ரொமான்ஸ் பண்ண விடமாட்டேங்கிறாங்க... இளம் நடிகர் ஏக்கம்!



‘நட்பே துணை’ படத்தில் ஹாக்கி ப்ளேயராக கெத்து காட்டி ஹீரோ, ஹீரோயின் இருவரிடமும் மல்லுக்கட்டியவர் அஸ்வின். மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, கலைத்தாகத்தோடு சினிமாவுக்கு வந்திருக்கிறார். பட வேலைகளில் பிஸியாக இருந்தவரை ஒரு ஐஸ் க்ரீம் பார்லரில் சந்தித்தோம்.

“உங்களைப் பத்தி சொல்லுங்களேன்!”

“பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. அப்பா ஜெரோம் புஷ்பராஜ் பிரபல வக்கீல். அப்பாவுக்கு சினிமா ஆர்வம் உண்டு. சில படங்களுக்கு   மியூசிக் பண்ணியிருக்கிறார். எனக்கு  சின்ன வயதிலிருந்தே மியூசிக், நடனத்தில் ஆர்வம் அதிகம். நானே டான்ஸ் கற்றுக் கொண்டு சொந்தமாக டான்ஸ் அகாடமி ஆரம்பித்தேன். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் பிடிக்கும் என்பதால் சொந்தமா ஜிம் வைத்திருந்தேன்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தபோது வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. நல்ல பிள்ளையா அப்பா அம்மா சொன்னதை க்கேட்டு எம்.பி.ஏ.படிப்பதற்காக சிங்கப்பூர் சென்றுவிட்டேன். படிப்பு முடிந்ததும்  மீண்டும் சென்னைக்கு வந்தேன். பிரபல ஓட்டலில் உயர் பதவி, கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. மனம் மீண்டும் சினிமா பக்கம் தாவியது. கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினேன்.”

“நீங்கள் நடித்த முதல் படம் எது?”

“சினிமாவில் என்னுடைய போராட்டம் பெரியது. என் ஆர்வத்தைப் பார்த்துட்டு அப்பாவே சொந்தமா படம் தயாரிக்க முன் வந்தார். அந்தப் படம்தான் நான் நாயகனாக அறிமுகமான ‘யானும் தீயவன்.’அந்தப் படத்தில் ராஜு சுந்தரம் மாஸ்டர் வில்லனா பண்ணியிருந்தார். என்னுடைய நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போய்விட்டது. அதன் பிறகு கிடைத்த வாய்ப்பு தான் ‘நட்பே துணை’. இப்போ நட்புதான் என் கேரியருக்கு துணை செஞ்சிருக்கு.”

“இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?”

“ஆதி ப்ரோ எனக்கு நீண்ட நாள் பழக்கம். அவர்தான் ‘நட்பே துணை’யில் எனக்கு ஏற்ற மாதிரி கேரக்டர் இருப்பதாக சொல்லி அழைத்தார். நான் எதிர்பார்த்ததைவிட படத்துல எனக்கு முக்கியமான வேடம் கிடைத்தது.”

“உங்களுக்கு ஹாக்கி தெரியுமா?”

“உண்மையை சொல்லணும்னா எனக்கு ஹாக்கி தெரியாது. நான் கிரிக்கெட் ரசிகன். சின்ன வயதிலிருந்து ஏராளமான போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். பெரிய நிறுவனங்களின் கிரிக்கெட் டீமுக்காகவும் விளையாடியிருக்கிறேன். ஆல் ரவுண்ட் ப்ளேயர் என்பதால் எனக்கு டிமாண்ட் இருக்கும்.

‘நட்பே துணை’ படத்துக்காக பெரிய ஹாக்கி வீரர் ஒருவரிடம் ஆறு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். நான் மட்டுமில்ல, படத்துல வர்ற எல்லாருமே முறையாக ஹாக்கி பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். பயிற்சி யின் போது நிறைய காயங்கள் ஏற்பட்டது. ஆதி ப்ரோவுக்கு கை டிஸ்லொக்கேட் ஆகிடிச்சி. எனக்கு முதுகுப் பகுதியில் ரத்தம் உறைந்துவிட்டது.

எல்லாத்தையும் தாங்கிக் கொண்டுதான் நடித்தேன். படத்துக்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டும் வலியை மறக்க செய்துவிட்டது. படத்தில் வரும் என்னுடைய லுக், கெட்அப் எல்லாமே நானே டிசைன் பண்ணுமளவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அந்தளவுக்கு படக்குழு என் மீது நம்பிக்கை வைத்திருந்தது.”

“உங்க நடிப்பை பாராட்டிய பிரபலம்?”

