அப்புக்குட்டியும் ஹீரோதான்! வசுந்தரா சொல்கிறார்



சரண் இயக்கிய ‘வட்டாரம்’ படத்தில், அதிசயா என்கிற பெயரில் அறிமுகமானவர், இப்போது வசுந்தரா காஷ்யப் என்ற பெயரில் அடுத்த ரவுண்ட் ஆரம்பித்து, சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கி இருக்கிறார்.
‘உன்னாலே உன்னாலே’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘பேராண்மை’, ‘போராளி’ ஆகிய படங்களைக் கடந்து வந்த அவர், இடையில் திடீரென்று பிரேக் எடுத்துக்கொண்டு, இப்போது மீண்டும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பக்ரீத்’, திரையுலகினரின் பார்வையை வசுந்தராவை நோக்கித் திருப்பி இருக்கிறது. அவரும் கைநிறைய படங்களுடன் புதிய உற்சாகத்துடன் கிளம்பிவிட்டார்.

“திடீர் திடீர்னு ஃபீல்டுலே இருந்து காணாமப் போயிடறீங்களே?”

“ஆரம்பக் காலத்தில் என் சினிமா கேரியர் ரொம்ப வேகமா இருந்தது. மளமளன்னு நிறைய படங்களில் நடிச்சேன். என் தோற்றமும், குரலும் மத்தவங்ககிட்ட இருந்து என்னை வித்தியாசப்படுத்திக் காட்டியது. இது பிளஸ் பாயின்ட்டா இருந்தாலும், ஒருகட்டத்தில் அதுவே எனக்கு மைனஸ் பாயின்ட் ஆனது.

சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் என் கேரக்டர் பேசப்பட்டது. ஆனா, அதுக்குப் பிறகு அதே மாதிரி நிறைய கிராமத்து கேரக்டர்கள் என்னை தேடி வர ஆரம்பிச்சது. கிராமத்துப் பெண்ணா நடிக்கிறதும், கிராமங்களில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துக்கிட்டு, பிறகு வீட்டுத் திண்ணையில் படுத்து தூங்கி, காலையில் வாய்க்காலில் குளிச்சிட்டு நடிக்கிறதும் சந்தோஷமா இருந்தது. ஆனா, ஒரே யூனிபார்ம் போடுவது போன்ற உணர்வை அந்த கேரக்டர்கள் ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்ல, நான் அக்மார்க் தமிழ்ப் பொண்ணு. தமிழ்ப் படங்களில் ஜெயிச்ச பிறகுதான் அடுத்த மொழியில் நடிக்கணும்னு உறுதியா இருந்தேன். ஆனா, திடீர்னு அந்த உறுதியை என்னால் காப்பாத்த முடியலை.எனக்கு என்ன குறை, ஏன் தமிழ் சினிமா நான் நினைச்ச இடத்தை கொடுக்கலை என்ற கேள்வி எழுந்தது.

அதுக்கான விடையை தெரிஞ்சுக்கவும், ஒரேமாதிரி நடிப்பதில் இருந்து என்னை மாத்திக்கவும் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. அதிசயா என்ற பெயரில் இருந்து, வசுந்தரா காஷ்யப் என்ற என் சொந்தப் பெயருக்கு திரும்ப வேண்டிய கட்டாயமும் அதனால்தான் உருவாச்சு.”

“தொடர்ந்து வில்லேஜ் கெட்டப்பே செய்யுறது அலுக்கலையா?”

