காவல் அதிகாரியை கலங்க வைத்த கவிஞர்!



பாட்டுச்சாலை

நெற்கதிர்களைக் குவிக்கும் விவசாயிகளைத் தாங்கிய தஞ்சை மாவட்டத்தில், சொற்கதிர்களைக் குவிக்கும் படைப்பாளியாக புதுக் கரியபட்டி கிராமத்தில் பிறந்தார் சினேகன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாய்ப் பிறந்த இவர், சின்ன வயதிலேயே கவிதை வரம் பெற்று விட்டார்.

திருக்காட்டுப்பள்ளியில் சரசிவ்சாமி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, கலந்துகொண்ட போட்டிகளில் எல்லாம் கைநிறைய பரிசுகளோடு திரும்பினார். பள்ளிகளுக்கிடையே நடந்த ஒரு கவிதைப் போட்டியில் முதலாவதாக வந்தபோது, மதுரை மாமன்ற மாநாட்டில் எம்.ஜி.ஆர் கரங்களால் பரிசுபெற்று ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் தீவிர ரசிகரான சினேகன், அவரிடம் ஐந்தாண்டுகள் உதவியாளராக இருந்து, சினிமாப் பாடலுக்கான வார்த்தைகளை வடித்தெடுக்கும் வல்லமையைக் கற்றுக்கொண்டார். அங்கிருந்து வெளிவந்தபின், 'முதல் அத்தியாயம்', 'பெண்கள் இன்னும் அழகாக இருக்கிறார்கள்' என்ற கவிதைப் புத்தகங்களைஅரங்கேற்றினார்.

வெளியிட்டுப் பேசிய இயக்குனர் கே.பாலசந்தர், 'சினிமாப் பாடலாசிரியர் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் பெற்ற சினேகன், திரைத்துறைக்கு வரவேண்டும்' என்று வாழ்த்தி வரவேற்றிருக்கிறார். அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நண்பர்களின் தூண்டுதல் வேலை செய்ய ஆரம்பித்தது. 

சேரன் இயக்கத்தில் 'பாண்டவர் பூமி' படத்தில் பரத்வாஜ் இசையில் பாட்டெழுத வாய்ப்புக் கிடைத்தது. இவர் எழுதிய 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்...' பாடல் வரிகளை ரசித்த சேரன், படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதச்சொல்லிவிட்டார்.

முதல் பாடலாக எழுதிய 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்...' பாடல் சினேகனின் பாட்டுச்சாலையில் புதுவேகம் பிடித்தது. இந்தப் பாடலுக்காக தமிழக அரசின், 'சிறந்த பாடலாசிரியர்' விருது இவரது நீளக்கூந்தல் தலையில் கிரீடமாக உட்கார்ந்தது. வெளி நாட்டுக்கு வேலைக்குப் போனவர்கள் நம்ம ஊருக்குத் திரும்பவேண்டும் என்று தீர் மானித்தார்கள்.

மனைவியின் தூண்டுதலால் தாயைப் பிரிந்திருந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி, இந்தப் பாடலைக் கேட்டு வருந்தி, திருந்தியிருக்கிறார். உடனே தாயைச் சந்தித்து, கண்ணீரால் அவரது கால்களைத் துடைத்து ஆசி பெற்றிருக்கிறார். கவிஞருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தழுதழுத்த குரலில் நன்றி சொல்லியிருக்கிறார்.

ஒரு ஆணும் பெண்ணும் அப்பழுக்கற்ற நட்பால் அன்பு செலுத்தமுடியும் என்பதை சினேகனின் 'தோழா... தோழா...' பாடல் ஊருக்கெல்லாம் உரக்கச்சொன்னது. ‘பாண்டவர் பூமி’, ‘பேரழகன்’ படங்களுக்காக தமிழக அரசின் 'சிறந்த பாடலாசிரியர்' விருது வாங்கிய இவர், 'தோழா... தோழா...' பாடலுக்காக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்று மாநிலம் கடந்தும் முத்தமிழ் முத்திரை குத்தியிருக்கிறார்.

