தேவதைகள் அல்ல சக மனுஷிகள்



இயக்குநர் பா.இரஞ்சித் படங்களில் பெண் பாத்திரங்கள்

பெண்களை தமிழ் சினிமா சித்தரிக்கும் விதம் குறித்து யாருக்கும் பெரிய கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே வார்த்தையில் சொல்வதானால்  பெண் என்பவளை ஒரு பண்டமாகப் பார்க்கும் மனநிலையைத்தான் தமிழ் சினிமா ஆதிகாலந்தொட்டே வளர்த்து வந்திருக்கிறது. ஈவ்டீசிங் தொடங்கி,  பெண்களின் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் காட்சியமைப்புகள், நடனக் காட்சிகள், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களை  தரந்தாழ்ந்தவளாகக் காட்டுதல் இதெல்லாம்தான் நாம் தமிழ் சினிமாவில் வழக்கமாகப் பார்த்தவை.

ஒரு சில இயக்குநர்களே தனித்துத் தெரிவது போல தங்கள் பெண் கதாப்பாத்திரங்களை காத்திரமானதாக படைத்தார்கள்.ஆனாலும் இயல்பை மீறிய  பெண்களாக ஒரு கற்பனையான பெண்ணாகத்தான் அவர்களை பார்வையாளர்களால் பார்க்க முடிந்தது. ஒன்று அவர்கள் விண்ணிலிருந்து இறங்கிய  தேவதைகள் அல்லது  வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தது போன்ற புரட்சி பேசுபவர்கள் என சற்று சலிப்பைத் தரக்கூடிய பெண் பாத்திரங்களை தமிழ்  சினிமா அதிகம் கண்டிருக்கிறது. மிக அரிதாகவே நம் பக்கத்து வீட்டில் பார்ப்பது போன்ற இயல்பான பெண்களையும், அதீத ஆர்ப்பாட்டமில்லாத  யதார்த்தத்தில் போராளித் தன்மை கொண்ட பெண்களையும் பார்க்க முடியும்.

இரஞ்சித் படங்களில் பெண்களை மையமாக வைத்து சினிமா எடுத்தால்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரம் இருக்கும் என்பதில்லை.  ரஜினி போன்ற சூப்பர் ஸ்டாரை வைத்து எடுத்தால் கூட பெண்களை இயல்பான மனுஷி களாகவும் தற்சார்புள்ளவர்களாகவும் தன்மானம்  மிக்கவர்களாகவும் காட்டமுடியும் என இயக்குநர் பா. இரஞ்சித் நிரூபித்திருக்கிறார்.  இதுவரையிலான ரஜினி படங்களில் பெண்களுக்கு பாடமெடுப்பது,  ‘அதிகமா ஆசைப்படுற பொம்பளையும்’ என்று தொடங்கும் வசனங்களும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் புருஷனுக்கு அடங்கி  நடக்கவேண்டியவள் என்று அவளை அடக்கியாளும் ‘மன்னனை’யும்தான் நாம் பார்த்திருக்கிறோம். இரஞ்சித் இயக்கிய ‘காலா’, ‘கபாலி’ ஆகிய படங்கள்  அதற்கு விதிவிலக்கு.  

இரஞ்சித்தின் முந்தைய படங்களான ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ என அனைத்துப் படங்களிலும் பெண்கள் ஆண்களுக்கு அஞ்சாதவர்களாக, தமக்கென்று  சுயபுத்தியோடு சிந்திப்பவர்களாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்களைத் தேடிக்  கண்டுபிடிப்பதில் அவருடைய படங்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கும் என்றாலும் பெண் கதாப்பாத்திரங்களுக்கு ஆட்களைத் தேர்வு  செய்வதில் கூடுதல் கவனம் இருக்கும். ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடிக்க ‘என் உயிர்த் தோழன்’ கதாநாயகியான ரமாவைத் தேடிக்  கண்டுபிடித்துக் கூட்டிவந்ததில் இருந்தே பெண் கதாப்பாத்திரங்களுக்கு அவர்  படங்களில்  எத்தனை முக்கியத்துவம் இருக்கும் என்பதை உணர  முடியும்.

