ஹேப்பி தீபாவளி!



ஆயிரா

‘தெறி‘ படத்தில் சமந்தாவுக்கு தங்கையாக நடித்தவர். பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். சிறுவயது முதல் முன்னூறுக்கும் மேலான விளம்பரங்களில் கலக்கிய ஆயிராவுக்கு வயது  23. இந்த வருடம் வெளியான ‘சகா' மூலம் பொண்ணு நாயகியாக அறிமுகம். அதிலும் ஆயிரா நடனம் ஆடும் ‘யாயும் யாயும்' பாடல் இந்த வருடம் அத்தனை பாடல்கள் வரிசைகளிலும் டாப் .

அந்தப் பாடல் செய்த மாயம் ஆயிரா இளைஞர்களின் கிரஷ் லிஸ்ட்டில் ஈஸியாக ஆக்கிரமித்துவிட்டார். ‘சுவாதியின் கொலை வழக்கு',  ‘சைரன்' உள்பட அடுத்தடுத்து படங்கள் தயாராக இருக்கின்றன. பாடல்கள் கேட்பது, விடாமல் படங்கள் பார்ப்பது பொண்ணுக்கு பிடிச்ச விஷயம்.

மேகா ஆகாஷ்

அறிமுகமே தேவையில்லாமல் மேகா, ஒரே வருடத்தில் உச்சம் தொட்டிருக்கிறார். ‘பேட்ட’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்', ‘பூமராங்’, ‘ஒரு பக்கக் கதை’, விஜய் சேதுபதியின் 33வது படம் என அதகள ஆரம்பம். 2017ல் தெலுங்கு ‘லை’ மூலம் சினிமாவுக்கு அறிமுகம். 2018ல் ‘சல் மோகன ரங்கா’. 2019 முதல் அடுத்தடுத்து தமிழ்ப் படங்கள்.

இடையில் ‘சேட்டிலைட் ஷங்கர்'  படம் மூலம் இந்தியிலும் கால் பதித்தாகிவிட்டது. முதன்முதலில் நடிக்கத் துவங்கியது ‘ஒரு பக்கக் கதை’ மூலம்தான். எப்போது ரிலீஸாகுமோ தெரியவில்லை. விருதுநகர் காரியாப்பட்டி ஜில்லாவில் பிறந்த சக்கரக்கட்டி. ஆனால், சென்னைப் பொண்ணாகத்தான் வளர்ந்தார். லேடி ஆண்டாள் பள்ளியில் படிப்பு. பெண்கள் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பு. அப்பா பிஸினஸில் பிஸி. பொண்ணோ நடிப்பில் பிஸியோ பிஸி.

ஷ்ரிதா சிவதாஸ்

எர்ணாகுளத்தின் அலுவாவில் பிறந்த கேரளப் பெண்குட்டி. ‘தில்லுக்கு துட்டு-2’ மூலம் தமிழில் அறிமுகமான மோகினி. உற்றுப் பார்த்தால் 80s ராதா + 90s மந்திரா என்று டெட்லியான காம்பினேஷனில் ஹோம்லி + கிளாமர் தோற்றம். மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பாராட்டுகளைக் குவித்தவர். கேரளா களடி சங்கரா கல்லூரியில் மைக்ரோபயோலஜியில் பட்டதாரி.

மலையாள  டிவி சேனலில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர், சினிமா வாய்ப்புகளால் இப்போது நடிகை. சின்னத் திரை, வெள்ளித்திரை என இரண்டு குதிரைகளையும் டாப் கியரில் விரட்டி ஓட்டும் பப்ளி பப்பாளிக்கு 2014ல் திருமணம் ஆகிவிட்டது என்பதுதான் இளசுகளுக்கு பகீர் தகவல். கணவர் பெயர் தீபக் நம்பியார், துபாயில் இன்ஜினியர்.

