படத்துக்கு சூட்டப்படும் பிரபலங்களின் பெயர்கள்!



ரூம் போட்டு யோசிச்ச லிஸ்ட்!!

மனிதர்களுக்கு அடையாளம் அவர்களது பெயர் என்பது மாதிரி ஒவ்வொரு படமும் அதற்கு சூட்டப்பட்ட தலைப்பால்தான் நினைவு கூரப்படுகிறது. இன்று தமிழ் சினிமா இருக்கும் சூழலில் படத்தின் கதையை யோசிப்பதைக் காட்டிலும் படத்துக்கு சூட்டவேண்டிய தலைப்பை யோசிப்பதில் இயக்குநர்கள் நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். எந்த தலைப்பை சூட்டினாலும் யாரோ ஒருவர் திடீரென கிளம்பி, “ஏற்கனவே இந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருக்கிறேன்” என்று பிரச்சினை செய்வது ‘மாமூலாக’ நடந்து கொண்டிருக்கிறது.
அவருக்கு பெரும் பணத்தைக் கொடுத்தோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ தலைப்பை வாங்க வேண்டியிருக்கிறது. பிரபலமான மனிதர்களின் பெயரை தலைப்பாக சூட்டினால், அதுவே ரசிகர்களிடம் எளிதாக படத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்பது ஒரு ஐடியா. அவ்வப்போது பிரபல நட்சத்திரமோ அல்லது டெக்னீஷியன் பெயரையோ படத்துக்கு வைப்பது என்பது மரபாகவே இருக்கிறது. அவற்றில் சில பெயர்களைப் பார்ப்போம்.



நடிகர் சங்க செயலாளர் விஷால் நடித்து இன்னமும் திரைக்கு வராத படமான ‘மதகஜராஜாவை’ ‘எம்.ஜி.ஆர்’ என்றே குறிப்பிடுகிறார்கள். வனிதாவிஜயகுமார் தயாரிப்பில் ரிலீஸான ஒரு படத்துக்கு ‘எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்று நான்கு ஜாம்பவான்களின் பெயரையும் சேர்த்தே சூட்டியிருந்தார்கள். ஷங்கர் தயாரிப்பில் ரஜினி ‘சிவாஜி’யில் நடித்தார். சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு நடிக்கும் புதுப்படத்தின் பெயர் ‘வீர சிவாஜி’. இப்போது ஜீவா நடிக்கும் படத்துக்கு ‘ஜெமினி கணேசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர்களில் அர்ஜுன் (அர்ஜுன்), ஆனந்த் (ஆனந்த்), சிவா (சிவா, சிவா மனசுல சக்தி, மொட்ட சிவா கெட்ட சிவா), சக்தி (சிவா மனசுல சக்தி), பாண்டியன் (பாண்டியன்), பிரபு (பிரியமுடன் பிரபு), மாதவன் (பாலக்காட்டு மாதவன்), ஜீவா (ஜீவா), சூர்யா (சூர்யா, சரவணன் என்கிற சூர்யா), தனுஷ் (தனுஷ் 5ம் வகுப்பு), ஆர்யா (ஆரியா), எம்.என்.நம்பியார் (நம்பியார்), உதயா (உதயா), விக்ரம் (விக்ரம்), கே.பாக்யராஜ் (பாக்யராஜ் 2010), ஆதி (ஆதி), ராஜா (ராஜா), ஜெமினி கணேசன் மற்றும் சுருளிராஜன் (ஜெமினி, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்), மகேஷ் (மகேஷ் சரண்யா மற்றும் பலர்), நந்தா (நந்தா), பி.வாசு மற்றும் சரவணன் (பி.வாசு, வாசு, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க), ரமணா (ரமணா), சூரி (சூரி) ஆகிய பெயர்களும், நடிகைகளில் ஸ்ரீதேவி (தேவி ஸ்ரீதேவி), கஸ்தூரி (கஸ்தூரி மஞ்சள்), த்ரிஷா மற்றும் நயன்தாரா (த்ரிஷா இல்லனா நயன்தாரா), ரம்பா மற்றும் ஊர்வசி மற்றும் மேனகா (ரம்பா ஊர்வசி மேனகா), இந்திரா (பேபி இந்திரா), கவிதா (கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்கப் போறாங்க), சரண்யா (மகேஷ் சரண்யா மற்றும் பலர்),



‘ஊர்வசி’ சாரதா (சாரதா), காஞ்சனா (காஞ்சனா, காஞ்சனா 2), ஈஸ்வரி ராவ் (ஈஸ்வரி), வைஜெயந்தி (வைஜெயந்தி ஐ.பி.எஸ்), சுஜாதா (சுஜாதா), ஜனனி (ஜனனி), சவுந்தர்யா (சவுந்தர்யா), மந்த்ரா (மந்த்ரா, மந்த்ரா 2), நிலா (நிலா), லைலா (லைலா ஓ லைலா), ஐஸ்வர்யா (ஐஸ்வர்யா), அஞ்சலி (அஞ்சலி), சிவரஞ்சனி (சிவரஞ்சனியும் சில பெண்களும்) ஆகிய பெயர்களும், இசையமைப்பாளர்களில் கே.வி.மகாதேவன் (சகாதேவன் மகாதேவன்), எம்.எஸ்.விஸ்வநாதன்&ராமமூர்த்தி (விஸ்வநாதன் ராமமூர்த்தி), இளையராஜா (இளையராஜாவின் மோதிரம், இளையராஜா சவுண்ட் சர்வீஸ்), தேவா (தேவா), சிற்பி (சிற்பி) ஆகிய பெயர்களும், பாடலாசிரியர்களில் கண்ணதாசன் (கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்கப் போறாங்க), வாலி (வாலி), நா.முத்துக்குமார் (முத்துக்குமார் வான்டட்), நா.காமராசன் (காமராசு), தாமரை (தாமரை) ஆகிய பெயர்களும், இயக்குனர்களில் மணிரத்னம் (மணி&ரத்னம்), பாலா (நான்தான் பாலா), செல்வா (செல்வா), தரணி (தரணி), சீமான் (சீமான்) ஆகிய பெயர்களும் இதுவரை சூட்டப்பட்டிருக்கின்றன. வேலைவெட்டி இல்லாத பொழுதில் மல்லாந்து படுத்துக் கொண்டு மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்தால் இதேபோல இன்னும் சில படங்களின் பெயர்களும் நினைவுக்கு வரலாம்.

- தேவராஜ்