பெண்டு நிமித்திட்டாரு லாரன்ஸ்!வேதிகா உற்சாகம்



‘முனி’க்குப் பிறகு மீண்டும் ‘முனி-4’ எனப்படும் ‘காஞ்சனா-3’-யில் லாரன்ஸோடு ஜோடி சேர்ந்திருக்கிறார் வேதிகா.“திடீர்னு தமிழில் காணாம போன நீங்க, இப்ப திடீர்னு சில படங்களில் நடிக்கிறீங்க. ‘காஞ்சனா 3’ படத்துக்கு ராகவா லாரன்ஸ் உங்களை எப்படி செலக்ட் பண்ணார்?”

“கிட்டத்தட்ட ‘முனி’ படம் ரிலீசாகி ஒன்பது வருஷமாச்சு. அதில் ராகவா லாரன்ஸ் ஜோடியா வந்தேன். இதுதான் பேய் கதை சீசனை தொடங்கி வெச்ச படம். அதுக்கு பிறகு இதே ஜானரில் நிறைய பேய் படங்கள் வந்தது. ஆனாலும், ‘முனி’க்கு மட்டும் தனி மவுசு இருந்தது. பிறகு ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ படங்கள் வந்து ஹிட்டாச்சு.

இப்ப ‘முனி’ 4வது பாகம், ‘காஞ்சனா’வின் 3வது பாகமா உருவாகியிருக்கு. ‘முனி’ படம் ரிலீசானப்ப, எல்லா படங்களின் ரெக்கார்டையும் அடிச்சு நொறுக்கியது. சினிமாவில் புது டிரெண்ட் உருவாக அந்த படம் காரணமா இருந்தது.

பாலிவுட்டில் கூட ஹாரர் காமெடி படங்கள் உருவாக ஆரம்பிச்சது. ‘காஞ்சனா 1’, ‘காஞ்சனா 2’ல் நான் நடிக்கலை. ஆனா, இத்தனை வருஷம் கழிச்சு உருவான ‘காஞ்சனா 3’யில், என்னை ஞாபகம் வெச்சு ராகவா லாரன்ஸ் கூப்பிட்டு நடிக்க வெச்சார். இதுவரை எந்த படத்துக்கும் நான் இவ்வளவு நாள் கால்ஷீட் கொடுத்தது இல்லை. ‘காஞ்சனா 3’க்கு 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன்.”

“பொதுவா நீங்க தனி ஹீரோயினா நடிக்கத்தான் அதிகம் விரும்புவீங்க. ஆனா, இதில் ஓவியாவும் இருக்கிறாரே...?”

“நான் நடிக்கிற எல்லா படத்திலும், என் கேரக்டரை மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது. கதையையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணணும். ஒரு படத்தில் ஒரு ஹீரோயினுக்கு மேல் நடிச்சா, அந்த படத்துக்கு ஆடியன்ஸ் கிட்ட நிறைய எதிர்பார்ப்பு உண்டாகும். யாருக்கு என்ன ரோல் கிடைச்சிருக்கும்னு, மண்டையை போட்டு குழப்பிக்குவாங்க. இது அந்த படத்துக்கு கிடைக்கிற சக்சஸ்தானே. ஒரு கதையில் எத்தனை ஹீரோயின்கள் வேணும்னாலும் நடிக்கலாம். ஆனா, ஒருத்தருக்கு கிடைச்ச கேரக்டரில் அவர் என்ன ஸ்கோர் பண்றாருன்னுதான் பார்க்கணும்.

 ‘காஞ்சனா’வைப் பொறுத்தவரை, அது ஒருத்தருக்கான படம் கிடையாது. அது ஒரு குடும்பப் படம். எல்லா கேரக்டரும் கதையோடு பின்னிப் பிணைந்து வரும். கண்டிப்பா ‘காஞ்சனா 3’ பெரிய ஹிட்டாகும். கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டிய படம் இது.”

“ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டர் என்பதால், படத்தின் பாடல் காட்சிகளில் உங்களை பெண்டு நிமித்தி இருப்பாரே...?”

