நந்திதாவை ஊரே கண்ணு வைக்கும்!



புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். ஆனால், சண்டைப்படம் அல்ல. பிழியப் பிழிய உணர்வுபூர்வமான கதையைத் தேர்வு செய்து சினிமா மீதிருக்கும் தன்னுடைய காதலை அழகாக வெளிப்படுத்துகிறார் திலீப் சுப்பராயன். “சாரோட கதைத்தேர்வுதான் இந்தப் படத்தோட முதல் வெற்றி. ஏன்னா, இது செமத்தியான ஃபீல் குட் மூவி” என்று உற்சாகமாக பேசும் இயக்குனர் தங்கம் சரவணனின் குரலிலேயே ‘ஃபீல் குட்’ தெறிக்கிறது.

‘அஞ்சல’ படத்தோட தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன். ‘அஞ்சல’ என்ற உணர்வுபூர்வமான கதையைத் தேர்வு செய்து சினிமா  மீது தனக்கு இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய கதைத் தேர்வுதான் இந்தப் படத்தோட முதல் வெற்றி. ஏன்னா இது அந்தளவுக்கு ஃபீல் குட் மூவி’’ உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் இயக்குனர் தங்கம் சரவணன்.

“அப்படி என்ன வித்தியாசமான களத்தைப் பிடிச்சிருக்கீங்க?”

“சராசரி மனிதர்களில் தொடங்கி பென்ஸ் கார் ஓட்டும் செல்வந்தர்கள் வரை வந்து போகும் பொது இடம் டீக்கடை. அந்த டீக்கடையையும் அதைச் சுற்றியுள்ள மனிதர்களின் உணர்வுபூர்வமான அனுபவங்களும்தான் எங்க படத்தோட சுவாரஸ்யமான திரைக்கதை. படத்தில் வருகிற ஒவ்வொரு கேரக்டருமே ரொம்ப லைவ்லியா இருப்பாங்க. ஒரு டீக்கடையில் ரெண்டரை மணி நேரம் உட்கார்ந்த அனுபவம் படம் பார்க்குறவங்களுக்கு கிடைக்கும்.”



“நீங்க சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி டீக்கடை நடத்தினீங்களா?”

“என்னுடைய தாத்தா மதுரை பக்கம் டீக்கடை வெச்சிருந்தாரு.  என் தாத்தாவுக்கு அப்புறம் அப்பாதான் அந்த கடையை எடுத்து நடத்தினாரு. அந்த வகையிலே எங்க குடும்பத்துக்கும் டீக் கடைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. நான் பார்த்த மனிதர்கள், அனுபவிச்ச சம்பவங்களை கற்பனை கலந்த கதையா உருவாக்கி இருக்கேன். என்னுடைய பால்யமெல்லாம் அந்த கடையில்தான் கழிஞ்சது. அந்த அனுபவமெல்லாம்தான்
‘அஞ்சல’.”

“ரொம்ப நாள் கழிச்சி பசுபதிக்கு நல்ல ரோல்னு இண்டஸ்ட்ரியிலே பேச்சு..?”

“ஆமாம். ‘அஞ்சல’ டீக்கடை ஓனர் இளைஞராகவும் தெரியக்கூடாது. வயசானவராகவும் தெரியக்கூடாது. மிடில் ஏஜ் மேன் வேணும். ‘வெயில்’ பசுபதியை விட்டா வேறு யாரும் இந்த ரோலுக்கு தோணலை. அவருடைய சின்சியாரிட்டி இண்டஸ்ட்ரியிலே ரொம்ப ஃபேமஸ். அதனாலே அவர்தான் நடிக்கணும்னு விரும்பினேன். பெரிய நடிகர் கிட்டே கதை சொல்லப்போறோம். ஒத்துப்பாரா மாட்டாரான்னு தயக்கமா இருந்தது. கதையும், கேரக்டரும் பிடிச்சிருந்தாதான் பசுபதி நடிப்பார்னு எல்லாருக்குமே தெரியும். ரொம்ப செலக்டிவ்வா ஒர்க் பண்ணுற ஆர்ட்டிஸ்ட். கதையை சொன்னதுமே சில சந்தேகங்களைக் கேட்டார். தெளிவுபடுத்தினேன். உடனே ஒத்துக்கிட்டார். ‘வெயில்’ படத்துக்குப் பிறகு அவரோட கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படுற படமா ‘அஞ்சல’ நிச்சயமா இருக்கும்.”



“விமல் - நந்திதா கெமிஸ்ட்ரி எப்படி?”

“ஊரே கண்ணு வைக்கிற மாதிரி இருக்கும். எதையுமே பாசிட்டிவ்வா ஹேண்டில் பண்ணக்கூடிய டூவீலர் மெக்கானிக் கேரக்டர் விமலுக்கு. ‘காதல்’ படத்துலே பரத் பண்ண மெக்கானிக் கேரக்டரோட சாயல் வந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா விமலோட கேரக்டரை ஸ்கெட்ச் பண்ணியிருக்கோம். நந்திதாவுக்கு அவங்க தோற்றத்துக்கு பொருந்தக்கூடிய ஹோம்லி ரோல்தான். ஆனா, ரொம்ப போல்டான கேரக்டர். அவங்களோட நடிப்புத் திறமைக்கு தீனி போட்டிருக்கோம். விமல் கேரக்டருக்கு ஈக்குவலா நந்திதாவோட கேரக்டரும் இருக்கும்.”

“மலையாளத்துலே ஃபேமஸா இருக்குற மியூசிக் டைரக்டரை அள்ளிட்டு வந்திருக்கீங்களாமே?”


“கோபிசுந்தரைத்தானே சொல்றீங்க. தேசிய விருது வாங்கியவர். ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘மிலி’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ (தமிழின் 36 வயதினிலே ஒரிஜினல்), ‘1983’, ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘உஸ்தாத் ஓட்டல்’னு ஏராளமான சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்த நியூவேவ் மியூசிக் டைரக்டர். அங்கே இப்போ அவர் நெம்பர் ஒண்ணுன்னு கூட சொல்லலாம். தமிழிலும் ‘பொய் சொல்லப் போறோம்’, ‘யாருடா மகேஷ்?’ மாதிரி சில படங்கள் பண்ணியிருக்காரு. இந்தி, தெலுங்குப் படங்களிலும் ஒர்க் பண்ணியிருக்காரு. இந்தப் படத்துலே அவரோட பின்னணி இசை படத்தை வேற லெவல்லே நிறுத்தும். கதையிலே ஆக்‌ஷன் மூட் இருக்கிற போர்ஷன் ஃபுல்லா கோபி சார்தான் சூப்பரா ஸ்கோர் பண்ணுவார்.”

“வேற என்ன ஸ்பெஷல்?”

“ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்திருப்பது சூப்பர் ஸ்டார் படங்களில் வேலை பார்த்த சூப்பர் சுப்பராயன். எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஸ்டண்ட் சக்கரவர்த்தி. அவர் எங்க டீமில் இருப்பதே எங்களுக்கெல்லாம் பெருமைதானே?”

-சுரேஷ்ராஜா