அது போலவேதான் பத்தாண்டுகளுக்குப் பின் நடிகை ஈஸ்வரிராவையும் தமிழ் ரசிகர்களுக்கு ‘காலா’ மூலம் மீண்டும் காட்டியிருக்கிறார். ஈஸ்வரிராவ்  ஒரு தேர்ந்த நடிகை என்பதை நிரூபித்துள்ளார். ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் நாயகன் தினேஷுக்கு அம்மாவாக வரும் மீனாட்சி ஓர் அரங்கக் கலைஞர்.   தலித் தாயாக  அச்சு அசலாக வாழ்ந்திருப்பார். குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாலும் எந்தவிதத்திலும் தன்னை விட்டுக்கொடுக்காத ஒரு  பாத்திரம் அது. அதே படத்தின் நாயகி நந்திதா ஸ்வேதாவுக்கு தமிழில் அதுவே முதல் படம். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றமும்  இயல்பான நடிப்புமாக அவர் அப்படத்தில் வளைய வந்தார். அதன் பின் அதுபோல பல படங்களில் அவர் நடித்தார்.

அதற்கு அட்டகத்தியே காரணம். அதுபோலவே முதல் படம் வேறு படமாக இருந்தாலும் தமிழுக்குப் பொக்கிஷம் போல கிடைத்த நடிகை ஐஸ்வர்யா  ராஜேஷ். ‘அமுதா’ என்கிற அந்த பாத்திரத்தை அத்தனை இயல்பாகக் கையாண்டார் ஐஸ்வர்யா. அமர்ந்து பாத்திரம் துலக்கும் அந்த தன்மையே மிக  இயல்பு. ‘அட்டகத்தி’யில் பெண் பாத்திரங்கள் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். அடுத்து  ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் முக்கியமான பெண்  பாத்திரங்கள் மூன்று. ஒன்று நாயகன் கார்த்தியின் அம்மாவான ரமா. அடுத்து நாயகி கேத்ரீன் தெரசா. அடுத்து கலையரசன் (அன்பு) மனைவியாக  வரும் ரித்விகா. மகன் மேல் அதிக பாசம் உள்ள தாயாக அசலாக நடித்திருந்தார் ரமா.

நாயகி தன் தந்தையோடு போராட்டக் களத்தில் இருப்பவளாகக் காட்டப்படுகிறாள்.  கணவனை இழந்ததும் சுவரில் பெயின்ட்டை முதலில் எடுத்து  வீசுவது ரித்விகா பாத்திரம்தான். கபாலியின் நாயகி குமுதவல்லி ஒரு காவிய நாயகிதான். கணவனுக்காக ஆண்டுக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கும்  அவள் கபாலியைக் கண்டதும் பரவசக் கண்ணீரோடு நிற்கிறாள். வேறு படங்களில் எல்லாம், சூப்பர்ஸ்டார் மகளை ஒருபுறமும் மனைவியை  ஒருபுறமும் அணைத்துக்கொண்டு நின்றிருப்பார். ஆனால் இதில் குமுதவல்லி அவர்களை அணைத்தவாறு நிற்பாள். குமுதவல்லி கிளைமாக்ஸ்  காட்சியில் ‘என்னை யாருன்னு நினைச்சே? கபாலியோட பெண்டாட்டி’ எனச் சொல்லுமிடம் மட்டும் நெருடல்.

மற்றபடி கபாலியின் நடை உடைகளை மாற்றி அமைப்பதில், பிறர் அவனை மதிக்கவேண்டும் என்பதற்காக அவளின் மெனக்கெடலும், ஊரையே  ஆளும் கபாலியாய் இருந்தாலும் ஒரு குரலில் அவனை அடக்கிவிடும் வல்லமையும் கொண்டவளாகவே இருக்கிறாள் குமுதவல்லி. கபாலியின்  மகளாய் வரும் யோகி பாத்திரத்தில் நடித்த தன்ஷிகா அப்பாத்திரத்துக்கு மேலும் வலு சேர்த்திருப்பார். மிகச் சுதந்திரமான பெண் அவள். காசுக்காக  துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுக்கும் பெண் அவள். வழக்கமான சூப்பர் ஸ்டார் படங்களின் பாணியில் இல்லாமல் கபாலியை வில்லன்கள்  சூழ்ந்திருக்க அங்கு வரும் யோகி சண்டையிட்டு அப்பாவைக் காப்பாற்றுகிறாள்.  

