நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!



எல்லோரும் தொழில்முனை வோர் ஆக வேண்டும் என்பதுதான் அனைவருடைய  விருப்பம். ஆனால் என்ன தொழிலில் முதலீடு செய்வது?  முதலீட்டிற்கு கூட பணம் இல்லாதவர்கள் எப்படி வங்கிகளில் கடனுதவி பெறுவது குறித்து கடந்த 11  ஆண்டுகளாக ஆலோசனைகளை வழங்கி  வருகிறது, ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்.’ இது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  ஆண்டு தோறும் ஜூன் மாதம் இச்சங்கம் மாநாடும் இரண்டு நாள் கருத்தரங்கமும் நடத்தி வருகிறது.

இதில் 1000க்கும்  மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகிறார்கள். இந்த ஆண்டும் மாநில மாநாடு மற்றும்  கருத்தரங்கத்தை நடத்த தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் மாநில செயலாளர்  மல்லிகாவிடம் பேசினேன். “கடந்த 11 ஆண்டுகளாக இந்த மாநாடும் இரு நாள் கருத்தரங்கமும் நடத்தி வருகிறோம். இதுவரை 200க்கும் மேற்பட்ட  தொழில் முனைவோர்கள் இதனால் பயன் பெற்றிருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் பெண்களை உருவாக்கி வருகிறோம்.

தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சேலம், நாமக்கல், சிவகங்கை, திருப்பூர், தஞ்சாவூர், ஈரோடு போன்ற இடங்களில் தமிழ்நாடு மகளிர்  தொழில் முனைவோர் சங்கத்தின் கிளைகளை உருவாக்கி பல பெண்களின் வாழ்வாதார தேவைகளை எதிர்கொள்ள உதவி செய்து வருகிறோம். இந்த  ஆண்டு ஜூன் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் ‘மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் மத்திய,  மாநில  அரசுகள் உதவியுடன் நடைபெற உள்ளது.

பல்வேறு தொழில் துறை  அதிகாரிகள், தொழில் ஆலோசகர்கள், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், சிறு, குறு மற்றும்  நடுத்தர தொழில்கள், தேசிய சிறு தொழில் கழகம், கதர் கிராமத் தொழில்கள், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம், அனைத்து வங்கிகள், சிறந்த  பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தொழில் முனைவோர் சங்கங்கள் ஆகியவற்றிலிருந்து கருத்தாளர்கள் கலந்து கொண்டு  தொழில் தொடங்க  ஆலோசனை வழங்க உள்ளனர். எங்கு எப்படிப்பட்ட லாபகரமான தொழில்/வியாபாரம் தொடங்கலாம்?

அரசு வங்கிக்கடன், உதவி, மானியம், பயிற்சி பெறுவது எப்படி? ஏற்றுமதி செய்வது எப்படி? மத்திய, மாநில  அரசின் புதிய தொழில் மற்றும் ஏற்றுமதி  கொள்கைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தொழிலை தேர்ந்தெடுத்து அதற்கு தேவையான பயிற்சி அளித்து செயல்திட்ட  அறிக்கையை தயாரித்து, வங்கி மூலம் மானியத்துடன் கூடிய அரசு திட்டங்கள் மூலம் கடனுதவி பெற்று, இயந்திரம் வாங்குதல், உற்பத்திக்கான  மூலப்பொருட்கள் வாங்க, உற்பத்தி செய்த பொருட்களை சந்தையிட என பல்வேறு ஏற்பாடுகள் செய்து சிறப்பாக தொழில் நடத்த ஆலோசனைகள் இந்த  மாநாட்டில் வழங்கப்படும்.  

சுயதொழில் செய்ய விருப்பம் உள்ள அனைவரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு மகளிர் தொழில்  முனைவோர் சங்கத்தின் நோக்கம். இந்த இரண்டுநாள் கருத்தரங்கம் திருச்சியில் உள்ள செயின்ட் பால்ஸ் காம்ப்ளக்ஸ்  முதல் தளத்தில்  நடைபெறுகிறது. இந்த அமைப்பு இல்லாத மாவட்டங்களில் உள்ள மக்கள் எங்களுடைய தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டால் அவர்களுக்கு  தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். தன்னம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்களாக இருந்தாலே போதும், நீங்களும் தொழில்  முனைவோர் ஆகலாம். மக்கள் அறிந்திடாத அரசு திட்டங்களை மக்கள் பயன் பெற்று வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதுதான்  எங்களுடைய முக்கிய நோக்கம்” என்கிறார் மல்லிகா.  

பயிற்சி வழங்கப்படும் தொழில்கள்

* இன்ஜினியரிங் ஃபேப்ரிகேஷன்
* பாக்குமட்டை தட்டு
* சணல் பைகள்
* வாழை நாரில் கைவினைப் பொருட்கள்
* உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள்
* பனியன் வேஸ்டிலிருந்து கால்மிதியடி தயாரித்தல்
* பேப்பர் தட்டு,பேப்பர் பைகள், சானிடரி நாப்கின் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி
* கார் ஓட்டுநர் பயிற்சி மற்றும் தொழில் தொடங்குதல்
* அழகுக்கலைப் பயிற்சி
* கால் டாக்ஸி மற்றும் டிராவல்ஸ்
* உடற்பயிற்சி மையம்
* மூலிகை ஹேர் ஆயில்
* கேட்டரிங்
* பினாயில், சோப் ஆயில்
* சிறுதானிய மதிப்புக்கூட்டு பொருட்கள்
* மாடித் தோட்டம் அமைத்தல்

ஜெ.சதீஷ்