தான்யா பிரபு

‘தடம்’ படம் மூலம் தடம் பதித்திருக்கிறார். பெங்களூரில் பிறப்பு. இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்தவர். ஃபெமினா மிஸ் இந்தியா கொல்கத்தா விருது பெற்ற தான்யாவுக்கு தற்சமய இருப்பிடம் மகாராஷ்டிரா. ‘நேனு சைலஜா’ தெலுங்குப் படம் மூலம் 2016ல் சினிமா என்ட்ரி.

தெலுங்கில் மூன்று, கன்னடத்தில் நான்கு, தமிழில் ஒன்று என ஏற்கனவே படங்கள் ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு படம் வீதம் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தியில் ஹிட்டான ‘விக்கி டோனார்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தாராள பிரபு’ படத்தில்  ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடி தான்யாதான். 26 வயதான தான்யாவுக்கு புத்தகம் என்றால் கொள்ளை ஆசை.

சம்யுக்தா ஹெக்டே

பெங்களூரில் பிறந்த சம்யுக்தாவுக்கு பூர்வீகம் உத்தர கர்நாடகாவில் கேளாகினமானே கிராமம். பி.ஏ சைக்காலஜியும், ஜர்னலிசமும் ஒருசேர படித்துக் கொண்டிருந்தவருக்கு நடிப்பின் மீது மோகம். அந்தப் படிப்பை விட்டுவிட்டு பகவான் மஹாவீர் ஜெயின் கல்லூரியில் நடனம், நடிப்பு பயின்றார். இவரது முகநூல் புகைப் படங்களைப் பார்த்து ‘கிரிக் பார்ட்டி' கன்னட படக்குழு இவரை சினிமாவுக்கு அழைத்தது.

எம்.டிவியில் ஹாட் நிகழ்ச்சியாக ‘ஸ்பிலிட்ஸ் வில்லா’ உட்பட பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பிரபமாலன ஹெக்டே ‘வாட்ச்மேன்' படம் மூலம் தமிழில் அறிமுகம். அடுத்தடுத்து ‘கோமாளி', ‘பப்பி' என படங்கள் வெளியாகி, இப்போது ‘தேள்' படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இம்சை செய்யும் சம்யுக்தா, ஃபிட்னஸ் வெறியர். எந்நேரமும் ஜிம்தான் ஹாபி.

பல்லக் லால்வாணி

‘குப்பத்து ராஜா’, ‘சிக்ஸர்’ ஆகிய படங்கள் மூலம் தமிழுக்கு நல்வரவு. உத்திரப்பிரதேசத்தில் பிரக்யாராஜில் பிறந்தவருக்கு வயது 24. படிப்புக்காக வந்தவர் மாடலிங் ஆர்வத்தால் ஹைதராபாத்திலேயே செட்டில் ஆனார். சில விளம்பரங்களில் தலை காட்டியவருக்கு 2016ல் தெலுங்கு சினிமா வெல்கம் போர்டு போட்டது.

‘அப்பாயிதோ அம்மாயி’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகம். இந்தி டிவி சீரியல்களில் கொடிகட்டி பறக்கும் ஜித்தன் லால்வாணியின் மகள். மும்பையில் அவ்வப்போது ஒரு பையனுடன் வலம் வரும் லால்வாணி, காதல் குறித்த கேள்விகளுக்கு எப்போதும் பதில் சொல்ல மறுக்கிறார். சால்சா நடனம் ஆடுவதில் ஆர்வம் அதிகம்.

அனாகா எல்.கே. மருதொரா

‘நட்பே துணை' படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன கேரளா பொண்ணு.கோழிக்கோடு, கேரளாவில் பிறந்த அனாகாவிற்கு வயது 27.  பி.டெக்., இ.சி.இ-யில் பட்டம் பெற்ற அனாகா ‘ரக்‌ஷதிக்கரி பாய்ஜு ஒப்பு’ படம் மூலம் சினிமாவிற்கு வருகை. இடையில் மூன்று மலையாளப் படங்கள். ‘நட்பே துணை' மூலம் தமிழில் அறிமுகமான அனாகா, தெலுங்கிலும் ‘குணா 369' படம் மூலம் என்ட்ரி கொடுத்துவிட்டார். அப்பா, அம்மா இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். கிலோ மீட்டர் கணக்காக சைக்கிள் ஓட்டுவது அம்மணியின் ஹாபி. புத்தக வாசிப்பு மற்றும் இசையில் ஆர்வம் உண்டு.

