எப்போதும் ஜொலிப்பார் ஜோதிகா!



ஹீரோயினிஸம்

அழகான சில நடிகைகளுக்கு நடிப்பு ததிங்கிணத்தோம் போடும். ஆனால் கொஞ்சம் சுமாரான அழகிருப்பவர்களுக்கு நடிப்பு பிரமாதமாக வரும். இரண்டுமே ஒருசேர பெற்றவர்கள் குறிஞ்சிப்பூ மாதிரி அபூர்வம். அப்படிப்பட்ட குறிஞ்சி மலர்களில் ஒருவர்தான் ஜோதிகா. ‘சந்திரமுகி’, ‘குஷி’, ‘மொழி’ என்று அவரது திறமைக்கு ஆதாரமாக எத்தனையோ படங்களை உதாரணம் காட்டலாம்.

அடித்தட்டு நிலையில் இருந்து சென்னைக்கு ஓடிவந்து லோல்பட்டு லொங்கப்பட்டு ஸ்டார் ஆகும் வழக்கமான நடிகையின் கதையல்ல ஜோதிகாவின் கதை. பார்ன் வித் கோல்டன் ஸ்பூன். சினிமா குடும்பம். அறிமுகமாகவோ, வளரவோ பெரிதாக சிரமப்படவில்லை. சினிமாப் பின்னணி குடும்பம், அழகு, திறமை என்று இருந்ததால் வாய்ப்புகள் அவர் வீட்டு கதவைத் தட்டின. ஒரு நடிகை என்பதைத் தாண்டி ‘காதல்’தான் அவரை இந்த ‘ஹீரோயினிஸம்’ தொடரில் இடம்பெறவைக்கிறது. காதல் என்றால் சினிமாக் காதல் அல்ல. பிழியப் பிழிய காவியங்களில் நாம் வாசித்த காதல்களுக்கு நிகரான காதல். பூவெல்லாம் கேட்டுப் பார்த்து, உயிரிலே கலந்தது என பேரழகன் சூர்யா மீதான அவரது ஜில்லென்ற காதல்.



சிவகுமாரின் குடும்பம், தமிழ் சினிமாவில் கண்ணியத்துக்கு பேர் போனது. நூறு படங்களுக்கும் மேலாக நாயகனாக நடித்த சிவகுமாரின் மீது அவரது சினிமாவுலக வாழ்க்கையில் ஒரு கறை கூட கிடையாது. சினிமா வேறு, குடும்பம் வேறு என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எனவே சூர்யா - ஜோதிகா காதலை எடுத்தவுடனேயே ஒப்புக்கொள்ள அவர் தயக்கம் காட்டியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனினும் அந்த காதலை பொத்திப் பொத்தி எட்டு ஆண்டுகளுக்கு அடைகாத்து இருதரப்பு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி எந்த சிக்கலுமில்லாமல்  திருமணபந்தத்தில் இணைந்தார் ஜோதிகா.

ஜோதிகாவுக்கு திருமணமாகும்போது அன்றைய நிலையில் அவர்தான் தமிழில் நம்பர் ஒன். அதிக சம்பளம் வாங்கிய நடிகையும் அவர்தான். அப்படிப்பட்டவர் திருமணத்துக்காக தன்னுடைய நம்பர் ஒன் அந்தஸ்தை எந்த தயக்கமுமில்லாமல் தூக்கியெறிந்தார். குடும்பம்தான் முக்கியம் என்கிற அவருடைய முடிவுதான் ஒருவேளை சிவகுமாரின் மனதை மாற்றியிருக்கலாம். தமிழ் சினிமாவுலகில் விமரிசையாக நடந்த திருமணங்களில் சூர்யா - ஜோதிகாவின் திருமணமும் ஒன்று.

திருமணத்துக்குப் பிறகு பக்காவான இல்லத்தரசி ஆனார் ஜோதிகா. மனைவி, மருமகள், அண்ணி, தாய் என்று ரியல் லைஃபின் அத்தனை ரோல்களிலும் ஜொலித்தார். “ஜோதிகா என் மருமகள் அல்ல, மகள்” என்று நெகிழ்ந்து போய் சிவகுமார் சொல்வதின் பின்னணியில் சூர்யா - ஜோதிகா தம்பதியினரின் அற்புதமான வாழ்வு நமக்கு புரிகிறது.

ஒன்பது ஆண்டுகளாக குடும்பத்துக்காக தன்னுடைய கலைத்திறமைகளை அடக்கி வைத்தார். உறங்கிக் கிடந்த அவரது திறமைகளை மீண்டும் குன்றிலேற்றி ஊருக்கே ஒளிவிளக்காகக் காட்டிட அதே குடும்பமே முன்வந்தது. ‘36 வயதினிலே’ படம் வெறும் சினிமாப்படம் அல்ல. கோடிக்கணக்கான தமிழச்சிகள் தாங்கள் அறியாமல் தங்களுக்குள் புதைத்து வைத்திருந்த தன்னம்பிக்கையை உணரவைத்த படம். ஜோதிகாவைத் தவிர வேறு யார் இந்த சாதனையை நிகழ்த்திட முடியும்? இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து ‘66 வயதினிலே’ என்று படம் எடுத்தாலும் ஜோதிகா ஜொலிப்பார். சினிமாவில் நடித்தாலும் சரி, நடிக்காமல் குடும்பத்தை கவனித்துக் கொண்டாலும் சரி, அவர் ஒரு நிஜமான ஹீரோயின்.

- மீரான்