இப்படித்தான் இடம் பிடிக்கிறாங்க!



ஒரு நடிகைக்கு திரைப்பட வாய்ப்பு எப்படி கிடைக்கிறது?

ரசிகர்கள் ‘எப்படி எப்படி எல்லாமோ’ கற்பனை செய்து கொள்கிறார்கள். அவர்கள் கேள்விப்படும் தகவல்களில் ஓரிரண்டு உண்மையாக இருக்கலாமே தவிர, சினிமா என்கிற துறை எப்படி இயங்குகிறது என்கிற புரிதலே இல்லாமல்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.

சினிமா வந்த புதிதில் பெண்கள் சினிமாவில் நடிக்கவே தயங்கினார்கள். இதனால் ஆரம்ப காலக்கட்டத்தில் மேடை நாடகங்களில்  நடித்துக் கொண்டிருந்த நாற்பது வயதுக்கு மேற்பட்ட நடிகைகளை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து நடிக்க வைத்தார்கள். ஆண்களே கூட பெண் வேடம் இட்டு நடித்ததுண்டு.

காலம் மாறியது.பெண்கள் சினிமாவைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டார்கள். அப்போது  அவர்கள் சினிமாவைத் தேடிச் செல்லவேண்டிய நிலை வந்தது.  அந்த நேரத்தில் ஒரு சினிமாவில் எல்லாமுமாக இருந்தவர் தயாரிப்பாளர்தான். அதனால்தான் அவரை முதலாளி என்று அழைத்து ஹீரோ முதல் லைட் பாய் வரை எழுந்து நின்று வணங்கினார்கள். ஒரு படத்தின் நாயகியைத் தீர்மானிப்பது தயாரிப்பாளர்கள்தான்.

எண்பதுகளில் இயக்குநர்கள், பள்ளி, கல்லூரிகளின் வாசலில் நின்று கொண்டு ஹீரோயின் தேடிய மாதிரி அந்தக்கால தயாரிப்பாளர்கள் எங்கு நாடகம் நடந்தாலும் சென்று பார்த்து, தங்கள் கதைக்கேற்ற பெண்கள் அந்த நாடகத்தில் நடித்தால் அள்ளிக்கொண்டு வந்தார்கள். அதற்கும் பிந்தைய காலத்தில் சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகைகள், தயாரிப்பாளர்களை தங்கள் நாடகத்தைப் பார்க்க வருமாறு அழைத்தார்கள்.

சினிமாவில் நடிக்க விரும்பும் மகளை தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பிய  பெற்றோர், மகளின் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதைக் காண வருமாறு தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை அழைத்தார்கள். இப்படி நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்குமான தொடர்புப் பாலமாக நாடகங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் அமைந்தன.

இதற்கு அடுத்த காலக்கட்டம்தான் பிற மொழி நடிகைகள் இங்கு நடிக்க வந்தது. அதே நேரம் நம்முடைய சினிமா தயாரிப்பாளர்கள் கையில் இருந்து ஹீரோக்களின் கைக்கு வந்ததும் இதே காலம்தான். ஹீரோக்கள், பிற மொழிப் படங்களைப் பார்த்து, அதில் சிறப்பாக நடிக்கும் அல்லது அழகாக  இருக்கும் நடிகைகளை தமிழுக்கு அழைத்து வந்தார்கள். இப்படித்தான் மலையாளம், தெலுங்கு,  கன்னடத்தில் இருந்து நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு வந்தார்கள்.

எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் ஹீரோக்களின் கையில் இருந்த சினிமா இயக்குநர்களுக்குக் கைமாறியது. கதையின் களம், கதை சொல்லும் பாணி போன்றவை மாறியதால்  இயக்குநர்கள் தங்கள் கதைக்கான நாயகிகளைத் தேடி அலைய ஆரம்பித்தார்கள். கோயில், பள்ளி, கல்லூரி, பஸ் ஸ்டேண்ட் போன்ற இடங்கள் அவர்களின் தேடல் களமாக இருந்தன. எனினும் இந்த முறையில் ஹீரோயின்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தது. நடுத்தர வர்க்கத்து குடும்பப் பெண்கள் பலரும் சினிமாவில் நடிக்க அச்சப்படும் சூழலே அப்போதும் இருந்தது.

இந்த நேரத்தில் இயக்குநர்களுக்கு உதவ ஏற்பட்ட இனம்தான் மீடியேட்டர். இவர்கள் ஒவ்வொரு மொழியிலும் நடிக்கும் ஆர்வம் உள்ளவர்களின் புகைப்படங்கள், அவர்களைப் பற்றிய குறிப்புகளுடன் தயாராக இருந்தார்கள். இயக்குநர் எப்படிப்பட்ட நாயகிகளைத் தேடுகிறார்களோ அதற்குத் தகுந்த தகுதிகளைக் கொண்டிருந்த புகைப்படங்களைக் காட்டி நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

இதற்கு அடுத்த நிலை மாடலிங். ஒரு பெண் மாடலிங் துறையில் நுழைவதன் நோக்கமே பெரும்பாலும் சினிமாதான்.  நடிகையாகும் முயற்சியின் வழிமுறையில் ஒன்று மாடலிங்.  இந்தத் துறையில் ஹைலைட்டான விஷயம் அழகிப் போட்டிகள். இந்த அழகிப் போட்டி
களுக்கு பார்வையாளர்களாக  தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள் அழைக்கப்பட்டார்கள். அழகிப் போட்டியில் டைட்டில் வெல்கிறவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில் பெரிய பிரச்சினை இருக்காது.  இதைத் தொடர்ந்துதான் மும்பையில் இருந்து நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு அலை அலையாகப் படையெடுத்து வந்தார்கள்.

2000மாவது ஆண்டில் இருந்து திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள், நட்சத்திர இரவுகளில் புதிய நடிகைகள், மார்க்கெட் இழந்த நடிகைகள், வாய்ப்பின்றி தவிக்கும் நடிகைகள் விதவிதமான உடைகளில் வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வாய்ப்பு தேடினார்கள்.
ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்  மாதிரி நவீன சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் இப்போது  அதுவே வாய்ப்பு தேடும் களமாகவும் மாறிவிட்டது.

அறிமுகமாக  நினைக்கும் பெண்கள் டிக்டாக் மாதிரியான செயலிகளைப் பயன்படுத்தி அதில் தங்கள் பாடும் திறன், ஆடும் திறன், நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வாய்ப்பு தேடுகிறார்கள். அப்படி சமீபத்தில் வாய்ப்பு பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதே களத்தில்தான் வாய்ப்பு இல்லாத நடிகைகள், தங்களின் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்களின் கவனத்தை ஈர்த்து அதன் மூலம் வாய்ப்பு பெறுகிறார்கள்.

சினிமா  தொடங்கிய காலத்தில் இருந்து டிஜிட்டல் காலம் வரை  ஒரு பெண் சினிமாவில் நடிகையாக ஆக வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற அடிப்படை மட்டும் மாறவில்லை. வழிமுறைகள் மாறிக்கொண்டேதான் இருக்கினறன.

மீரான்