தலையெடுக்கும் நேரத்தில் தல சொன்னது!



இன்றைய காலகட்டத்தில் ‘தல’ அஜீத்தை சந்தித்துப் பேட்டியெடுப்பதெல்லாம் நடக்கிற காரியமா? இத்தனைக்கும் பத்திரிகையாளர்களின் தோளில் கை போட்டு சகஜமாகப் பேசுபவர்தான். ஆனால், பேட்டியென்று ஆரம்பித்தால் மட்டும், ‘பிரியாணி சாப்பிடுவோமா?’ என்று நைஸாக டாபிக்கை மாற்றிவிடுவார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர் அளித்திருந்த பேட்டிகளிலிருந்து தொகுத்து, ஒரு புதுப்பேட்டியாக அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு வழங்குகிறோம். ஆரம்பகால அஜீத்குமாரை அறிந்து கொள்ளஇந்தத் தொகுப்புப் பேட்டி உதவும்.

“நீங்கள் சினிமாத் துறைக்கு வந்தது விருப்பப்பட்டு வந்ததா? தற்செயலாக நடந்ததா?”

“நான் பத்தாவது வரைதான் படித்தேன். படிப்பு ஏறவில்லை. கவர்ன்மென்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியில் மெர்ச்சண்டைஸரா வேலைக்குச் சேர்ந்தேன். நான்கரை ஆண்டுகள் அங்கே வேலை பார்த்துவிட்டு, ஈரோட்டில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் ப்ராசஸிங் ஏஜென்சி ஆரம்பித்து நடத்தினேன். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், அதை விட்டுவிட்டு, ஏற்கெனவே ஆர்வமாக இருந்த மாடலிங் துறையில் ஈடுபட்டேன். சில வாய்ப்புகள் கிடைத்தது.

செருப்பு விளம்பரம் உள்பட சில விளம்பரங்களிலும் தலை காட்டினேன். காதலியின் அப்பா போட்ட கண்டிஷனின்படி பைக் ரேஸில் ஜெயிக்கும் குறும்படத்தில் நடித்தேன். 1992 ஆகஸ்டில் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. ‘பிரேம புஸ்தகம்’ என்கிற தெலுங்குப்படம். ஆரம்பித்து ஒரு வருடத்துக்கு மேல் பட வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அந்த இடைவெளியில் தமிழ்ப்பட வாய்ப்பு வந்தது. அமராவதி படத்தின் மூலம்  தமிழ்த் திரைப்பட கதாநாயகனாக அறிமுகமானேன். எனது சினிமாப் பயணம் திட்டமிட்டு நடந்தது அல்ல, தற்செயலாகவே அமைந்தது.”

“குறுகிய காலத்திலேயே ஒரு அடையாளத்தைப் பெற்றுவிட்ட வெற்றியை எதிர்பார்த்தீர்களா?”

“இல்லை. ‘அமராவதி’ படத்தின் வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்துக்குப் பிறகு ஒரு விபத்தில் அடிபட்டு ஒன்றரை  வருடம் வீட்டில் இருந்தேன். அப்போது உடல்நல ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பெரிய போராட்டத்துக்குப் பிறகு இயக்குநர் கே.சுபாஷ், ‘பவித்ரா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது பெரிய ஆறுதலாக இருந்தது.

அந்தப் படத்தின் ரஷ் பார்த்துவிட்டுத்தான், மணிரத்னம் தனது  தயாரிப்பில் வஸந்த் இயக்கத்தில் ‘ஆசை’ படத்தில்  நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.  தேவா இசையில் பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. ‘ஆசை’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தபோதும், சினிமாத்துறையில் நான் பெரிதும் கவனிக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ‘அமராவதி’, ‘ஆசை’ போன்ற மென்மையான கதாபாத்திரங்களுக்குத்தான் அஜீத்குமார் லாயக்கு; அதிரடி படங்களுக்கு எல்லாம் தாங்கமாட்டார் என்றுதான் அப்போது பேசிக்கொண்டார்கள்.”

“இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள ஆசைப்படுவதுண்டா?”

“ஷூட்டிங் கவரேஜ் எல்லாம் தொலைக்காட்சிகளில் வர ஆரம்பித்தபிறகு இமேஜ் எல்லாம் போய்விட்டது. நாங்களும்  சராசரி மனிதர்கள்தானே. ஒருத்தர் எப்படி ஆபீசுக்குப் போய் வேலை பார்த்துட்டு வருகிறாரோ, அப்படித்தான் நாங்களும் ஸ்பாட்டுக்குப் போய் வேலை செய்கிறோம். இதில் இமேஜ் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு காலத்தில் வேண்டுமானால் கலையாக இருந்திருக்கலாம். இப்போது சினிமா முழுக்க  முழுக்க வியாபாரம்தான்.”   

“உங்கள் கேரியரில் ‘காதல் கோட்டை’ படத்தின் வெற்றிதானே உங்களுக்கு பெரிய திருப்புமுனை?”

“ஆமாம். ‘அமராவதி’ படத்தின் ஷூட்டிங்கின்போது அகத்தியன் அந்தக் கதையை என்னிடம் சொன்னார். அதற்குப் பிறகு ‘வான்மதி’யில் அவரது இயக்கத்தில் நடித்த நட்பும் இருந்தது. ‘காதல் கோட்டை’ படத்துக்கு ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடக்கும்போதே, ‘அஜீத், இந்தப்படம் சூப்பர் ஹிட் ஆகும், இல்லேன்னா ஒரு வாரத்துக்குக்கூட  தாங்காது.

ஏன்னா, இது ஒரு சோதனை முயற்சி. கடைசி ரீலில்தான் நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்கிறார்கள் என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே நமது தலைவிதி அமையும்’ என்று அகத்தியன் சொல்லிக்கொண்டே இருப்பார். தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் என்று சொல்லிவிட்டு நான் எனது வேலையை கவனமாகச் செய்தேன். எங்களது தலைவிதியை ரசிகர்கள் நன்றாகவே எழுதினார்கள்.”

“ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“எங்களது பெரிய பலமே ரசிகர்கள்தான். எங்களை முதலில் உங்களைப்போன்ற மனிதர்களாகப் பாருங்கள். அதன்பிறகு நடிகர்களாகப் பாருங்கள். என்னுடைய கேரக்டரைத் தெரிந்துகொண்டு என்னை நீங்கள் ஆதரித்தால், ரொம்ப சந்தோஷப்படுவேன். அதை விட்டுவிட்டு வெறும் லுக், ஆக்டிங் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு ரசிகர்களாக இருக்காதீர்கள்.”

“காதலைப் பற்றி உங்களது கருத்து?”

“காதலைப் பற்றி கருத்து சொல்ல எனக்கு வயது போதாது. அது நட்பின் இன்னொரு  வடிவம்தான். ஒரு பெண்ணிடம் நீங்கள் இயல்பாக எப்படி இருக்கிறீர்களோ அதுதான் காதல்.”

“சொல்ல விரும்பும் தத்துவம்?”

“உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். யாருடைய வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்ளாதீர்கள்”

தொகுப்பு : நெல்பா