நிக்கி தம்பொலி

‘காஞ்சனா-3’ மூலம் தமிழில் என்ட்ரி. ஔரங்காபாத் , மகாராஷ்டிராவில் பிறந்தவருக்கு வயது 22. பட்டப்படிப்பு முடித்தவுடன் மாடலிங்கில் இறங்கியவர். பிரபல விளம்பரங்கள் பலவற்றிலும் நடித்து விட்டார். ‘சிக்கத்தி கதிலோ சித்தக்கொத்துடு’ என்னும் ஹிட்டான தெலுங்கு படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவருக்கு ரோஹித் கிடா என்பவருடன் காதல் மலந்துள்ளது. இவர், நிக்கியின் மாடலிங் துறையைச் சேர்ந்த நண்பர்.

ஸ்வேதா திரிபாதி

‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் மூலம் தமிழில் காலடி பதித்த டெல்லி பொண்ணு. குறும்புக் கண்கள், சற்றே உயரம் குறைந்த தோற்றம் ஸ்வேதாவின் பிளஸ். 34 வயதான ஸ்வேதாவுக்கு சைதன்யா ஷர்மா என்பவருடன் 2018ல் திருமணம் ஆனது. அப்பா ஐ.ஏ.எஸ் கலெக்டர். ஏராளமான குறும்படங்கள், வெப் சீரீஸ்களில் நடித்த ஸ்வேதா ‘மசான்', ‘மிர்சபூர்', ‘லாகோன் மெயின் ஏக்' உள்ளிட்ட  குறும்படம் மற்றும் வெப் சீரிஸ்களால் அதீத பிரபலம் அடைந்தார். மேலும் விருதுகளும் குவிய ‘மெகந்தி சர்க்கஸ்’ குழு இவரை தமிழுக்கு அழைத்து வந்தது.

ஆஷிமா நர்வால்

ஹரியானா பொண்ணு. ‘கொலைகாரன்' மூலம் தமிழில் அறிமுகமானவர், தொடர்ந்து ‘ராஜபீமா’ படத்தில்  ஒப்பந்தம் ஆனார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நர்ஸிங் பட்டப்படிப்பு முடித்தவர். மிஸ் இந்தியா - ஆஸ்திரேலியா, மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகன்ஸ் மற்றும் மிஸ் இந்தியா குளோபல் உள்ளிட்ட அழகுப் பட்டங்களுக்குச் சொந்தக்காரர்.

 ‘புலி’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் எனக் கூறும் ஆஷிமாவுக்கு ‘இளையதள பதி' விஜய் என்றால் கொள்ளை இஷ்டம். இவர் நடித்த முதல் படமான  ‘நாடகம்’ தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக, லக்கி சார்ம் நாயகி அந்தஸ்து பெற்றுத் தந்தது. 28 வயதான ஆஷிமா ஜிம்முக்கு அடிமை.

ஷிரினி கன்ச்வாலா

மும்பை மஹாராஷ்டிரா பொண்ணு. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். மும்பையில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி பெற்றவர். மூன்று வருடங்கள் வேலையும் செய்திருக்கிறார். ‘தேச திம்மெரி’ தெலுங்கு படம் மூலம் சினிமாவுக்குள் வந்தவர், அப்படியே சினிமாவிலேயே செட்டிலாகி விட்டார். 24 வயதான ஷிரினி, எதார்த்தமாக ஒரு முறை போட்டோஷூட் எடுத்து மாடலிங் போகலாம் என முடிவெடுத்தவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் துவங்கிவிட்டன.