“தயாரிப்பாளர் என்ற முறையில் சுந்தர்.சி, குஷ்பூ மேடம் இருவருடைய பாராட்டை பெரிதாக நினைக்கிறேன். படத்தில் வர்ற எல்லா கேரக்டரும் நல்லவங்கன்னா நல்லவங்களாவும் கெட்டவங்கன்னா கெட்டவங்களாவும் இருப்பாங்க. என்னுடைய கேரக்டர்தான் நெகட்டிவிலிருந்து பாஸிட்டிவ்வாக மாறும். அப்படி... நெகட்டிவ்வாக இருந்து பாசிட்டிவ்வாக மாறும் மாற்றத்தை சரியாகப் பண்ணியிருந்ததாக சுந்தர்.சி சார் சொன்னார். படம் பார்த்த நிறைய பேர் என்னுடைய கேரக்டர் கெத்தா இருந்ததாக சொன்னார்கள்.”

“அடுத்து?”

“நிறைய பேசிக்கிட்டிருக்கேன். இப்போ ‘பஞ்சாட்சரம்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதிலும் மெயின் லீட் பண்ணியிருக்கிறேன். எனக்கு காமெடி கலந்த கேரக்டர். முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வேறுவிதமாக இருக்கும்.”

“ஹீரோ, வில்லன் - இவ்விரண்டில் உங்கள் சாய்ஸ் எது?”

“ஹீரோ, வில்லன் என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். ஹீரோவாக இருந்தாலும் சரி, வில்லனாக இருந்தாலும் சரி, எந்த கேரக்டராக  இருந்தாலும் சரி அதில் நான் என்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.”

“சினிமாவுலே யாருடைய நடிப்பு பிடிக்கும்?”

“தனுஷ், விஜய் சேய்துபதி இருவரும் என்னுடைய ஃபேவரைட். வெற்றி, தோல்வி பாதிக்காதளவுக்கு சினிமாவில் தங்களுக்கான இடத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள்.”

“ஹிப்ஹாப் ஆதி...?”

“சினிமாவில் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் ஆதி ப்ரோதான். என்னுடைய முதல் படத்திலிருந்து  இன்றைய தேதி வரை அவர்தான் என்னை வழிநடத்திட்டு வர்றார். நான் சினிமாவுக்கு புதியவன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவரிடம்தான் போய் நிற்பேன். நண்பனுக்கு நண்பனாக சகோதரனுக்கு சகோதரனாக, வழிகாட்டிக்கு வழிகாட்டியாக சகல விதத்திலும் அவர்தான் எனக்கு உதவி செய்து வருகிறார்.”

“வாழ்க்கைக்கு சினிமா யூஸ்ஃபுல்லா இருக்கிறதா?”

“கண்டிப்பா. ஆதி ப்ரோ வளரும்போது அவருடன் இருந்த எல்லோரையும் கை தூக்கி விட்டார். அதுபோல் எனக்குன்னு சின்னதா ஒரு சர்க்கிள் இருக்கு. அவங்களையும் தூக்கி விடணும் என்ற எண்ணம் சினிமாவுக்கு வந்தபிறகுதான் தோன்றியது. பொதுவாக ஒருத்தர் வாழ்க்கையில் உயரும்போது அடுத்தவர்களை கீழே தள்ளிட்டு வளர நினைப்பாங்க. சினிமாவில் கீழே இறக்கிறவங்களை உயர்த்தணும் என்ற எண்ணத்தோடு தூக்கி விடுகிறார்கள். சினிமாவில் நான் அந்த மாதிரி மனிதர்களைத்தான் சந்தித்து வருகிறேன்.”

“உண்மையை சொல்லுங்க. யார் கூட டூயட் பாடுற மாதிரி கனவு வருது?”

“மூணு படம் பண்ணிட்டேன். ஆனால், ஒரு படத்திலும் ரொமான்ஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மாதிரி கனவும் வந்ததில்லை. நீங்க அழுத்திக் கேட்பதால் சொல்றேன். எனக்கு சிம்ரன் மேடத்தை பிடிக்கும். இப்போ அவங்க அதிக படங்கள் பண்ணுவதில்லை. சமீபத்துல தலைவர் கூட ‘பேட்ட’ பண்ணியிருந்தாங்க. அவங்களை மீண்டும் திரையில் பார்த்து சந்தோஷப்பட்ட ஜீவன்களில் நானும் ஒருவன். எதிர்காலத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி.”

“நீங்க டைரக்‌ஷன் பண்ணப் போறதா சொல்றாங்க?”

“நான் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன் சுமார் இருநூறு கதைகள் கேட்டிருக்கிறேன். அதுமட்டுமில்ல, நான் நடித்த படங்களில் அசோசியேட் இயக்குநராகவும் வேலை பார்த்துள்ளேன். ‘நட்பே துணை‘ படத்திலும் நடிப்பதோடு என் வேலையை நிறுத்திக் கொள்ளாமல் எல்லா வேலைகளையும் செய்தேன். மியூசிக்ல ஆர்வம் இருப்பதால் ஏராளமான ஆல்பம் பண்ணியிருக்கிறேன். அந்த அனுபவத்தை வைத்து நானே ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளேன். காமெடி கலந்த கமர்ஷியல் கதை. அறிவிப்பு சீக்கிரத்துல வரும்.”

- சுரேஷ்ராஜா