சித்தூரு சிறுக்கிக்கு ஜிஎஸ்டி இல்லை!



‘சிலந்தி’  ஆதிராஜன் இயக்கும் படம் ‘அருவா சண்ட’. இதில் நாயகனாக புதுமுகம் ராஜா நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார்.  சமீபத்தில் இந்தப் படத்துக்காக தரண் இசையில் வைரமுத்து எழுதிய ‘இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி... இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு... ஜி எஸ்டி இல்ல உனக்கு’’ என்ற குத்துப் பாடலை படமாக்கியுள்ளார்கள்.  பாடலை படமாக்கிய விதத்தை இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டோம்.

‘‘இது அதிரடி ஆக்‌ஷன் கதை. கமர்ஷியல் படங்களின் பாதி பலம் பாடல்களில்தான் இருக்கிறது. ‘கில்லி’, ‘தில்’, ‘தூள்’, போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் பாடல்களுக்கு என்று அதிக மெனக்கெடல் போட்டுள்ளோம்.

தமிழ்நாடு, கேரளாவில் கேமரா வைக்காத இடங்களை பல மாதங்கள் அலைந்து திரிந்து தேடினோம். அப்படி தேடியதில் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. பாடல் காட்சிகளில் வரும் லொகேஷன் எங்கு இருக்கிறது? என்ற கேள்வி வரும் விதத்தில் லொகேஷன்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

வைரமுத்து ஐயா எழுதிய பாடலை பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைத்து படமாக்கினோம். தீனா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். ‘எம் பேரு மீனாகுமாரி’ அனிதா பாடியிருக்கிறார்.

 நடனமாடியிருக்கும் சுப்ரா கோஷிற்கு தமிழில் இதுதான் முதல் படம். அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். ரகசியா போன்றவர்கள் எப்படி ஒரு ரவுண்ட் வந்தார்களோ அதுபோல சுப்ரா கோஷிற்கு தமிழ் சினிமாவில் இடமுண்டு.

நகரம் மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கெளப்பும் பாடலாக இருக்கும். கபடி, கௌரவக் கொலை பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி  படம் பார்க்கும் ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கி எடுக்கும் என்பது நிச்சயம்’’ என்றார்.

- எஸ்