ரஜினி படங்களில் இப்படியான காட்சியை இதற்கு முன்பு பார்த்ததில்லை. பெண்களைக் காப்பாற்றவென்றே அவதரித்தவராக சிறு வயதிலிருந்து பார்த்த  ரஜினியை, மகளைப் பார்த்து விக்கித்து நிற்கும் கபாலியாகப் பார்க்கையில் இது இரஞ்சித் படத்தில் மட்டுமே சாத்தியம் எனத் தோன்றுவது இயல்பு.  ‘காலா’ திரைப்படத்தில் காலா  தன் முன்னாள் காதலியை சந்தித்துவிட்டு வந்தபின், ‘நீ மட்டும்தான் போய் பார்ப்பியா? அம்பையில இருக்கும்போது  என்னையும் தப்படிக்கிற பெருமாள் சுத்திச் சுத்தி வந்தான். எனக்கும் இஷ்டந்தேன். நீதான் கட்டிக்கிட்டு வந்துட்டியே. திருநெல்வேலிக்கு ஒரு டிக்கெட்  போடு. நானும் ஒரு எட்டு பார்த்துட்டு வாரேன்’ என்று சொல்லும் செல்வி பாத்திரம் தமிழுக்குப் புதுசுதான்.

ஆணின் பழைய காதலை ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண்ணின் முன்னாள் காதலை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. ‘அழகி’  திரைப்படத்தில் நாயகன் தன் முன்னாள் காதலியை தன் வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொள்வதுபோல ஒரு நாயகியால் செய்ய முடியுமா தமிழ்  சினிமாவில்? அநேகமாக அடுத்தடுத்த பா.இரஞ்சித் படங்களில் இது சாத்தியமாகக் கூடும் என்பதற்கு சாட்சியாய் இந்த ஒரு காட்சி இருக்கிறது.  பெண்களுக்கு சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் காட்சியொன்று உண்டு.

வில்லன் ஹரிதாதாவின் கால்களைத் தொட்டு வணங்கும் பெருமாள் சாமி பாத்திரம் சரீனாவையும் தொட்டு வணங்கச் சொல்லுமிடத்தில் அவளையும்  காண்பித்து அருகில்  உள்ள கடவுள் சிலை ஒன்றை காண்பித்து அடுத்த ஷாட்டில் சரீனா கோபமாக வெளியேறுகிறாள். அந்த முகத்தில் அசூயையுடன்  கூடியதொரு சொல்ல வொண்ணா எரிச்சல் மண்டியிருக்கிறது. உள்ளே என்ன நடந்தது? அவள் காலில் விழாமல் கோபமாக வெளியேறினாளா அல்லது  காலில் விழ வைத்துவிட்டார்களே என்கிற கோபத்தோடு செல்கிறாளா என்பதை படம் பார்ப்பவர்களின் யூகத்துக்கே விட்டுவிட்டாலும், சரீனாவின்  முகத்தில் தோன்றும் பாவம் அவள் காலில் விழவில்லை என்றே சொல்கிறது.

‘மும்பையில் தனியா ஒரு பொம்பளை...ஏதாவது ஹெல்ப் வேணும்னா பண்ணு’ என்று சொல்லும் ஒருவன் காலில் இரஞ்சித்தின் பெண் பாத்திரம் விழ  வாய்ப்பே இல்லை என்று நாம் நம்பும் அளவுக்கு இதற்கு முன்னான அவரது பெண் கதாப்பாத்திரங்கள் தன்மானத்தோடு இருக்கின்றன. சரீனாவை  நோக்கி காலா ‘லூஸு மாதிரி பேசாதே’ என்று சொல்லும்போது அவள் வெடிக்கிறாள். “யாரு லூஸு? நானா? நான் யாருன்னு எனக்குத் தெரியும்” என்று  சீறுகிறாள். அவளே ஹரிதாதாவிடம் ஒரு கூட்டம் முடிந்தபின் கைகொடுத்துவிட்டு ‘‘கைகொடுத்துப் பழகுங்க சார். அதுதான் ஈகுவாலிட்டி. கால்ல  விழச் சொல்றது இல்லை” என்று குத்திக்காட்டி சமத்துவம் என்றால் என்னவென காட்டுகிறாள்.

படத்தின் இன்னொரு பாத்திரமான புயல் முதல் காட்சியிலேயே ‘எங்க வேலை எங்களுக்கே... எங்க நிலம் எங்களுக்கே’ என முழக்கமிடும்  கலகக்காரியாக வருகிறாள். ‘இவங்களுக்கு திருப்பி அடிக்கத் தெரியாது’ என்று சொல்லும்போது வந்து திருப்பி அடித்துவிட்டு ‘கொடி பிடிக்கவும்  தெரியும், திருப்பி அடிக்கவும் தெரியும்’ என்கிறாள் அத்தனை சூடாக. ‘என்ன காலா! எப்டி வரணும். குனிஞ்ச தலை நிமிராம மாமனார், மாமியார்  முன்னாடி வரணுமா?’ என்று கிண்டல் செய்கிறாள். எல்லாவற்றையும் விட முக்கியமான காட்சி ஒன்று காலாவில் உண்டு. காக்கி அணிந்த  காவலர்களால் அவளுடைய உடை உருவப்பட்டு தரையில் கிடக்கிறது.