“உண்மைதான். நிறைய சிரமப்பட்டு ஆடியிருக்கேன். முன்கூட்டியே ரிகர்சல் பண்ணாலும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகு பதற்றம் ஏற்படும். அதை ராகவா லாரன்ஸ் கவனிச்சு, ‘டென்ஷன் ஆகாம ஆடு’ன்னு சொல்லி உற்சாகப்படுத்துவார். அவர் கொடுத்த உற்சாகம்தான், இந்தளவு என்னை டான்ஸ் ஆட வெச்சிருக்குன்னு நம்பறேன்.”

“திடீர்னு பெர்பாமன்ஸ் ஓரியன்டட் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே...?”

“என்னையும், என் நிறத்தையும் பார்க்கிற எல்லாருக்குமே என்மேல் நிறைய சந்தேகம் வரும். அதாவது, இந்தப் பொண்ணை நம்பி பெரிய கேரக்டர் கொடுக்கலாமா? அதை இந்தப் பொண்ணு புரிஞ்சுக்கிட்டு சரியா நடிக்குமான்னு சந்தேகப்படுவாங்க. அதுக்குத்தான் நான் முன்கூட்டியே ஹோம் ஒர்க் பண்ணுவேன்.

ஒரு படத்தில் நடிக்க கமிட்டானவுடனே, அந்த கேரக்டருக்கு நான் என்ன பண்ணணும்னு டைரக்டர் கிட்ட கேட்பேன். பிறகு வீட்டில் ஒத்திகை பார்ப்பேன். கண்ணாடி முன்னால் நின்னு நடிச்சு பார்ப்பேன். டயலாக் பேசி, அதில் ஏதாவது கரெக்‌ஷன் வந்தால் திருத்துவேன். ‘காளை’ படத்துக்கு பிறகு வந்த ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ படங்கள் என் நடிப்புத் திறமை என்னன்னு உலகறிய வைத்தது. ஆடியன்சுக்கும் என்மேல் இருந்த சில சந்தேகங்கள் தீர காரணமா இருந்தது. தமிழில் மட்டுமில்லை, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் நான் நடிச்ச சில படங்களுக்கு விருது கிடைச்சது.”

“நல்லா தமிழ் பேசறீங்க. ஆனா, இன்னமும் டப்பிங் பேச முயற்சி பண்ணலையே?”

“எனக்கும் டப்பிங் பேச ஆசைதான். ‘பரதேசி’ படத்தில் நான்தான் டப்பிங் பேசுவேன்னு, டைரக்டர் பாலா கிட்ட அடம்பிடிச்சேன். அவரும் என்னை டப்பிங் தியேட்டருக்கு வரவழைச்சு, வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார். ஆனா, அவர் எதிர்பார்த்த மாதிரி டயலாக் பேச முடியாம தவிச்சேன். காரணம், அந்தப் படத்தில் வருவது சுத்தமான தமிழ்.

அதை இலக்கணமா பேசணும். அது எனக்கு உடனே சரிப்பட்டு வராததால், வேற ஒருத்தர் டப்பிங் பேசினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிட்டேன். ஆனா, இதுவரை ஒரு படத்தில் கூட எனக்கு சொந்தக்குரல் கிடையாது. இப்ப எனக்கு தமிழ் தாய்மொழி மாதிரி மாறியிருக்கு. கூடிய சீக்கிரம் நானே டப்பிங் பேசுவேன். ஆனா, இந்தியில் நான் அறிமுகமாகும் படத்தில் சொந்தக்குரலில் பேசுகிறேன்.”

“இப்ப என்னென்ன படம் பண்றீங்க?”

“பாலிவுட்டில் நான் என்ட்ரி கொடுக்கும் படத்தில் இம்ரான் ஹாஸ்மி, ரிஷிகபூர் நடிக்கிறாங்க. தவிர, இன்னொரு இந்திப் படத்திலும் கமிட்டாகி இருக்கேன். மலையாளத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிக்கிறேன். கன்னடத்தில் உபேந்திரா கூட ஒரு படம் பண் ேறன். தெலுங்கிலும் ரெண்டு புதுப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருக்கு. தமிழில் சாய்குமார் மகன் ஆதி ஹீரோவா அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறேன். இப்படி ஒரே நேரத்தில் ஐந்து மொழி படங்களிலும் பிசியா நடிக்கிறேன்.”

