அவமானங்கள் எனக்கு அனுபவங்கள்! உதயா மனம் திறக்கிறார்



சினிமாவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரபலமான தயாரிப்பாளரின் மகன். பெரிய இயக்குநரின் சகோதரர். இருந்தும் இன்னமும் தனக்குரிய இடத்தைப் பிடிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார் உதயா.“பெருசா ஹிட் கொடுக்கலைன்னாலும் சில வித்தியாசமான படங்களில் நடித்திருக்கிறேன். கடைசியா பண்ண ‘ஆவிக்குமார்’ எனக்கு இண்டஸ்ட்ரியில் நல்ல மறு அறிமுகத்தைக் கொடுத்தது.

அதைத் தக்கவைக்கிற முயற்சியில் வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். இயக்குநர் ஆசிஃப்  குரேஷி சொன்ன ‘உத்தரவு மகாராஜா’ படத்தோட கதை பிரமாதமாக இருந்தது’’ உற்சாகமாய் பேச ஆரம்பித்தார் உதயா. ஸ்டிரைக் முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசினோம்.

“சரித்திரப் படமா?”

“இது கொஞ்சம் வித்தியாசமான ஸ்க்ரிப்ட். சைக்கோ கலந்த கமர்ஷியல் படம். என் கேரக்டருக்கு கொஞ்சம் நெகடிவ் ஷேடும் இருக்கும். என்டர்டெயின்மென்ட்டுக்கான விஷயங்களும் இருக்கும். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். ரெகுலர் திரைக்கதை அமைப்பை இதில் பார்க்கமுடியாது. இப்பவே என்ன ஜானர்னு சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடும்.

படத்துல எனக்கு நான்கு கெட்டப். அதுக்காகவே ஒன்றரை வருடம் தேவைப்பட்டது. மொட்டைத் தலையுடன் ஒரு கெட்டப், மொட்டை அடிச்சி முடி வளர்ந்த மாதிரி ஒரு கெட்டப், தாடியுடன் ஒரு கெட்டப், க்ளீன் ஷேவ் லுக்ல ஒரு கெட்டப். நான்கு விதமான வெரைட்டிக்கான காரணம் கதைக்குத் தேவையாக இருந்தது.

படத்துல கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். முதல் பாதியில் மகாராஜா, போர்க்களம், குதிரை  போன்ற வரலாற்றுப் பின்னணி இடம் பெறுகிறது. குதிரை சம்பந்தப்பட்ட காட்சிகளை ப்ளூ கிராஸ் அனுமதியுடன் லைவ்வாக ஷூட் பண்ணி சி.ஜி.யில் மேட்ச் பண்ணியிருக்கிறோம்.”

“ஹீரோயின்?

“ஹீரோயின்கள்.  ப்ரியங்கா பெங்களூர் - கன்னடத்துல படம் பண்ணியவர், ஷேரா மும்பை பொண்ணு, மதுமிதா நம்மூர் பொண்ணு. மூணு பேருக்குமிடையே ஈகோ யுத்தம் வராதளவுக்கு எல்லோருக்கும் சமமான காட்சிகள் இருக்கும். ஆனா, தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன கொடுமைன்னா டூயட், தனிப் பாடல் என்று எதுவும் கிடையாது.”

“இளைய திலகம் பிரபு?”

“அவர் மூலமாதான் சினிமாவுக்கே வந்தேன். என்னுடைய முதல் படமே ‘திருநெல்வேலி’தான். பிரபு சார்தான் மகாராஜாவாக வர்றார். கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்குப் பிறகு சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர்தான் படத்துல மெயின் பில்லர். சொல்லப்போனால் அவர் ஹீரோ மாதிரி தெரிவார். நான் வில்லன் மாதிரி இருப்பேன்.

பிரபு சாருக்கு நான் தனிப்பட்ட விதத்தில் கடமைப்பட்டுள்ளேன். அவருடன் நடித்ததால்தான் எனக்கு பெயரும் புகழும் கிடைத்தது. இப்போது என்னுடைய மெச்சூரிட்டியைப் பார்த்து வேற லெவலில் இருப்பதாக பாராட்டினார். சார் செட்ல இருந்தால் செட்டே கலகலப்பா இருக்கும். எல்லோரையும் ஃபேமிலி மாதிரி ட்ரீட் பண்ணுவார். என்னிடம் உடன்பிறவா சகோதரன் மாதிரி பழகுவார். ‘திருநெல்வேலி’ படத்துல ஒரு புதுமுகமாக அவருடன் நடித்தேன். இன்று நான் தயாரிக்கும் படத்தில் என்னிடம் சம்பளம் வாங்கி நடிப்பதை என் வளர்ச்சியாகப் பார்க்கிறேன்.”
 
“படத்துல வேறே யாரெல்லாம் இருக்காங்க?”

