கலர்ஃபுல் வெள்ளக்கார துரை!



‘லிங்கா’, ‘கயல்’ என சுனாமி படங்களுக்கு இணையாக வெளியாக வுள்ள படம் எஸ்.எழில் இயக்கியுள்ள ‘வெள்ளக்காரதுரை’. விக்ரம் பிரபு இதன் நாயகன்.  ஸ்ரீதிவ்யா நாயகி. இசை டி.இமான். டி.ஐ. உட்பட போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக இருந்த ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமியிடம் ‘வெள்ளக்காரதுரை’ பற்றி பேசலாமா என கேட்டதும் “பிரசாத் லேப்லதான் இருக்கிறேன், வரமுடியுமா” என்றார்.

‘‘எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. என்னை மாதிரி வளர்ந்துவரும் கேமராமேன் பிரபல இயக்குனருடன் தொடர்ந்து மூன்று படங்கள் ஒர்க் பண்ணியுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள இயக்குனர் எழில் சாருக்கு என்னுடைய நன்றி எப்போதும் இருக்கும்’’ - உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார் மனிதர்.

மீண்டும் மீண்டும் எழில் சார் உங்களை விரும்ப காரணம்?

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் முடித்ததும் ஆர்தர் வில்சனிடம் உதவியாளராக சேர்ந்தேன். ஆப்ரிக்கா பக்கத்திலுள்ள மடகாஸ்கர் தீவுக்காக ஒரு மியூசிக் வீடியோ ஒர்க் பண்ணினேன். அந்த வீடியோவைப் பார்த்துவிட்டுத்தான் எழில் சார் ‘மனம் கொத்திப் பறவை’யில் வாய்ப்பு கொடுத்தார். அடுத்து ‘தேசிங்கு ராஜா’ வாய்ப்பு கொடுத்தார். இப்போது மூன்றாவது முறையாக அவருடன் வேலை செய்துள்ளேன்.

‘வெள்ளக்காரதுரை’ எப்படியிருக்கார்?

காமெடி கலந்த காதல் கதை இது. எழில் சார் படங்கள் எப்போதும் மனசுக்கு ரம்மியமாக இருக்கும். அதுபோல் இது ஃபீல் குட் மூவி. காமெடி படமாக இருந்தாலும் இந்தப் படத்தை கலர்ஃபுல் படமாகக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதற்கு ஏற்ற வகையில் லொகேஷன்களை தேர்வு செய்து படமாக்கினோம். கேமராமேனாக பாடல் காட்சியில் ஸ்கோர் பண்ணுவதற்கு நிறைய ஸ்கோப் இருந்தது.

‘நடிகர் திலகம் இல்லேன்னா கவலைப்படாதே’ என்ற பாடல், இன்டர்வெல் பிளாக் உட்பட நிறைய இடங்களில் எனக்கான சேலஞ்சிங் இருந்தது. நாயகன் விக்ரம் பிரபு, நாயகி ஸ்ரீதிவ்யா, சூரி உட்பட அனைத்து நடிகர்களிடமும் நல்ல புரிதல் இருந்ததால் எளிதாக வேலை செய்ய முடிந்தது. ரெட் டிராகன் என்ற அதி நவீன கேமராவில் படமாக்கியுள்ளோம். சமீபத்தில் எழில் சார் இயக்கிய படங்களில் இந்தப் படம் கலர்ஃபுல்லாக இருக்கும்’’ என்கிறார் சூரஜ் நல்லுசாமி.