“மும்பையை விட்டுட்டு, சென்னைக்கு வந்து செட்டிலாகும் ஐடியா இருக்கா?”

“இதுவரை அந்த எண்ணம் ஏற்படலை. இப்ப மும்பையில் வசிக்கிறேன். ஒருவேளை தமிழில் மறுபடியும் பிசியானால், சென்னைக்கு வந்து குடியேறுவதைப் பற்றி யோசிப்பேன்.”“பிரபலமான நடிகை நீங்க. இன்னும் எந்தக் கட்சியும் உங்களை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்காமல் இருக்கே. ஏன், உங்களுக்கு அரசியல் பிடிக்காதா?”

“ஆமா, அரசியல் எனக்கு தெரியாது. அதை தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்தாலும், இப்ப என் கவனம் முழுக்க சினிமா பற்றியே இருக்கு. சமூக வலைத்தளங்களில் என் சார்பில் கருத்துகளை பதிவு செய்கிறேன். கடவுள் கொடுத்த அற்புதமான வாய்ப்பு, பிரபலமான சினிமா நடிகை என்ற அந்தஸ்து. அந்த இமேஜை எந்த சூழ்நிலையிலும் கெடுத்துக்க மாட்டேன்.”

“உங்களைப் பற்றி எந்த கிசுகிசுவும் வர்றதில்லை. ஏன், நீங்க பார்ட்டி கேர்ள் இல்லையா?”

“நான் கொஞ்சம் பிரைவேட் பர்ஸன். தனிமை விரும்பி. யார் கூடவும் அதிகமா பேச மாட்டேன், பழக மாட்டேன். என்ன விஷயமோ அதை மட்டுமே பேசுவேன். பிறரைப் பற்றி எந்த விவாதமும் பண்ண மாட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனா, நானுண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன். நண்பர்கள் கொடுக்கிற எந்த பார்ட்டிக்கும் போக மாட்டேன். என் பர்த்டே பார்ட்டி வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும். அதை மட்டும் செலிபிரேட் பண்ணுவேன். இப்படி நான் கரெக்ட்டா இருப்பதால், காஸிப் வர்றதில்லையோ என் னவோ.”

“இது பயோபிக் சீசன். உங்களுக்கு யாருடைய கேரக்டரில் நடிக்க ஆர்வம் அதிகம்?”

“மறைந்த தேவி கேரக்டரில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். துபாய் கலைநிகழ்ச்சியில் அவரை நேரில் சந்திச்சு பேசியிருக்கேன்.”“அழகா இருக்கீங்க. சிங்கிளா இருக்கீங்க. இந்நேரம் யார் கூடவாவது காதல் வந்திருக்கணுமே...?”

“அதுதான் இல்லை. ஏன்னா, இப்ப என் கவனம் முழுக்க சினிமா மீது மட்டும்தான். என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? பிற்காலத்தில் யாரையாவது நான் காதலிச்சு கல்யாணம் பண்ணுவேனா? இல்லை, பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவேனா? இல்லை, கல்யாணத்துக்குப் பிறகு என் கணவரை காதலிக்க ஆரம்பிப்பேனான்னு இப்ப எதையும் திட்டவட்டமா சொல்ல முடியாது.

அவ்வளவு ஏன், கல்யாணமே வேண்டாம்னு கூட முடிவு எடுக்கலாம் இல்லையா? ஸோ, ஒவ்வொரு நிமிஷமும் மனசு மாறிக்கிட்டே இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி இப்பவே நினைக்க ஆரம்பிச்சா வாழ்க்கை திசைமாறிடும். எனவே, இருக்கிற வாழ்க்கையை ஜாலியா என்ஜாய் பண்ணி வாழணும். எது எப்ப நடக்குமோ, அது அப்ப கண்டிப்பா நடந்தே தீரும்.”

- தேவராஜ்