“நாசர், மனோபாலா, மன், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி என்று ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் விஷால், கார்த்தி தவிர நடிகர் சங்கத்துல இருக்கிறவங்க அனைவரும் இருக்கிறார்கள்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“இது டெக்னிக்கல் முக்கியத்துவம் உள்ள படம். ஸ்பெஷல் எக்யூப்மென்ட்ஸ் நிறைய பயன்படுத்தினோம். ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம் போன்ற உபகரணங்கள் தினந்தோறும் தேவைப்பட்டது. எங்கள் பட்ஜெட்டுக்கு கொஞ்சம் அதிகம் என்றாலும் காம்ப்ரமைஸ் இல்லாமல் பண்ணினோம். உதயா தண்ணி மாதிரி செலவு பண்றார்னு யூனிட்ல இருக்கிறவங்க கூட பேசிக்கிட்டாங்க. கன்டென்ட் நல்லா கொடுத்தா தான் இன்னிக்கு ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர்றாங்க. ஏன்னா, கன்டென்ட்தான் மெயின். இது அதுக்கான கதை.

இயக்குநர் ஆசிஃப்  குரேஷி விளம்பரப் பட உலகத்திலிருந்து வந்துள்ளார். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.  நா.முத்துக்குமார் மறைவுக்கு முன் கடைசி கடைசியாக இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். ஆண்டனியின் உதவியாளர் சத்ய நாராயணன் எடிட்டிங் பண்ணியிருக்கிறார்.”

“உங்கள் சினிமா பயணம் எப்படி ஆரம்பித்தது?”

“அப்பா சினிமா தயாரிப்பாளர் என்பதால் எங்க வீட்டுக்கு சினிமாக்காரங்க வருவாங்க. நாங்களும்  சினிமாக்காரங்க வீட்டு ஃபங்ஷன்ல கலந்து கொள்வோம்.  முழுக்க முழுக்க சினிமா சூழலில் வளர்ந்ததால் என்னை அறியாமலேயே சினிமா ஆர்வம் வந்தது. சினிமாவுக்கான நடனம், சண்டை, நடிப்பு என்று முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால் நடிக்கப்  போலாமா, டெக்னீஷியனா போலாமா என்று முடிவு எடுக்க முடியாத நிலையில் இருந்தேன்.

ஒருமுறை பாரதிராஜா சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் ‘கேப்டன் மகள்’ இயக்கிக் கொண்டிருந்தார். ‘பையன் நல்லா இருக்கானே. அலைகள் ஓய்வதில்லை மாதிரி ஒரு ஸ்கிப்ரிட் ரெடி பண்ணி நடிக்கலாமே’ என்று அப்பாவிடம் அவர்தான் சொன்னார். ஏற்கெனவே நடிப்பதற்கான ஆயத்தத்தில் இருந்த என் ஆசையில் பாரதிராஜா சார் எண்ணெய் ஊற்றியதால் நடிப்பு ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. சினிமாவுக்குள் வருவதாக இருந்தால் நடிப்புத்தான் என்று தீர்க்கமாக இருந்தேன்.

அந்த சமயத்தில்தான் சூப்பர் குட் பிலிம்ஸ் ‘திருநெல்வேலி’ படத்தை  தயாரித்தார்கள். அதில் எனக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறைய புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அவர்கள் அறிமுகப்படுத்திய முதல் ஹீரோ நான்தான் என்பதில் எனக்கு இப்போதும் பெருமை இருக்கிறது. எனக்குப் பிறகுதான் செளத்ரி சாரோட மகன் ஜீவாவே அறிமுகமானார்.”
“உங்க சினிமா பயணத்தை பத்தி என்ன நினைக்கறீங்க?”

“இத்தனை வருட கால அனுபவத்தில் ஏகத்துக்கும் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துள்ளேன். நிறைய அவமானங்கள். உதாசீனம். எதையுமே நான் நெகடிவ்வாக எடுத்துக்கலை. அவமானங்களை அனுபவங்களாக்கி திறமையை மெருகேத்திக்கிட்டேன். தோல்விதான் அதிகம். இதனாலெல்லாம் சினிமாவை ரொம்ப நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது.

அந்த டைம்லே என்னோடு இருபது பேர் ஹீரோவா என்ட்ரி ஆனார்கள். ஆனால் அவர்களில் யாரும் இப்போது ஹீரோவாக படங்கள் பண்ணுவதில்லை. ஒவ்வொருத்தரும் வெவ்வேறு ரூட்ல டிராவல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அந்த லிஸ்ட்ல நான் மட்டும்தான் லாங் ஸ்டாண்டிங்காக டிராவல் பண்ணுவதாக நினைக்கிறேன். ஒரு நடிகனுக்கு இதைவிட வேற என்ன வேணும்?”

- சுரேஷ்ராஜா