அந்த உடைக்கு அருகிலேயே லத்தி ஒன்று கிடக்கிறது. கணநேரத்தில் அவள் முடிவுசெய்து உடையை விட்டுவிட்டு லத்தியை எடுத்து அவர்களைத்  தாக்கத் துவங்குகிறாள். உடல் சிலிர்த்துப்போன காட்சி அது. பெண் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்கிற தெளிவோடு இருக்கிறாள் புயல்.  இதுவரையிலான தமிழ்த் திரைப்படங்களில் இப்படியான காட்சிகளில் நாயகன் வந்து அவன் போட்டிருக்கும் சட்டையை தூக்கியெறிய நாயகி அதை  அணிந்து கொண்டு பயந்து நடுங்கிக்கொண்டு நிற்பாள். நாயகன் வில்லன்களிடம் சண்டையிடுவான். இந்தக் காட்சிகளைக் கண்டு சலித்த கண்களுக்கு  பெண் விஸ்வரூபமெடுக்கும் இக்காட்சி சிலிர்க்க வைப்பதில் வியப்பில்லை.

கணவன் மேல் பொசஸிவ்நெஸ் என்கிற பெயரில் அவனைப் போட்டு வாட்டியெடுக்காமல் முன்னாள் காதலி மீதான அன்பைப் புரிந்துகொள்ளும்  செல்வி பாத்திரம்  அவ்வப்போது  செல்லமாய்  கோபித்துக்கொள்வதையும் நம்மால் ரசிக்க முடிகிறது. இந்த மூவருக்குமிடையேயான உறவுச்சிக்கலை  படம் உருவாக்கவே இல்லை. ‘செல்விக்கு அவநம்பிக்கை வரும்படி எதுவும் செய்யக்கூடாது’ என்று காலா சொல்லுமிடத்தில் ‘என்ன கரிகாலன். நான்  உன் சரீனா இல்லை. நான் ரொம்ப மாறிட்டேன். என்னால் உன் வாழ்க்கையில் இரு சின்ன கீறல் கூட வராது’ என்று சொல்லும் சரீனா உயர்ந்து  நிற்கிறாள்.

கிளைமாக்ஸ் காட்சியில் தாராவியின் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் காலாவின் முகமூடியை அணிவித்ததில் இருக்கிறது இயக்குநரின்  சமத்துவம். ஹரிதாதாவின் முகத்தில் முதலில் கருமையைப் பூசுவது ஒரு பெண் குழந்தைதான். அந்த கருப்பு நெருப்பாய் பற்றிக்கொள்கிறது. பின்  சிவப்பாகவும் நீலமாகவும் வர்ண ஜாலமாகவும் மாறி வில்லனை  வதம் செய்வதை இப்படியும் வண்ணமயமாகக் காட்டலாமா என்கிற பிரமிப்பையும்  ஏற்படுத்துகிறது. தன் முதல் படத்தில் பெண்களை சித்தரித்த விதத்திலிருந்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசப்பட்டு பெண்களை சித்தரிக்கும் விதம்  மென்மேலும் மெருகேறுவதையும் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் மேலும் காத்திரமாக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்துகொள்கிறோம்.

பெண்களை போகப் பொருளாக்கும் காட்சிகள் கிடையாது. அவர்களை ஆபாசமான உடையோடு ஆடவிடும் காட்சிகள் கிடையாது. பெண்களைக்  கேவலப்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. இதெல்லாம் இருந்தால்தான் ஒரு திரைப்படம் வெற்றிபெறும் என்றோ அல்லது இதுதான்  பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லியோ இனியும் மக்கள் மேல் பழிபோட்டு தமிழ் சினிமா தப்பிக்க முடியாது. ஏனெனில் இரஞ்சித்தின்  படங்களில் பெண்களை மக்கள் அப்படி ரசிக்கிறார்கள். இனியும் பெண்களை சித்தரிக்கும் விதம் மாறவில்லையெனில் அது பார்வையாளர்களின் குற்றம்  அல்ல. தமிழ் சினிமா இயக்குநர்களின் குற்றம்.

கவின் மலர்