300 கோடி வசூல்! கபாலி கலக்குகிறார்



வினியோகம், தயாரிப்பு, இசையமைப்பு, இயக்கம், நடிப்பு என்று பன் முகத் திறமைகளைக் காட்டி சினிமாவில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக இருக்கிறார் ‘கலைப்புலி’ எஸ்.தாணு. தயாரிப்பில் மட்டுமே முப்பது ஆண்டுகளைக் கடந்திருப்பவர், இருபத்தைந்து படங்களுக்கு மேலே தயாரித்திருக்கிறார்.

தன்னுடைய முப்பத்தைந்து ஆண்டுகால நண்பரான ரஜினியை வைத்து ‘கபாலி’ தயாரித்திருப்பதை பெரும் கவுரவமாக கருதுகிறார். மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் தாணு, சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்கு மனம் திறந்த பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:“உங்கள் நண்பர் ரஜினியைப் பற்றி சொல்லுங்களேன்?”

“நடிகர் என்பதைத் தாண்டி அவர் மனிதநேயம் மிக்க மனிதர். நம் கலாச்சாரத்தின் மீது அளப்பரிய மரியாதை வைத்திருப்பவர். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்த பிறகும் கூட, இப்போதுதான் சினிமாவுக்குள் நுழைந்த இளைஞரைப் போலவே எப்போதும் இருக்கிறார். அவரோடு இருக்கும்போது நானும் என்னை இளைஞனாகவே உணர்கிறேன்.

1978ல் அவர் முதன்முதலாக முழுநீள ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘பைரவி’. சென்னையின் வினியோக உரிமையை நாங்கள் எடுத்திருந்தோம். ஸ்டில்ஸ் ரவி எடுத்த ரஜினியின் படங்களைப் பார்த்ததுமே, இவர் இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஹீரோ என்று முடிவெடுத்தேன். படம் தொடர்பான விளம்பரங்களில் ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழியோடு அவரது பெயரைப் போட்டேன்.

ரஜினிக்கு இது சங்கடமாக இருந்தது. இயக்குநர் பாஸ்கரையும், தயாரிப்பாளர் கலைஞானத்தையும் என்னிடம் அனுப்பி, அந்த ‘சூப்பர் ஸ்டார்’ அடைமொழியை நீக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார். தமிழ் சினிமாவின் மாபெரும் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருக்கும்போது இப்படிப்பட்ட அடைமொழி தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக அவர் காரணமும் சொல்லியிருந்தார்.

அடுத்த விளம்பரத்தில் வேண்டுமென்றே ‘கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்’ என்று அடைமொழி கொடுத்தேன். அப்போது எனக்கு இருந்த இளமை வேகம் அது. அதன்பிறகே ரஜினியை அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.”“கடந்த முப்பது ஆண்டுகளில் சிவாஜி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா என்று பெரிய ஹீரோக்களை வைத்து படங்கள் தயாரித்திருக்கிறீர்கள். ரஜினியை வைத்து இப்போதுதான் முதன்முறையாக எடுக்கிறீர்கள். இத்தனைக்கும் அவர் உங்களுக்கு நண்பர் வேறு?”

“நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து எத்தனையோ முறை பேசியிருக்கிறோம். காலம்தான் சரியாக அமையவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்களே, அது உண்மைதான். பொதுவாக வெளியே தெரியாத சில விஷயங்களை சொல்கிறேன். ‘அண்ணாமலை’, ‘முத்து’ போன்ற படங்களையே நான்தான் தயாரித்திருக்க வேண்டும்.

அந்த நேரத்தில் ரஜினியின் குரு, இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தருக்காக அவற்றை விட வேண்டியதாயிற்று. பிறகு ‘பாட்ஷா’வை தயாரிக்க ரஜினி எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். நான் அப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காரணத்தால், அந்த வாய்ப்பை மனமே இல்லாமல் மறுக்க வேண்டியதாயிற்று.

அடிக்கடி ரஜினி சொல்வார், ‘உங்களுக்கு நான் ஏதாவது செய்யணும் தாணு’ என்று. உங்கள் அன்பு எப்போதும் போல கிடைத்தால் போதுமென்று சொல்வேன். அவருடனான என்னுடைய நட்பு இத்தனை ஆண்டுகளாக இறுகிக்கொண்டேதான் இருந்தது.

இருவரும் இணையும் நேரம் வந்தபோது மூன்று இயக்குநர்களை இறுதி செய்து அவர்களிடம் கதை கேட்டோம். இயக்குநர் ரஞ்சித் சொன்ன கதை எனக்கும், ரஜினிக்கும் மிகவும் பிடித்திருந்தது. கதையை சொன்னவுடனேயே ரஞ்சித்தை கட்டிப் பிடித்துப் பாராட்டினார் ரஜினி. அதுதான் இப்போது ‘கபாலி’யாக உருவெடுத்திருக்கிறது.”

“உங்களுடைய ‘கபாலி’ நூறு கோடி வசூலிக்குமா?”
“என்ன இப்படி கேட்கிறீர்கள்? ரஞ்சித் செய்து கொடுத்த டீசரைப் பார்த்தபோதே இந்தப் படத்தின் பிரும்மாண்ட வெற்றி எனக்கு தெரிந்துவிட்டது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அல்ல, என்னுடைய இத்தனை ஆண்டு திரையுலக வணிக அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். ‘கபாலி’, முன்னூறு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்குமென்று கணிக்கிறேன். ‘கபாலி’க்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் நிறைய வருவார்கள். ஐந்து வயதில் தொடங்கி எண்பது வயதுவரை ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் வில்லனாக நடித்திருப்பவர் தைவானில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சைனீஸ் ஹீரோ. எனவே இந்தியின் ‘பீகே’ படத்தைப் போலவே சீனாவிலும் ‘கபாலி’ பெரும் வெற்றி பெறுமென்று நினைக்கிறேன். படத்தின் உள்ளடக்கம் வலுவானது. உலகளாவிய வெற்றியை எட்டக்கூடியது.”“ரஞ்சித்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“எந்த ஒரு தயாரிப்பாளரும், பெரிய ஹீரோவும் இவரோடு இணைந்து திரும்பத் திரும்ப பணியாற்றவே விரும்புவார்கள். தமிழ் சினிமாவில் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கக்கூடிய இயக்குநர்.”“விஜய், உங்களுடைய மூன்று படங்களில் நடித்திருக்கிறார். நீங்கள் கேட்டவுடனேயே அவ்வளவு பெரிய நடிகர் கால்ஷீட் கொடுப்பதின் மர்மம் என்ன?”

“ஒரு தயாரிப்பாளராக என்னுடைய படத்தில் பங்கு பெறுபவர்களுக்கு முறையாக சம்பளம் கொடுத்துவிடுவேன். என் படத்தை நல்ல முறையில் பப்ளிசிட்டி செய்து, நிச்சயம் வெற்றிப்படமாக ஆக்குவேன் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன். அதனால் இருக்கலாம். விஜய், தன் தந்தைக்கு அடுத்து என்னை மிகவும் பிடிக்குமென்று அடிக்கடி சொல்வார்.”
“அஜீத்?”

“ஏற்கனவே ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ செய்திருக்கிறோம். நல்ல மனிதர். நல்ல நடிகர். அவரை வைத்து படம் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறேன். சரியான நேரம் வந்து எங்களை மீண்டும் இணைக்கும்.”

- யுவகிருஷ்ணா