‘தவமாய்த் தவமிருந்து’ படத் தில் இவர் எழுதிய ‘ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அப்பா அம்மா...’ பாடல் கேரள பல் கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு, அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.லண்டனில் நடக்கும் தமிழ்த்திருமணங்களில் 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம்...' பாடலை ஒலிக்கச் செய்வதை முக்கிய கடமையாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று ஒரு பேட்டியில் விஞ்ஞான எழுத்தாளர் சுஜாதா வியந்து பாராட்டி, சினேகனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

‘சாமி’ படத்தில் இவர் எழுதிய 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா...' பாடல் மகளிர் அமைப்புகளை கொடி தூக்க வைத்து பரபரப்புக்கு உள்ளானது.  'ராம்' படத்தில் எழுதிய 'ஆராரிராரோ நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு' பாடல் ஒரு மகன் தாய்க்குப் பாடும் தாலாட்டுப்பாடலாக தமிழ்ப் பாட்டு வரலாற்றில் தனியிடம் பிடித்தது.

‘பருத்திவீரன்’ படத்தில் ‘அய்யய்யோ அய்யய்யோ’, ‘அறியாத வயசு’, ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் ‘ஞாபகம் வருதே’, ‘மனசினுள்ளே தாகம் வந்துச்சா’,  ‘போக்கிரி’யில் ‘மாம்பழமாம் மாம்பழம்’, ‘வில்லு’வில் ‘தீம்தனக்கா தில்லானா’, ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் 'பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை’ என்று வானொலிகளிலும் பண்பலைகளிலும் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு உரியவராக இருக்கிறார் சினேகன்.

சினேகனின் தமிழ் வரிகளால் கவரப்பட்ட இயக்குனர் அமீர், 'மௌனம் பேசியதே’ முதல் ‘ஆதிபகவன்’ வரை இயக்கிய அத்தனை படங்களிலும் இவருக்கென்று தனி சிம்மாசனம் கொடுத்து கவுரவப்படுத்தியிருக்கிறார். தனது 'யோகி' படத்தில் சினேகனை நடிகராக அறிமுகப்படுத்தி அடுத்த கதவையும் திறந்துவிட்டார் அமீர். அடுத்து 'உயர்திரு 420' படத்தில் நாயகனாக நடித்த சினேகனுக்கு இப்போது நான்கு படங்கள் கிடைத்திருக்கின்றன. பாரதிராஜா இயக்கத்தில் நாயகனாக நடிக்க இருப்பதன் மூலம், தேர்ந்த நடிகன் என்று நிரூபித்திருக்கிறார் சினேகன்.

இதுவரை 2500 பாடல்களைத் தாண்டிவிட்ட சினேகன், 6 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இப்போது 30 படங்களுக்கு முனைப்போடு பாடல்கள் எழுதி வருகிறார்.கவிஞர், நடிகர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என்று பன்முகம் இருந்தாலும் பாட்டெழுதும் கவிஞனாக பவனி வருவதையே பெருமையாகக் கருதுகிறார் இந்தக் கவிஞர்.

 'ஆடுகளம்' படத்தில் எழுதிய 'வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாகளா...' பாடலைப்போல மண்ணின் மணம் பரப்பும் பாடல்கள் எழுதவேண்டும் என்பது கவிஞரின் ஏக்கம். கிராமத்தில் புதைந்திருக்கும் மண்ணையும் மக்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் கவியரசு கண்ணதாசன் வழியில் திரைப்பாடலாக்கவேண்டும் என்று வாய்ப்புத் தேடி, வாயில் திறந்துவைத்து காத்திருக்கிறார் சினேகன்.

அடுத்த இதழில்...
பி.யு. சின்னப்பா!

நெல்லைபாரதி