20 ஆண்டுகளாக அதே அடையாளம்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-28

தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும்  திரைப்படக் கல்லூரி  மாணவர்கள் கவனிக்கப்படாதவர்களாகவே இருந்தார்கள்.  அவ்வப்போது ஒருசில நடிகர்கள் திரைப்படக் கல்லூரியிலிருந்து வந்து வெற்றி பெற்றார்கள். ஆனால் இயக்குநராக பெயர் சொல்லும் அளவிற்கு யாரும் வரவில்லை.
விஜயகாந்த்தான் முதன் முதலாக திரைப்படக் கல்லூரி மாணவர்களை அழைத்துவந்து இயக்குநர்கள் ஆக்கினார். ‘ஊமை விழிகள்’ அதன் தொடக்கமாக  இருந்தது.  அவ்வரிசையில்  வந்தவர்தான் ரமேஷ் செல்வன்.

1998ம் ஆண்டு வெளிவந்த ‘உளவுத்துறை’, விஜயகாந்தின் 125வது படம்.  ராணுவத்தில் இருந்து ஒதுங்கி அமைதியான வாழ்க்கை வாழும் ஒரு அதிகாரியை தங்களால்  சமாளிக்க முடியாத  ஒரு முக்கிய பணிக்காக அரசு அழைப்பதும், அதை அவர் தீர்த்து வைப்பதுமான கதை. ஹாலிவுட் பாணி கதைதான். இப்போதும் அது மாதிரி கதைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அது மாதிரியான ஒரு கதைதான் உளவுத்துறையின் கதையும்.
ஆனால், அதை படமாக்கிய விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  

அதுவரை  புரியாத ஆங்கிலத்தில் ஆக்‌ஷன் காட்சி களைப்பார்த்து கைதட்டி விசிலடித்து வந்த ரசிகனுக்கு  தன் மொழியில் அப்படியான ஒரு படத்தை, அதுவும் தான் ரசிக்கும் ஹீரோவை அப்படிப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போனான்.தமிழ் சினிமாவுக்கு பக்கா மாஸ் படம் தரக்கூடிய ஒரு இயக்குநராக ரமேஷ் செல்வன் கவனிக்கப்பட்டார்.

அதன் பிறகு அவர் இயக்கிய  ‘ஜனனம்’, அவரை இன்னொரு டைமன்ஷனில் வெளிப்படுத்தியது. பக்கா ஆக்‌ஷன் படமும் தர முடியும், வேறு தளத்திலும் படம் தர முடியும் என்பதை நிரூபித்தார். ‘ஜனனம்’ மிகத் தாமதமாக வெளிவந்தது. ரமேஷ் செல்வனின் பாதையை மடை மாற்றி விட்டது. அடுத்து ஒரு வெற்றியை உடனே கொடுக்காததால் ரமேஷ் செல்வனை மக்கள் மறந்து விட்டார்கள்.  அவரும் அதற்குப் பிறகு சோர்ந்து விட்டார்.

10 வருடங்களுக்குப் பிறகு ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கினார்.  ஒரு கலவரத்தை மையப் படுத்தி நடக்கிற கதை. சத்யராஜ் மெயின் கேரக்டர்.  இந்தப் படமும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வெளிவந்தது. ‘உளவுத்துறை’ ரமேஷ் செல்வன் படமா இது என ஆச்சர்யப்படும் அளவிற்கு அத்தனை மோசமான மேக்கிங்கில் அது வெளிவந்தது. அடுத்து சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரனை ஹீரோவாகப் போட்டு ‘தலைவன்’ என்ற படம் இயக்கினார். அது அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச இமேஜையும் தகர்த்தது.

சிறுவர்களை வைத்து ‘வஜ்ரம்’ என்றொரு படம் எடுத்தார். சிறுவர்களை இத்தனை வன்முறையாளர்களாகக்  காட்டலாமா என்ற விமர்சனத்தையே அந்தப் படம் சந்தித்தது.  ‘உளவுத்துறை ’ போன்ற  ஒரு சாதனையை அவரால் மீண்டும் நிகழ்த்த முடியாமலேயே போய்விட்டது. இப்போது நுங்கம்பாக்கம்  ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை வெளியிட நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்.

ரமேஷ் செல்வன் இப்போதும் ‘உளவுத்துறை’ என்றே அடையாளம் காணப்படுகிறார். இன்றைக்கும் விஜயகாந்தின் 125வது படத்தின் இயக்குநர் என்கிற அடையாளம்தான் அவருக்கு இருக்கிறது. அதை மாற்றிக் கொள்வாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்