40+லும் இளமை அன்லிமிட்டெட்!



மலையாளத்தில் அரை செஞ்சுரியை நெருங்கிவிட்ட நிலையில் தமிழில் இப்போதுதான் முதல் கணக்கை துவங்கியுள்ளார் ‘அசுரன்’ படத்தில் பச்சையம்மா கேரக்டரில் நடித்த மஞ்சு வாரியர். நாகர்கோயிலில் பிறந்து கேரளாவில் செட்டிலான பச்சைக்கிளி மஞ்சு சேச்சியிடம் பேசினோம்.
“எப்படி இவ்வளவு இளமையை மெயின்டெயின் பண்றீங்க?”

“பிளான் எல்லாம் பண்ணுவதில்லை. மனதுக்கு அழுத்தம் கொடுக்கமாட்டேன். நடப்பது எல்லாமே நல்லதுக்குத்தான் என்று எடுத்துக்கொள்வேன். சினிமா, நடிப்புதான் என்னை அதிகமாக ரிலாக்ஸ் பண்ணியுள்ளது. உண்மையை சொல்லப்போனால் நாற்பதுகள்தான் வாழ்க்கையை அழகாக மாற்றுகிறது.”

“தமிழில் ‘அசுரன்’ அனுபவம் எப்படி?”

“ரொம்பவே புது அனுபவமாக இருந்தது. படத்தில் நடிக்க கமிட்டானதும் ‘வெக்கை’ கதை படிக்கணுமா என்று வெற்றி சாரிடம் கேட்டேன். ‘அதெல்லாம் வேண்டாம். ப்ளாங்காக வாங்க’ என்றார். முதன் முதலாக தமிழில் நடித்தபோது புது ஸ்கூலில் சேர்ந்தது போல் இருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் நெர்வஸாக  இருந்தது. என்னைத் தவிர மற்றவர்கள் வெகு இயல்பாக இருந்தார்கள்.

அவர்களின் தோழமையால் சில நாட்களில் எல்லோருடனும் சகஜமாகப் பழக முடிந்தது. போகப் போக எல்லோரும் ‘அசுரன்’ குடும்பமாக மாறினோம். நான் தமிழில் நடித்த முதல் படம் வெற்றி என்பதில் மகிழ்ச்சி. குடும்பக் கதை சொல்லும் படம் என்பதால் மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.”

“தனுஷ்?''

“வயது, அனுபவம் தாண்டி தனுஷ் சாருடன் நடித்தது நல்ல அனுபவம். தனுஷ் சாருடன் எப்போதோ நான் நடித்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட நான்கு படங்கள் கால்ஷீட் காரணங்களால் அப்படி மிஸ்ஸானது. தனுஷ் சார்தான் மஞ்சு வாரியரிடம் பேசிப் பாருங்கள் என்று வெற்றி சாரிடம் சொல்லியிருக்கிறார்.

இந்தமுறை கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணக்கூடாது என்று முடிவு பண்ணினேன். நான் மட்டுமில்ல, தனுஷ் - வெற்றி காம்போவில் நடிக்க யாரை அழைத்தாலும்  ‘யெஸ்’ என்று சொல்வாங்க. மற்றபடி தமிழுக்கு நான் லேட்டாக வந்தாலும் பெஸ்ட் படம் கிடைத்தது. தனுஷ் நடிப்பு குறித்துச் சொல்வதாக இருந்தால் மிக அற்புதமான நடிகர். நானும் தனுஷ் சாரும் சேர்ந்து நடிக்கும் போது பெரிய வித்தியாசம்  தெரியாது.

ஆனால் செட்ல பார்த்த தனுஷுக்கும் திரையில் வரும் தனுஷுக்கும் நடிப்புல பெரிய வித்தியாசம் தெரியும். ஒருவேளை நான் போனபிறகு தனியாக எடுத்திருப்பார்களோ என்ற சந்தேகம் வருமளவுக்கு திரையில் வரும் தனுஷ் எக்ஸ்பிரஷனால் ஆச்சரியப்படுத்தியிருப்பார். அது பெரிய மேஜிக். அந்த வகையான நடிப்பை  மலையாளத்தில் மோகன்லாலிடம் பார்க்கலாம்.”

“தமிழில் டப்பிங் பேசிய அனுபவம்?”

“நான் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியம்தான் படித்தேன். அந்தவகையில் தமிழ் எனக்கு பரிச்சயமான மொழி. ஆனால் வட்டாரத் தமிழ் என்பது சற்று கடினம். கோவில்பட்டி மக்களைப் பார்த்து முடிந்தவரை அந்த வட்டார பாஷையைக் கற்றுக்கொண்டேன். டப்பிங் பேசும்போது வசனகர்த்தா சுரேஷ் கண்ணா  உதவியாக இருந்தார்.

இயக்குநர் வெற்றிமாறன் சாருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் என்கரேஜ் பண்ணினார். ‘டப்பிங் கலைஞர் எவ்வளவு சிறப்பாகப் பேசினாலும் உங்கள் குரல் போல் வராது.

நீங்கள் ட்ரை பண்ணிப்பாருங்கள். சரிவரவில்லை என்றால் விட்டுவிடலாம்’ என்றார். நான் பயந்ததுபோல் இல்லை. நான் சொந்தக் குரலில் பேசியதை விமர்சனத்திலும் குறிப்பிட்டு பாராட்டி எழுதினார்கள். கேரளா மீடியாவும் பாராட்டியது.”

“தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்தமான உணவு?”

“நான் உணவில் பேதம் பார்க்கமாட்டேன். சென்னை வந்தால் கண்டிப்பாக மீல்ஸ் விரும்பி சாப்பிடுவேன். எந்த ஊருக்குப் போனாலும் உள்ளூர் சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடுவேன். அரிசி சாதம், சாம்பார், ரசம், மீன் ஆகியவை பிடித்த உணவு.”
“டான்ஸர் மஞ்சு என்ன ஆனார்?”

“டான்ஸுக்கு ப்ரேக் விட்டது என்னுடைய சாய்ஸாகத்தான் இருந்தது. மற்றபடி டான்ஸை நிறுத்த தனிப்பட்ட எந்தக் காரணமும் இல்லை.”
“இப்போது எந்தமாதிரி கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?”

“நான் அறிமுகமானபோதும் வெயிட் ரோல் பண்ணியிருக்கிறேன். இப்போதும் வெரைட்டியாக படங்கள் வருகிறது.  பரீட்சார்த்தமாக ஏராளமான  படங்கள் வருகிறது. தனிப்பட்ட விதத்தில் எனக்கு வரும் படங்களும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்கிறது. ஆனால் எல்லாப் படங்களையும் என்னால் பண்ணமுடியாது. அதில் செலக்டிவ்வாக பண்ணுகிறேன்.

இயக்குநர்கள் என்னை மனதில் வைத்து எழுதுவது சந்தோஷமாக இருக்கிறது. நடிகைகளுக்கு திருப்தி வரக்கூடாது. பச்சையம்மா கேரக்டர் எனக்கு புகழ் பெற்றுக் கொடுத்தாலும் அதையும் தாண்டி நடிக்க விரும்புகிறேன். அந்த வகையில் ஏராளமான நடிகர்களுடனும், இயக்குநர்களுடனும் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.”

“தமிழ்- மலையாளம்-  என்ன வித்தியாசம்?”

“வித்தியாசம் என்பதைவிட தமிழ், மலையாளம் ஆகிய இவ்விரண்டு சினிமாக்களிலும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. கேரள மக்கள் தமிழ் சினிமாவை அதிகம் ரசிக்கிறார்கள்.”

ராஜா