“நிச்சயமா. ஒருகட்டத்தில் என்னை நானே கேள்வி கேட்க ஆரம்பிச்சேன். எனக்கு முன்னால் எத்தனையோ ஹீரோயின்கள் கிராமத்து கேரக்டர்களில் நடிச்சு சாதனை படைச்சிருக்காங்க. அப்படி இருக்கிறப்ப, அதை ஏன் நான் நெகட்டிவ்வா நினைக்கணும்னு தீவிரமா யோசிச்சேன். கன்னியாகுமரி மாவட்ட கிராமத்து பெண்ணும், வேலூர் மாவட்ட கிராமத்து பெண்ணும் வேறு வேறுதானே. இதையே ஏன் நாம் வெரைட்டியா நடிக்கக்
கூடாதுன்னு முடிவு செய்தேன். என் பயணத்தை நல்லபடியா ஆரம்பிச்சு, வேற மாதிரி கேரக்டர்கள் என்னைத் தேடி வர்றப்ப வரட்டும்னு முடிவு செய்தேன்.”

“சமீபமா ரொம்ப செலக்ட் பண்ணி நடிக்கறீங்க போலிருக்கே?”

“உண்மைதான். ஹீரோயினாதான் நடிப்பேன்னுல்லாம் நான் எப்பவுமே அடம் பிடிச்சது கிடையாது. ‘கண்ணே கலைமானே’ படத்தில் சின்ன கேரக்டர்தான். டைரக்டர் சீனு ராமசாமி என் குடும்ப நண்பர். அவர்தான் என்கிட்ட, ‘உன்னால்தான் இந்த கேரக்டரை சரியா பண்ண முடியும்’னு சொன்னார்.

அவருடைய நம்பிக்கைக்கு நியாயம் செய்ய முடிவு பண்ணித்தான் அந்தப் படத்தில் நடிச்சேன். ‘பக்ரீத்’ படத்தில் என் போர்ஷன் சின்னதா இருந்தாலும், படத்தின் கதைக்கு அது ரொம்ப வலுவானதுன்னு டைரக்டர் சொன்னார். அதுமட்டுமில்லை, அது ஒரு ஒட்டகத்தை பற்றிய கதைன்னு சொன்னதும் விரும்பி நடிச்சேன்.”

“ஆனா, அப்புக்குட்டியோட எல்லாம் ஹீரோயினா நடிக்கறீங்க?”

“அதுலே என்ன சார் பிரச்சினை? ‘வாழ்க விவசாயி’ படத்தில் அப்புக்குட்டி ஜோடியா நடிக்கிறேன். இந்தப் படத்தில் நான் ஒப்பந்தமான நாளில் இருந்து, ‘என்னது... அப்புக்குட்டி கூடவா சேர்ந்து நடிக்கிறீங்க?’ன்னு நிறையபேர் கேட்கிறாங்க. அப்புக்குட்டி தேசிய விருது பெற்ற ஒரு நடிகர். அவரும் ஹீரோதான். விவசாயிகள் தற்கொலை பற்றி பேசும் முக்கியமான படம் அது. அதில் நடிக்க மனசாட்சிப்படி எந்த நடிகையுமே எந்த நிபந்தனையும் விதிக்க முடியாது.”

“அடுத்து?”

“நிறைய இருக்கு. ‘மைக்கேலாகிய நான்’ என்கிற பேய்ப்படத்தில் குடும்பத் தலைவியா நடிக்கிறேன். ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் பத்திரிகையாளரா நடிக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மல்டி ஸ்டார் படத்தில் மாடர்ன் கேர்ளா நடிக்கிறேன். அதுக்கு அடுத்து ரெண்டு படம் சைன் பண்ணியிருக்கேன். அதில் ஒன்று, ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்.

இன்னொன்று, பக்கா மாஸ் கிளாமர் சப்ஜெக்ட். இதையெல்லாம் வெச்சு பார்க்கிறப்ப, தமிழ் சினிமாவில் நான் நினைச்ச இடத்தை நெருங்கிட்ட மாதிரி தெரியுது. தேசிய விருது பெற்ற ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நடிச்சேன். இப்ப தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி கூட சேர்ந்து நடிக்கிறேன். விரைவில் நானும் தேசிய விருது வாங்குவேன்னு நம்பிக்கை இருக்கு. நம்பிக்கைதானே வாழ்க்கை!”

- மீரான்