ஹிலாரி கிளின்டனின் ஆசை



நன்றாக நடக்கும் மற்றும் நிறைய சம்பளம் தரும் நிறுவனம் பற்றி அறியும் போது நம்மில் பலருக்கு, ஆஹா இதில் நமக்கு வேலை கிடைத்தால் மிக  நன்றாக இருக்குமே என எண்ணுவது உண்டு! ஆனால் இது சாதாரண மனிதர்களின் சிந்தனை மட்டுமல்ல, பெரிய பிரபலங்களுக்கும் இத்தகைய  எண்ணங்கள் வரலாம் என நிரூபித்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன்.

இவர் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். சமீபத்தில் ஹார்வார்ட் பல்கலைக்கழகம்  தந்த ஒரு விருதை வாங்க வந்த இவரிடம், ‘‘அரசியலில் இல்லாமல் ஒரு நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக பணிபுரிய நினைத்தால் எங்கு  சேருவீர்கள்?’’ எனக் கேட்டதற்கு ‘பேஸ்புக்’ எனக் கூறினார். அதற்கு அவரே உடனே காரணமும் கூறினார். ‘‘பொய்யோ நிஜமோ.. இன்று மிக அதிக  செய்தி தகவல்களை வழங்கும் நிறுவனம் அதுதான்..!’’

அலைஸ் சுமோ

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்று லைபீரியா. இங்கு மக்கள் புரட்சி நடந்துள்ளது. ‘எபோலா’ தொற்று வியாதி தாக்கி 5000-க்கும் அதிகமானோர்  இறந்துள்ளனர். ஆனால் இவை யாவும் படத்திலுள்ள ‘அலைஸ் சுமோவை’ ஒதுக்க இயலவில்லை. இவர் மிட்ஏய்ப்- மான்ட் செர்ரடோ பகுதியில் கடந்த  30 வருடங்களாக, தன்னுடைய கிளினிக் மூலம் 1000க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்க உதவியுள்ளார். இந்த வகையில் இவருடைய முதல்  குழந்தை துப்பாக்கி முனையில் ஒரு தெருவின் பக்கவாட்டில் மிரட்ட, விரட்ட பிறந்தது.

புரட்சி... கொடும் வியாதி ஆகியவற்றை அலட்சியம் செய்து இந்த பகுதியில் 1000-க்கும் அதிகமான குழந்தைகள், பத்திரமாய் பிறக்க உதவி செய்தார்.  இதற்கு நன்றியாக இந்த பகுதி மக்கள் பெண் குழந்தைக்கு இவர் பெயரான அலைஸையும், ஆண் குழந்தைக்கு அலெக்ஸ் எனவும் பெயரிட்டு  கௌரவப்படுத்தியுள்ளனர். இவர் கிளினிக்கில் கூப்பிடு குரல் வந்ததும், சென்று அழைத்து வர மோட்டார் பைக் உண்டு. சூரிய சக்தியால் இயங்கும்   ஃப்ரிட்ஜ், சுத்த தண்ணீர் அடிக்க பம்ப் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவருடைய முயற்சிக்கு ‘‘Save the Children’’ என்ற சேவை அமைப்பு  உதவுகிறது.

- வைஷ்ணவி, பெங்களூரு.