கீர்த்தி பாண்டியன்

நடிகர் அருண் பாண்டியனின் மகள். நடிப்பு, நடனம், சால்ஸா டான்ஸ் என அனைத்தும் முறைப்படி கற்றுக்கொண்டவருக்கு மியூசிக் வீடியோக்கள் மூலம் இந்தியா முழுக்க வாய்ஸ் கிடைத்தது. ஆரம்பத்தில் இவரது ஒல்லி தேகத்திற்காக தமிழ் சினிமா வாய்ப்புகள் கைக்கு வராமல் நழுவிக் கொண்டே இருந்தன.

பின் ‘தும்பா' படம் மூலம் நடிப்பு கேரியர் சாத்தியமானது. எனினும் தியேட்டர் நடிப்பை விடாமல் செய்யும் கீர்த்திக்கு அட்வென்ச்சர் பயணம் என்றாலும் படங்கள் என்றாலும் விருப்பம்.

தாரா அலிஷா பெர்ரி

ஏ1’ படம் மூலம் அய்யர் ஆத்து மாமியாக அறியப்பட்ட அலிஷாவுக்கு ஏற்கனவே இணைய உலத்தில் ஏகபோக ரசிகர்கள். ‘லவ் லஸ்ட் & கன்குலூஷன்’ வெப் சீரீஸில் நடித்தமைக்காக பாராட்டுகளைக் குவித்தவர். ‘100% லவ்’ தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். 8 இந்திப் படங்கள், 2 தெலுங்கு படங்கள் மற்றும் ஒரு பெங்காலி படத்தில் நடித்திருக்கிறார்.

28 வயதான அலிஷா, மும்பைப் பொண்ணு. கலிபோர்னியாவில் பட்டப்படிப்பு படித்தவர். முன்னாள் நடிகை மற்றும் மாடல் நந்தினி சென்னின் மகள். முறைப்படி நடிப்பு, திரைக்கதை, எழுத்து, சினிமா தயாரிப்பில் பயிற்சி பெற்றவர். இவருடைய பாட்டி பிரபல வானிலை அறிவிப்பாளர் பப்லூ சென்.

லிஜோமோல் ஜோஸ்

இடுக்கி, கேரளாவில் பிறந்த லிஜோமோல் ரிப்போர்ட்டராக பிரபல டிவி சேனலில் வேலை செய்தவர். இடையில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ஆடிஷனில் கலந்துகொள்ள தேர்வானவர் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் நூலக அறிவியல் படித்து வருகிறார்.

மலையாளத்தில் ஆறு படங்கள் நடித்த லிஜோமோல் ‘சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்து யாருப்பா இந்த ஹோம்லி பொண்ணு என பலரையும் கேட்க வைத்தவர்

கஷ்மீரா பர்தேசி

‘சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் ஜிவிபியின் ஜோடி. 23 வயதான கஷ்மீரா புனே, மகாராஷ்டிரா பொண்ணு. ஃபேஷன் விரும்பியான கஷ்மீரா புனே கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் மற்றும் கம்யூனிகேஷன் படிக்கும் போதே மாடலிங் வாய்ப்புகள் வரத்துவங்கின. எனினும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு கற்றுக்கொண்டு பின் கமர்ஷியல்களில் நடிக்கத்துவங்கினார்.

தென்னிந்தியாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்தன. ‘நர்த்தனசாலா' படம் மூலம் தெலுங்கில் நுழைந்தவர் ‘சிவப்பு  மஞ்சள் பச்சை' மூலம் தமிழுக்கும் வந்துவிட்டார்.  மேலும் ‘மிஷன் மங்கல்' படம் மூலம் இந்தியா முழுவதும் பொண்ணு பிரபலம். நேரம் கிடைத்தால் ராயல் என்ஃபீல்ட் போன்ற பெரிய வண்டிகளில் வரூம் என உறுமிப் பறக்கும் பைக் மங்கை.

தொகுப்பு ஷாலினி நியூட்டன்