட் அமைக்க வைக்கோலை 16 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் உலர வைத்து, பிறகு பாலிதீன் பையில் அடுக்கடுக்காக வைக்க வேண்டும்.
இதில் மொத்தம் 5 அடுக்கு இருக்கும். முதல் அடுக்கில் 5 செமீக்கும், 5வது அடுக்கில் 5 செமீ விதையும் தூவுவேன். நடுவில் இருக்கும் மூன்று அடுக்கில் 8 செமீ இருக்கும் அளவிற்கு படுக்கை அமைத்து விதைகளை தூவுவேன். இதனை உரி போன்று கட்டி தொங்க விடுவோம். அதன் பிறகு காளான் வளர பைகளில் துளையிட வேண்டும்.
கொட்டகையின் சுற்றுப்புற வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். வெப்ப நிலை அதிகமானால், அதனை குறைக்க அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப தண்ணீரை அவ்வப்போது தெளித்தால் காளான் நன்கு வளரும். இதே வெப்பநிலையில் 19 நாட்கள் பராமரிப்பேன். இந்நாளில் காளான் நன்கு வளர்ந்திருக்கும். அதை எடுத்து பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுவேன். காளானை 8 நாளைக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். சராசரியாக ஒரு காளான் படுக்கையில் 65 முதல் 70 நாட்கள் வரை அறுவடை செய்ய முடியும். அதாவது, ஒரு பெட்டில் ஒரு கிலோ காளான் கிடைக்கும். அப்படி பார்த்தால் 2800 கிலோ காளான் அறுவடைக்கு கிடைக்கும். மரத்தூளில் 40 நாட்கள் அமைக்கப்பட்ட படுக்கையில் இருந்து 700 கிராம் மகசூல் கிடைத்துள்ளது’’ என்று தொடர்ந்து பேசிய ஜீவிதா…
‘‘முதலில் வேளாண் துறையில் இருந்து காளான் விதைகளை வாங்கினோம். அதன் பிறகு நாங்களே அதனை தயாரிக்க ஆரம்பித்தோம். அதற்கு வெள்ளை சோளத்தை தான் பயன்படுத்துகிறோம். தரமான சோள மணிகளை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து முக்கால் வேக்காட்டில் எடுத்துவிடுவோம். பிறகு ஒரு மணி நேரம் உலரவிடுவோம். வேகவைத்த சோள மணிகளில் காளான் வேகமாக வளரும்.
இதில் அமில காரத்தன்மை 5-6 வரை இருக்கும். காளான் மைசீலியம் வளர்வதற்கு 7.0 - 7.5 அமில காரத்தன்மை தேவைப்படும். அதனால் நாங்கள் கால்சியம் கார்பனேட் 2%, வெள்ளை சோளத்துடன் கலந்து, 300 கிராம் அளவு சோளத்தினை சிறிய பாலிதீன் பையில் சேர்த்து அதன் வாய்ப்பகுதியில் பி.வி.சி. குழாயை மூடி போல் அமைத்து பஞ்சால் மூடி விடுவோம். பிறகு ஒரு மணி நேரம் ‘ஆட்டோகிளேவ்’ இயந்திரத்தில் வைத்து தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக லேமினார் சேம்பரில் அரைமணி நேரம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி மறுபடியும் ஒரு முறை தொற்று நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கிய மைசீலியத்தை சேர்த்து இருட்டறையில் மூன்று வாரம் வரை வளர செய்ய வேண்டும்.
அந்த சமயம் அறையின் வெப்பநிலை 25 - 28 டிகிரி இருக்க வேண்டும். 10 - 15 நாட்களில் சோளம் வைக்கப்பட்டு இருக்கும் பாலிதீன் பையில் பூஞ்சாண இழைகள் நன்கு பரவிவிடும். இதுதான் தாய் விதை.
இதை ஒரு மாதத்திற்குள் காளான் வளர்க்க பயன்படுத்த வேண்டும். காலம் கடந்தால் காளான் வளர்ச்சியும், வீரியமும் குறைந்துவிடும். காளான் விதைகளை உருவாக்க ஒரு பிரத்யேக ஆய்வுக்கூடத்தினை அமைத்திருக்கிறேன்’’ என்றவர் காளானை ஊறுகாயாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார். ‘‘காளானை அப்படியே விற்பனை செய்வது மட்டுமில்லாமல் அதனை ஊறுகாயாகவும் விற்பனை செய்கிறேன். இதில் ஊறுகாயா என்று முதலில் சாப்பிட யோசித்தார்கள். ஆனால் அதன் சுவை நன்றாக இருப்பதால் பலரும் வாங்கி சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள். மாவு விற்பனை எனக்கு ஒரு அடையாளத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. இன்றைக்கு காளான் வளர்ப்பு மற்றும் ஊறுகாய் இரண்டும் எனக்கு ஒரு பெரிய லேபிளாக மாறிவிட்டது.
நிறைய பேருக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் அவர்கள் இருக்கும் இடம் அதற்கு ஏற்ப இருக்காது. அவர்களுக்காக ஒரு இடத்தை காளான் வளர்ப்புக்கு ஏற்ப மாற்றுவது மற்றும் காளான் வளர்ப்பு மற்றும் ஊறுகாய் தயாரிப்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன். இதன்மூலம் சுயதொழில் செய்ய வேண்டும் என நினைக்கும் அவர்களின் ஆசையும் நிறைவேறும். ஒரு கணிசமான லாபம் பார்க்க முடியும்’’ என்று புன்னகைத்தார் ஜீவிதா.
செய்தி: சாந்தி ராமமூர்த்தி
படங்கள்: சதீஷ் தனபாலன்
|